Monday, August 06, 2007

ஈழப்பயணம் - என் மனங்கவர் எட்டு-3

எட்டாம் வகுப்பு படிக்கும் முதலே தமிழர்களின் இனப்பிரச்சனையும், 1983 கருப்பு ஜூலை இனக்கலவரம், தமிழர் பிரச்சனையில் இந்திரா அம்மையார் ஆற்றிய பங்கு, பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த திரு.ஆர்.வெங்கட்ராமன் அவர்களது 'சித்து வேலைகள்', புலிகள் இயக்க தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன், இலங்கை அரச தலைவர் ஜெயவர்த்தனே, பிரேமதாசா போன்றவர்கள் என ஈழம் பற்றிய தகவல்கள் தெரிந்துகொண்டேன். 9ம் வகுப்பில் தமிழாசிரியர் மாணவர் மலருக்காக எழுத சொன்ன வேளை முதல் முதலாக எழுதிய கட்டுரை ஈழத்தமிழர் பிரச்சனை பற்றியது. அந்த காலகட்டத்தில் இராமேசுவரம் பகுதியில் மட்டும் அகதிகளாக தினமும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கரைசேர்ந்தனர். ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்தியா இன்னும் அதிகமான அழுத்தங்களை இலங்கைக்கு கொடுக்கவேண்டும் என்ற போது அதை தடுத்த அதிகாரமைய்யம் ஆர்.வெங்கட்ராமனை சுற்றி இயங்கியது. 12ம் வகுப்பு படிக்கும் போது ஈழத்தில் கடுமையான யுத்தம் நடந்துகொண்டிருந்தது. எனது பள்ளியில் ஆங்கில கவிதைப் போட்டியை முதல் முதலாக துவங்கினார்கள். போட்டி நேரத்தில் தான் கவிதைத் தலைப்பை தருவதாக கூறினார் ஆசிரியர். போட்டி நாளன்று ஆங்கிலக் கவிஞன் William Wordsworth எழுதிய "The Daffodils" என்னும் கவிதையிலிருந்து "I Wandered Lonely as a Cloud..." என்ற முதல் வரியை எடுத்து I Wandered Lonely as a Cloud among the fires and smokes of Eelam என முதல் வரியாக கவிதை எழுத சொன்னார். தொடர்ந்து 7 வரிகள் எழுதவேண்டும் என குறிப்பிட்ட நேரமும் ஒதுக்கப்பட்டு ஒரு தேர்வு போலவே நாடந்தது. ஒரு மேகம் போல கற்பனையாக பறந்தேன் என் நெஞ்சம் நிறைந்த ஈழத்திற்கு. எழுதிய கவிதையின் உணர்ச்சிமிகு வரிகள் முதல் பரிசை வாங்கியது (காலப்போக்கில் அந்த கவிதை தொலைந்து போனதும் சான்றிதழ் மட்டும் மிஞ்சியதும் வருத்தமானது). அந்த கற்பனை பயணத்திலிருந்து என்றாவது ஈழம் செல்லவேண்டும் என்ற கனவு உருவானது. தொடர்ந்து ஈழப்பிரச்சனை பற்றி தமிழகத்தில் நடந்த வெளிப்படையான சில போராட்டங்களில் பங்கெடுத்து வந்தேன்.

2002 தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கியமான ஆண்டு. கட்டுநாயகே சர்வதேச பயணியர் விமானநிலையத்தின் ஒரு பகுதியில் அமைந்த இராணுவ விமானதளத்தில் பல விமானங்கள் போராளிகளால் தாக்கி அழித்து இலங்கை பொருளாதாரம் ஆட்டம் கண்டிருந்தது. இதில் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த 'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்'க்கு சொந்தமான பல விமானங்களும் (பயணிகளுக்கு எந்த சேதமும் இல்லாமல்) அழிக்கப்பட்டிருந்தது. தமிழர் தரப்பின் இராணுவ பலம் எழுந்து நின்ற பலமான சூழலில் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன் யுத்தநிறுத்த ஒப்பந்தம் ஒன்றில் நார்வே தரப்பின் நடுநிலையுடன் கையெழுத்திட்டார். தொடர்ந்து இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதுவரை சுமார் 3 முறை பணி நிமித்தமாக இலங்கை சென்றிருந்தாலும் சிங்கள நண்பர்களுடன் கொழும்பு, நீர்க்கொழும்பு பகுதிகளில் மட்டும் தங்கியிருந்தேன்.

சமாதானத்திற்கான காலம் பிறந்த இந்த சூழலில் எனக்கு நெருக்கமான குடும்பத்தினர் அவர்களது விடுமுறையில் தங்களது சொந்த மண்ணிற்கு செல்ல திட்டமிட்டனர். நானும் வர ஆர்வமாக இருப்பதை அறிந்து என்னையும் சேர்த்துக்கொண்டனர். 2002 டிசம்பர் 10 கொழும்பு விமானநிலையத்தில் இறங்கிய போது வழக்கமான அளவு இராணுவ நிலைகளோ, இராணுவ துருப்புகளின் நடமாட்டமோ இல்லை. சிலநாட்கள் நீர்க்கொழும்பில் தங்கிய பின்னர் ஒரு அதிகாலை வேளை அந்த இனிய பயணம் துவங்கியது. காற்றை கிழித்து மரங்கள் அடர்ந்த சாலையில் காலை இருளில் அந்த வாகனம் செல்லும் போது காலத்தால் மறக்க முடியாத அளவு உணர்ச்சிகளின் சங்கமம் எனக்குள். வாகனத்தில் இருந்த உறவுகளின், கதைகளும், அனுபவங்களும், நினைவுகளும் தமிழ் ததும்ப என்னை குளிப்பாட்டியது.

A9 சாலை வழியாக சாவகச்சேரி, யாழ்ப்பாணம் செல்வது எங்களது பயணத்திட்டம். அகலம் குறைந்த அந்த சாலையில் ஏராளமான வாகனங்கள். இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தை கடந்து செல்லவேண்டிய எல்கை வந்தது. சோதனைச்சாவடியில் இராணுவ அதிகாரிகள் கடவுச்சீட்டு, கைப்பை, புகைப்படக்கருவி, பயணப்பெட்டி என அனைத்தையும் சோதனையிட்டனர். பதிவேட்டில் என்னைப் பற்றிய தகவல்களை எழுதிய பின்னர் போக அனுமதித்தனர். அதற்குள் எங்களது வாகனம் சோதனை முடித்திருந்தது.

அடுத்ததாக செஞ்சிலுவை சங்க முகாமை கடந்து புலிகள் கட்டுப்பாட்டு பகுதியில் நுளைந்தோம். 'தமிழீழம் உங்களை வரவேற்கிறது' என வரவேற்பு பலகை காணப்பட்டது. சோதனைச்சாவடியில் போராளிகள் சோதனையிட்டு கொண்டிருந்தார்கள். சின்ன கொட்டகைகளில் அவர்களது சோதனை அலுவல்கள் நடந்துகொண்டிருந்தன. வெளிநாட்டவர்களுக்கு என தனி குடிபெயர்வு பகுதி இருந்தது. அங்கே எனது கவடுச்சீட்டை கொடுக்க சென்றதும், இனிமையான வரவேற்பு, கடவுச்சீட்டை நீட்டினேன். 'இதெல்லாம் உங்கட கடவுச்சீட்டா என கேட்டார்' அந்த போராளி. காரணம் அப்போது ஏற்கனவே பக்கங்கள் முடிந்து போன கடவுச்சீட்டுகளும் சேர்த்து 3 கடவுச்சீட்டுகள் வைத்திருந்தேன். ஆம் என பதில் சொல்லவும். 'என்ன வேலை செய்கிறீர்கள்?', 'இந்தியாவில் எங்கே?'..... என வழக்கமான குடிபெயர்வு விசாரணைகள். தொடர்ந்து ஒரு இளம் போராளி விசாரித்தார். புலிகள் இயக்கம் நடைமுறையில் வைத்திருந்த குடிபெயர்வு விண்ணப்பம் பூர்த்தி செய்தேன். தமிழீழம் ஒரு நாடாக அங்கீகாரம் பெறாததால் கடவுச்சீட்டில் முத்திரை பதிப்பது தவிர அனைத்துவிதமான குடிபெயர்வு முறைகளும் நடைமுறையில் இருந்தது. பயணப்பொருட்கள் சோதனைக்கு பின்னர் தொடர்ந்து பயணம் செல்ல அனுமதி கிடைத்தது. இந்த நடவடிக்கைகள் புலிகளின் நடைமுறை அரசின் திறனையும், கட்டமைப்பையும் அந்த முதல் அனுபவமே சொல்லியது.

யுத்தம் நடத்திய பாதிப்புகள் தமிழீழ சாலையோரங்களின் இருப்பக்கமும் காணமுடிந்தது. தென்னந்தோப்புகளில் விழுந்த குண்டுகள் மரங்களை சிதைத்திருந்தன. கல்லூரிகள், கோவில்கள், வீடுகள் என தமிழர்களின் வாழ்விடங்கள், கலாச்சார அடையாளங்கள் குண்டுகளால் தகர்க்கப்பட்டிருந்தது. ஆனையிறவு இராணுவ முகாம் இருந்த பகுதியில் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்ட டாங்கி, சிதைந்த ஆயுதம் என போரின் அடையாளங்கள் மனதை வாட்டியது. வரும் வழியில் உறவுகளை கண்டு, உணவருந்திய பின்னர் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் யாழ்ப்பாணத்தில் வந்து சேர்ந்தோம்.

குறைந்த அளவு பொருட்களில் இயற்கையான வாழ்க்கையும், பழக இனியவர்களாகவே மக்கள் இருந்தனர். தமிழீழத்தின் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் சோகம் நிறைந்த கதை பல உண்டு. எல்லா உறவுகளையும் இராணுவத்தின் குண்டு வீச்சிற்கு இளந்து இன்னும் சோகத்தை மட்டும் சுமக்கும் ஒருவரை பார்த்தேன். அந்த சோகமயம் இன்னும் நெஞ்சை பிளிகிறது.

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் போரில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான போராளிகளின் கல்லறைகள் இருந்தது. முந்தைய கால யுத்தத்தில் மாவீரர்களின் கல்லறையை இலங்கை அரச படைகள் உடைத்தெறிந்ததாகவும், பின்னர் அவை புதுப்பிக்கப்பட்ட்டதாகவும் தகவல் கிடைத்தது. அந்த இடத்தில் இவ்வளவு உயிர்களையும் நினைக்கையில் கனமான மௌனம் மட்டுமே மனதில் மிஞ்சியது.

யாழ் கோட்டை, யாழ்ப்பாண நூலகம், யாழ்ப்பாண பல்கலைக்கழகம் என அனைத்து இடங்களிலும் தமிழர் வாழ்வின் வேதனைகளும், போராட்ட வரலாறும் இருப்பதை நேரடியாக உணர்ந்தேன். யுத்தம் இல்லாமல் இருந்திருந்தால் தமிழீழ மக்கள் வாழ்க்கை இனிப்பாக இருந்திருக்கும் என்ற ஏக்கம் மனதை குடைகிறது. இந்த பயணத்தின் போது சிறார் இல்லங்களுக்குச் சென்றோம். பெற்றோர், உறவினர்களை யுத்தத்தில் இழந்து அனாதைகளாக்கப்பட்ட குழந்தைகளை பார்த்த போது மனது கனமானது. அவர்களது வேதனையான சூழலிலும் தன்னம்பிக்கையுடன் வளர்வதை கண்டேன் (குருகுலம் என்னும் சிறார் இல்லம் பற்றிய முந்தைய பதிவை இங்கே படிக்கலாம் குருகுலம் சிறார் இல்லம்).

'இறைமை', 'தேசநலன்','தேசியம்' என்ற பெயரில் மக்களை கொன்று குவிக்கும் எந்த அரசும் பயங்கரவாத அரசு தான். மக்களின் வாழ்வும், உரிமையும் மறுக்கப்படும் போது தேசமும் இல்லை; அங்கு இறைமையும் இல்லை. இறைமை என்பது எல்லைக் கோடுகளால் மட்டுமே நிர்ணயிக்கப்படுவதல்ல.

கோடை வெயிலையே நம்மால் தாங்க இயலாது. சுமார் 23 வருடம் தொடர்ந்து நடக்கிற யுத்தத்தின் வலியையும், வேதனையையும் தமிழகத்தில்/அயலகத்தில் வாழும் நமக்கு புரியுமா? தமிழீழ பயணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களது வாழ்க்கை, கனவுகள், ஏக்கம், நம்பிக்கைகள் என அனைத்தும் என்னை தொட்டது!

----
மனதை கவர்ந்த எட்டு எழுத தோழி.பத்மா கேட்டிருப்பினும் இதுவரை 4 மட்டுமே பதிவு செய்திருக்கிறேன். இத்துடன் முடிப்பதற்கு மன்னித்துக் கொள்ளுங்கள் பத்மா!

இதுவரை மனதை கவர்ந்த எட்டு எழுத அழைக்கப்படாத நண்பர்கள் அனைவரையும் எழுத அழைக்கிறேன்.

6 பின்னூட்டங்கள்:

Anonymous said...

பாரட்டுவதை தவிர வேறு இப்போது எதுவும் செய்ய முடியாது. ஆனால் சற்றுப் பொறுங்கள் தமிழ் ஈழம் உருவாகிய பின்பு வாருங்கள். சுதந்திரக் காற்றை தன்மானத்துடன் சுவாசிக்கலாம்.

ஒரு ஈழத் தமிழன்

Anonymous said...

பாரட்டுவதை தவிர வேறு இப்போது எதுவும் செய்ய முடியாது. ஆனால் சற்றுப் பொறுங்கள் தமிழ் ஈழம் உருவாகிய பின்பு வாருங்கள். சுதந்திரக் காற்றை தன்மானத்துடன் சுவாசிக்கலாம்.

ஒரு ஈழத் தமிழன்

வெற்றி said...

திரு,
உங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.

Anonymous said...

உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கும் நாள் விரைவில் மலரும்.!
தமிழீழத்தைக் காண வாருங்கள்!!.


இலங்கை நண்பன்

Anonymous said...

உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கும் நாள் விரைவில் மலரும்.!
தமிழீழத்தைக் காண வாருங்கள்!!.


இலங்கை நண்பன்

Thangamani said...

உங்கள் எட்டுகளை இன்றுதான் படித்தேன். இன்னும் பயணம் தொடர என் அன்பான வாழ்த்துகள்!

நன்றி!

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com