Wednesday, August 01, 2007

திருவின் மனங்கவர்ந்த எட்டு -2

1995ல் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலைப்பொழுது வீட்டில் சமைப்பதற்கு அம்மாவிற்கு உதவியாக வேலை செய்துகொண்டிருந்தேன். அப்பாவும், தம்பியும் என்னை தவிர்த்துவிட்டு ஊருக்கு பொதுவான ஒற்றையடி பாதையை சீரமைக்க ஊர்க்காரர்களோடு சென்றிருந்தனர். நானும் சென்றிருந்தால் எதாவது வம்பு வந்துவிடும் என்பதாலோ என்னமோ எனக்கு வீட்டில் 'தடா' போட்டிருந்தனர். திடீரென ஒரு உறவினர் வந்த சத்தமாக என்னை அழைத்தார். வீட்டை விட்டு வெளியே வந்து பார்க்கவும் 'லேய்! ஒனக்கு வீட்டுக்கு கரண்ட் எடுக்க என்னோட சொத்து தான் கிடைச்சிதா? நான் சாவுற வரை நீ இனி கரண்ட் எடுக்க மாட்டலே பாரு!' என வந்து விழுந்தது குரல். குரல் கொடுத்தவர் உறவு முறையில் சித்தப்பா. நான் சம்பந்தப்படாவிட்டாலும் எதிர்ப்பாளர்களின் தலைவர் நம்மை தான் தேடி வருகிறார் என்ன செய்வது என சில நிமிடம் புரியவில்லை. அம்மாவிடம் சொல்லிவிட்டு பாதை சீரமைக்கும் கூட்டத்தில் நானும் சேர்ந்துகொண்டேன். சுமார் 100 வருடங்களாக பொதுப்பாதையாக இருந்து வரும் பகுதி அது. அந்த பாதையின் ஒரு குறுகிய நிலப்பகுதி மட்டும் பொதுவானதல்ல, யாரும் அந்த தடுப்பதும் இல்லை. ஏறக்குறைய 10 குடும்பத்தினர் 40 வருடங்களாக மின்சாரம் எட்டுக்கவும், பொதுவான ஒரு நடைபாதை மட்டும் அமைக்கவும் எடுத்த முயற்சிகளை கரம் உயர்ந்தவர்கள் தடுத்து வந்திருந்தனர். இதற்கு அந்த மக்களின் மனநிலை தான் முக்கிய காரணம். குறிப்பாக 'எனது சொத்தில் யாரும் நடக்க கூடாது, எனது வீட்டிற்கு மட்டும் மின்சாரம் வந்தால் போதும் அடுத்த வீட்டிற்கு மின்சாரமோ, பாதையோ செல்லக்கூடாது.' 'எங்கள் முற்றம் வழி யாராவது நடக்கிறதை நாம பார்த்திருக்க முடியுமா?'.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதை பிரச்சனைகள் ஏராளம். அதன் பின்னால் நிலவுடமை, சாதி, ஒற்றுமையின்மை, குடும்ப பகை என பல காரணங்கள் உண்டு. இப்படிப்பட்ட நிலையை தகர்க்க தானாகவே ஊர்மக்கள் எடுத்த சிறிய அளவிலான முயற்சியே இந்த பாதை திருத்தும் முயற்சி. அன்றைய வேலை சுமுகமாக வன்முறைகளில்லாமல் முடிந்தது. மாலையில் வழக்கமாக சந்திக்கும் நண்பர்களுடன் அரசியல் பேசிக்கொண்டிருந்த போது பக்கத்து வீட்டை சார்ந்த சிறுவன் மூச்சிரைக்க ஒடி வந்தான். 'அண்ணா! சீக்கிரம் வீட்டுக்கு வரணுமாம். எல்லாரும் உங்களை தேடி இருக்காங்க. போலீஸ் வந்து போச்சு. உங்க பேரு தான் முதல் பேரு.' என கொட்டித் தீர்த்தான். நான் திகைத்து நின்றேன் சில நிமிடம்.

குடும்பத்திலிருந்து அதுவரை ஊதியமில்லா ஆசிரியர் போராட்டத்தில் அக்கா சுமார் 22 நாட்கள் சிறையில் இருந்திருந்தார். சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் தோட்டத் தொழிலாளர் போராட்டத்தில் அப்பா 2 நாட்கள் சிறையில் இருந்தார். சில போராட்டங்களுக்கு அனுமதி வாங்க காவல் நிலையம் சென்றதும், சில காவலர்கள் நண்பர்களாக அமைந்ததும் தவிர எனக்கும் காவல் நிலையத்திற்கும் தொடர்பு இருக்கவில்லை. இதையெல்லாம் மனதில் நினைத்தபடி வீடு வந்து சேர்ந்தால் ஊரே எனக்காக காத்திருந்தது. தொடர்ந்து ஆலோசனை கூட்டங்கள் வீடுகளில் இரவு வேளைகளில் கூட்டப்பட்டது. பகல் வேளைகளில் காவல்த்துறை அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், பேரூராட்சி, கிராம அலுவலகங்கள் என புகார் மனுக்கள், ஆதாரங்கள் மற்றும் வரைபடம் திரட்டுதல் என பகல் வேளைகள் கழிந்தன. அந்த பகுதியின் முழு வரைபடமும் திரட்டி ஆதாரங்களை ஒன்று குவித்து மனுக்கள் அனுப்ப பலர் உதவினர். எதிர்ப்பாளர்கள் வீடுகளில் அடியாட்களுடன் வந்தி மிரட்டுவதும், வீட்டைச்சுற்றி முள்வெலி அமைப்பதும் என தொடர்ந்தது. இரு தரப்பிலிருந்தும் காவல்த்துறையில் மனுக்கள் குவிந்தன. எதிர்தரப்பிற்கு ஆதரவாக அப்போதைய வனத்துறை அமைச்சரே நேரடியாக தலையிட்டார். தலைமைக் கண்காணிப்பாளராக இருந்த காவல் அதிகாரி எங்களது நியாயத்தை உணர்ந்ததால் அழுத்தத்திற்கு பணியவில்லை. இந்த நடவடிக்கைகளில் சூமார் 10 மணிநேரம் காவல்நிலையத்தில் எந்த வழக்கும் இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்தேன். காவலர்களில் பலர் எதிர்தரப்பிலிருந்து பணம் வாங்கிய விசுவவதத்திற்காக பேசிய அநாகரீக வசைமொழிகள், மிரட்டலில் அந்த 10 மணிநேரம் கழிந்து வெளியே வந்த போது மனித உரிமையின் மகத்துவம் புரிந்தது. தொடர்ந்த நிர்வாக ரீதியான நடவடிக்கைக்கு பின்னர் இன்று அனனத்து வீடுகளிலும் மின்சாரம், சுமார் 15 அடி அகலமுள்ள பேரூராட்சி சாலை, தொலைபேசி வசதி என கிடைத்திருக்கிறது. அந்த போராட்ட அனுபவங்களின் விளைவாக அந்த பகுதியிலிருந்து 2 பெண்கள் பேரூராட்சி உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். விடுமுறைக்கு செல்லும் போதெல்லாம் இரவு நேரங்களில் அந்த சாலையில் நடந்து செல்வது நினைவுகளை மீட்டுவது மட்டுமல்ல நான் கடந்து வந்த பாதையை மனதில் வைத்திருக்க உதவுகிறது...

*******
மனதை கவர்ந்த பல இருந்தாலும் நேரமின்மையால் இன்னும் ஒரு நினைவை பகிர்ந்துகொள்வேன். அது எனது தமிழீழப் பயணம் பற்றியது.

2 பின்னூட்டங்கள்:

பத்மா அர்விந்த் said...

//அந்த 10 மணிநேரம் கழிந்து வெளியே வந்த போது மனித உரிமையின் மகத்துவம் புரிந்தது// சரியான வார்த்தைகள். ஒரே நாள் சிறையில் இருந்தாலும் போதும், சுதந்திரத்தின் அருமையை புரிந்துகொள்ளலாம். மிக்க நன்றி திரு

தென்றல் said...

/...இரவு நேரங்களில் அந்த சாலையில் நடந்து செல்வது நினைவுகளை மீட்டுவது மட்டுமல்ல நான் கடந்து வந்த பாதையை மனதில் வைத்திருக்க உதவுகிறது.../

...ம்ம்! அனுபவங்களை பகிர்தமைக்கு நன்றி!

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com