Sunday, May 08, 2011

வன்னியில் நடத்தப்பட்டது இனப்படுகொலை!

வன்னியில் 2009ல் இறுதி தாக்குதல்களில் சுமார் 40,000 தமிழ்மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், 3 லட்சம் மக்கள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்,  மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் நடத்தப்பட்டுள்ளன, தமிழ்மக்கள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கும், துன்புறுத்தலுக்கும் ஆளாகியுள்ளனர், விடுதலைப்புலிகளாக சந்தேகப்படுபவர்கள் இரகசிய முகாம்களில் பல ஆண்டுகள் அடைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்படுகின்றனர், அவர்களில் பலர் படுகொலைக்கும், காணாமல் போகவும் செய்யப்பட்டுள்ளனர் என்று கொடூரமான மனித உரிமைக் குற்றங்களை உறுதிப்படுத்துகிறது ஐ.நா பொதுச்செயலாளரின் வல்லுநர் குழுவின் அறிக்கை. கடந்த இரண்டு ஆண்டுகளாக மனித உரிமை அமைப்புகளும், தமிழ் மக்களும் இக்குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். ஆனாலும், ஐ.நா வல்லுநர் குழு அறிக்கை அக்குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக வலிமை சேர்க்கிறது. அவற்றை மனித குலத்திற்கு எதிரான குற்றங்களாகவும், போர்க்குற்றங்களாகவும் அடையாளப்படுத்தியுள்ளது.
 
ஆனால், தமிழர்கள் மீது இலங்கை அரசு திட்டமிட்டு நடத்திய விமானகுண்டு தாக்குதல்கள், கொத்துக்குண்டு தாக்குதல்கள், எறிகணை படுகொலைகள், சித்திரவதைகள், காணாமல் போகவைத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் சித்திரவதைகள் ஆகிய அனைத்தையும் சர்வதேச இனப்படுகொலை தடுப்பு மற்றும் தண்டனைச் சட்டத்தின் அடிப்படையில், இனப்படுகொலையாக அடையாளப்படுத்த தவறியுள்ளது அல்லது மறைக்கிறது இவ்வறிக்கை. ஐ.நா அறிக்கையை வெளியிடுவதால் தானாக விசாரணை நடத்தப்படுமென்று புரிந்துகொள்ள கூடாது. அவ்வாறு கருதினால் ஏமாற்றமே மிஞ்சும். ஆனால், இவ்வறிக்கை இனப்படுகொலை குற்றம் மற்றும் போர்க்குற்றங்களை சர்வதேச அளவில் மக்கள் மன்றங்கள், மற்ற நாடுகளின் அரசுகள், நாடுகளின் தூதுவர்கள், பல்கலைக்கழகங்கள், அமைப்புகளின் ஆதரவை திரட்டி, சர்வதேச அளவில் விசாரணையை நடத்த அழுத்தம் உருவாக்க உதவியாக இருக்கும். தமிழ்மக்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும், இளைஞர்களும், மாணவர்களும், சட்டவல்லுநர்களும் அதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டும். 
 
வன்னியில் நடத்தப்பட்டது போர்க்குற்றம் மட்டுமல்ல, அப்பட்டமான இனப்படுகொலை குற்றம். வன்னிப்படுகொலைகளை இனப்படுகொலையாக அறிவிக்க முயற்சிகள் தொடரவேண்டும்.
 
ஐ,நா அறிக்கை புலிகள் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள்:
  1.  மக்களை பாதுகாப்பு அரணாக பயன்படுத்தியது.
  2. புலிகள் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து வெளியேற முயற்சித்தவர்களை சுட்டு கொலை செய்தது.
  3. மக்களுக்கு அருகே கனரக இராணுவ ஆயுதங்களை பயன்படுத்தியது. 
  4. குழந்தைகளை கட்டாயமாக படையில் சேர்த்தது. 
  5. மக்களை கட்டாய வேலை வாங்கியது.
  6. தற்கொலை தாக்குதல்களில் மக்களை கொலை செய்தது. 
புலிகள் போர்க்குற்றங்கள் செய்திருப்பதாக ஜெனிவா சட்டங்கள் அடிப்படையில் இவ்வறிக்கை குறிப்பிடுகிறது. வன்னி இனப்படுகொலையின் போது, அரசு தரப்பு குற்றங்களை மறைப்பதற்காக, தமிழ்மக்களை அரசின் பக்கமாக திருப்புவதற்காக தந்திரமான சூழலை உருவாக்கி புலிகள் மீது சில குற்றச்சாட்டுகளை வைத்ததாக சில குற்றச்சாட்டுகள் பலராலும் மறுப்பிற்கும், சந்தேகத்திற்கும் இடமாகியுள்ளன. தென்னிலங்கையில் அமைச்சர்கள், அதிகாரிகள் சிலர் மீதான குண்டுதாக்குதல் அனைத்தையும் புலிகள் மீது அரசு குற்றம் சுமத்திய போதும், ஐ.நா அறிக்கையில் அவற்றின் உண்மைநிலை குறித்த சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. இவற்றில், பாரபட்சமற்ற சர்வதேச விசாரணை உருவாகிற போது புலிகள் மீதான குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை தெளிவாகும். அப்படியான சர்வதேச விசாரணையில் புலிகளின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதனால் உண்மை வெளிப்படுவது மட்டுமல்ல; அவற்றிற்கான பரிகாரங்களையும், நிவாரணங்களையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெற்றுத்தரவும் உதவும். 

ஐ,நா அறிக்கை இலங்கை அரசு மீது சுமத்தியுள்ள கடுமையான குற்றச்சாட்டுகள் 5 விதமானவை:
  1. பாதுகாப்பு வளையத்தில் மக்களை பெரும்தொகையாக வரவளைத்து, மக்கள் அப்பகுதியில் இருப்பதை வேவு விமானங்கள் மற்றும் உளவுத்தகவல், ஐ.நா அமைப்பு மற்றும் செஞ்சிலுவை சங்கம் மூலம் அறிந்த பிறகும் திட்டமிட்டு அப்பகுதிகளில் ஏராளம் கனரக ஆயுதங்கள் மற்றும் பல்முனை எறிகணைகளை மக்கள் மீது வீசி பெரும் எண்ணிக்கையில் மக்களை படுகொலை செய்தது. அதனால் இறுதி கட்டத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டனர். அழுத்தங்களிலிருந்து தப்பிப்பதற்காக சர்வதேச அமைப்புகளை மோதல் பகுதிகளில் அரசு அனுமதிக்கவில்லை.
  2. அடையாளம் மிகதெளிவாக அறிந்த பிறகும், வன்னியிலுள்ள அனைத்து மருத்துவமனைகளையும் திட்டமிட்டு குண்டுவீசி அரசு தாக்கியது. ஏற்கனவே காயங்களுக்குள்ளான மக்கள் மருத்துவமனை குண்டுவீச்சுக்களில் மீண்டும் தாக்குதலுக்குள்ளாகி கொல்லப்பட்டனர். 
  3. மோதல் பகுதிகளில் தங்கியிருந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, அடிப்படை மருந்து பொருட்கள், குறிப்பாக காயங்களுக்கு மருத்துவம் செய்வதற்கு அத்தியாவசியமான மருத்துவப் பொருட்கள் கொண்டுசெல்ல அனுமதிக்காமல் மிகதெளிவாக திட்டமிட்டு அரசு தடுத்தது. அதோடு, வன்னியில் இருந்த மக்களின் எண்ணிக்கையை வேண்டுமென்றெ திட்டமிட்டு குறைத்து மதிப்பிட்டு வெளியிட்டது.
  4. அரசு (இராணுவ) நடவடிக்கையை 'மனிதாபிமான மீட்பு நடவடிக்கை' என்று சித்தரித்த போதிலும், மோதல் பகுதிகளிலிருந்து வெளியேறிய மக்களை மீண்டும் கடுமையான இழப்பிற்கும், துன்பங்களுக்கும் ஆளாக்கியது. அதனால் தேவையில்லாமல் கணக்கற்ற மக்கள் கொல்லப்பட்டனர். உள்நாட்டில் புலம்பெயர்ந்த மக்களை முகாம்களில் அடைத்து வைத்து, மீண்டும் அலைக்கழிப்பிற்கும், சுரண்டலுக்கும் ஆளாக்கியது. விடுதலைப்புலிகளாக சந்தேகப்பட்டவர்களை ஆய்வு செய்வதில் எவ்வித வெளிப்படைதன்மையும் கடைபிடிக்கவில்லை. அவர்களில் பலர் கொல்லப்பட்டனர், பலர் காணாமல் போயுள்ளனர். பெண் போராளிகளின் உடைகளை அகற்றியுள்ள அசைபடங்கள் மற்றும் ஒளிப்படங்களிலிருந்து பாலியல் சித்திரவதைகளும், பாலியல் வன்கொடுமையும் நடந்துள்ளது தெரிகிறது. விசாரணையின் போது சித்திரவதைகள் தொடர்ந்து நடைபெறுகிறது. அவர்களை செஞ்சிலுவை சங்கம், இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அல்லது மற்ற அமைப்புகளின் சோதனை அல்லது தொடர்புகளுக்கு இடமளிக்காமல் பல ஆண்டுகளாக தனிமுகாம்களில் அடைத்து வைத்துள்ளது.
  5. அரசோடு முரண்படும் ஊடகங்களையும், கண்டனம் தெரிவிப்பவர்களையும் கடத்துதல், 'வெள்ளைவேன்' அனுப்பி கடத்துதல், காணாமல் போக வைத்தல்  மற்றும் கொலைமிரட்டல் உள்ளிட்ட பலவகை மிரட்டல் வழிகளை பயன்படுத்தி அவர்களின் குரல்களை அரசு அடக்குகிறது.
இலங்கை அரசு சர்வதேச மனிதாபிமான, மனித உரிமை சட்டங்களை கண்மூடித்தனமாக மீறியுள்ளது. சர்வதேச சட்டங்களில் இறையாண்மை உட்பட எந்த காரணத்திற்காகவும் பாரபட்சமற்றமுறையில் மக்கள் குடியிருப்புகளில் விமானகுண்டுகள், எறிகணைகள், கொத்துக்குண்டுகள் வீச அனுமதியில்லை. இலங்கையில் தமிழ்மக்கள் வாழுகின்ற பகுதிகளில் மட்டும் அத்தகைய பாரபட்சமற்ற தாக்குதல்களை நடத்தி, கட்டாயமாக வெளியேற வைத்து, குண்டுவீசக்கூடாத மருத்துவமனைகள், பாதுகாப்பான பகுதிகளில் மக்கள் இருப்பது அறிந்தும் மரணத்திலிருந்த மக்களை துரத்தி, துரத்தி மரணம் வரையில் வேட்டையாடி கொலை செய்தது இலங்கை அரசு. உள்நாட்டு சட்டங்கள் மற்றும் சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் மக்களை பாதுகாக்க கடமையுள்ள இலங்கை அரசு செய்தது போர்க்குற்றம் மட்டுமல்ல. அப்பட்டமான இனப்படுகொலை!  
 
தயங்குகிற ஐ.நா, தடுக்கிற இந்தியா!
இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்களை இலங்கை அரசு செய்திருந்தும் ஐ.நா மனித உரிமை பேரவையில் 2009ல் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக நின்று நடவடிக்கை உருவாகாமல் காப்பாற்றியது மட்டுமல்லாமல், தனது செல்வாக்கை பயன்படுத்தி மற்ற நாடுகளின் ஆதரவை திரட்டி பாராட்டு தீர்மானம் நிறைவேற்றியது. இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை தாக்குதல்கள் இந்திய அரசின் ஆதரவு, ஆலோசனை, இராணுவ பயிற்சிகள், தொழில்நுட்ப உதவி, ஆயுதங்கள், பணம் மற்றும் ராசாங்க நடவடிக்கைகள் மூலம் உலகத்தின் பார்வையையும், நடவடிக்கையையும் முடக்கி நடத்தப்பட்டது. அதற்கான தெளிவான ஆதாரங்கள் பல வெளியாகியுள்ளன. வெள்ளைக்கொடியுடன் புலிகளின் முக்கிய தளபதிகள் சரணடைந்து, கொல்லப்பட்ட குற்றங்களில், சரணடைவதற்கான ஏற்பாடுகள் ஐ.நா பொதுச்செயலாளரின் அலுவலகத்தில் உயர் அதிகாரியான இந்தியர் விஜய் நம்பியாருக்கு பல மணி நேரங்களுக்கு முன்பு புலிகளிடமிருந்து நேரடியாக அறிவிக்கப்பட்டிருந்தது. விஜய் நம்பியார் அறிந்து நடைபெற்ற இக்குற்றங்களின் விஜய்நம்பியாரின் பொறுப்பு குறித்து விசாரணை வேண்டும். வன்னிப்படுகொலையின் போது கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கையை கணக்கெடுத்த போதும் ஐ.நா அவற்றை வெளியிடாமல் மறைத்தது. அதன் மூலம் இலங்கை அரசுக்கு அழுத்தங்கள் ஐ.நா பாதுகாப்பு சபை மூலம் உருவாகாமல் தடுத்தது. இதிலும், விஜய் நம்பியாருக்கு முக்கிய பங்குண்டு, பான் கி மூன் நடவடிக்கையும் எவ்விதத்திலும் வெளிப்படையாக இல்லை. ஐ.நா நடவடிக்கை இனப்படுகொலை, போர்க்குற்றங்களுக்கு துணையாக இருந்துள்ளதை ஐ.நா அதிகாரிகள் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் தெரிவிக்கின்றனர். ஐ.நாவிற்கு அழுத்தங்களை உருவாக்கிய விசயத்தில் இந்தியாவே தலைமை பங்காற்றியது. இந்த நிலையில் இந்தியா நிரந்தரமற்ற உறுப்பினராக ஐ.நா பாதுகாப்பு சபையில் இடம்பெற்றுள்ளது. இனப்படுகொலை, போர்க்குற்ற விசாரணை கோருகிற அதே வேளையில் இனப்படுகொலையில் இந்தியாவின் பங்கையும், இனப்படுகொலையாளர்களை இந்தியா பாதுகாப்பதையும் ஊடகங்கள், சமூக ஊடகங்கள் வழியாக வெளிப்படுத்துவது அவசியமானது. 
 
யார் விசாரணையை நடத்துவது? 
ஐ.நா அறிக்கையிலும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகளிலும் குற்றவாளியாக நிறுத்தப்பட்டுள்ள இலங்கை அரசு அத்தகைய விசாரணையை நடத்துமா? அதற்கான தகுதியும், முகாந்திரமும் இலங்கையில் உள்ளதா? இக்கேள்விகளுக்கு ஐ.நா வல்லுநர் குழு அறிக்கையில் அதற்கான பதில்களும் உள்ளன. 
 
இலங்கை அரசிடமிருந்து, நீதியை, சமாதானத்தை எதிர்பார்ப்பது சாத்தியமானதல்ல. இலங்கை அரசு நியமித்துள்ள கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (டுடுசுஊ) சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் உருவாக்கும் என்கிற பிரச்சாரம் போலியான கானல்நீர். வாகனத்தில் செல்லும் போது கானல்நீரை தேடி பயணம் போனாலும் தாகத்திற்கு பருகமுடியாது, காரணம் அது தண்ணீரல்ல, தண்ணீர் போன்ற போலியான ஒரு தோற்றம் மட்டுமே. 'இக்குழுவின் எண்ணமும், செயல்பாடும் குறைபாடுடையது. சர்வதேச தரத்திலான சுதந்திரதன்மை, பாரபட்சமின்மை, சாட்சிகளை நடத்துகிற விதம், சாட்சிகளுக்கான பாதுகாப்பு ஆகிய செயல்களில் குறையுள்ளது.'  என்கிறது ஐ.நா வல்லுநர் குழு அறிக்கை. ஏற்கனவே, பலமுறை சர்வதேச தலையீடுகளை தடுப்பதற்காக இலங்கை அரசு பலமுறை விசாரணைக் குழுக்களை நியமித்த நாடகங்கள் நடந்துள்ளன. அவைகளினால் மக்களுக்கு உண்மை நிலையும், நீதியும், பரிகாரமும், நிவாரணமும் கிடைக்கவுமில்லை. இலங்கையின் நீதிபரிபாலனை அமைப்பும் சுதந்திரமான, பாரபட்சமற்ற நீதி வழங்க முடியாத அளவு தோல்வியுற்றிருக்கிறது. இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கும் அதற்கான வலு இல்லை. குறைந்தபட்சம் இறந்தவர்களுக்கான சான்றிதழ்களை அவர்களது உறவினர்களுக்கு வழங்காமல் இழுத்தடிக்கப்படுகிறது. இவற்றை ஐ.நா குழு அறிக்கை தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது. இப்படி சட்டத்தின் ஆளுகை தோல்வியடைந்துள்ள நிலையில், இலங்கையில் பாரபட்டமற்ற முறையில், சுதந்திரமாக, சர்வதேச சட்டங்களுக்குட்பட்டு இனப்படுகொலை, போர்க்குற்ற விசாரணை நடைபெற எந்த சாத்தியமும் இல்லை. 'அரசாங்கத்தின் பொறுப்பேற்பு குறித்த எண்ணம் சர்வதேச சட்டங்களுக்கு ஒத்துப்போக கூடியதல்ல', என்று மிக தெளிவாக ஐ.நா வல்லுநர் குழு தெளிவாக குறிப்பிடுகிறது. இதிலிருந்து இலங்கை அரசு முறையான விசாரணையை நடத்தும் சாத்தியம் எதுவுமில்லை என்பதை ஐ.நா வல்லுநர் குழு அறிக்கையே வெளிப்படுத்துகிறது.
 
இந்த நிலையில், இவ்வறிக்கையை வெளியிட்டு பேசியுள்ள ஐ.நா பொதுச்செயலர் பான் கி மூன் இலங்கை அரசின் ஒப்புதல் அல்லது உறுப்பு நாடுகளின் கோரிக்கை அவசியமென்று குறிப்பிட்டிருக்கிறார். இலங்கை அரசிடம் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களை விசாரிக்க கோருவது அப்பட்டமான ஏமாற்று நாடகம். 
 
சர்வதேச விசாரணை ஏன் அவசியம்?
இத்தகைய கொடூரமான குற்றங்கள் இனிமேலும் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும். மக்கள் மீது நடத்திய குண்டுதாக்குதல்கள், படுகொலைகள், சித்திரவதைகள், காணாமல் போனவர்களின் நிலை, பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் சித்திரவதைகள் உட்பட்ட அனைத்து இனப்படுகொலை குற்றங்களும் வெளிப்படையாக விசாரிக்கப்பட வேண்டும். அவற்றின் பின்னணி, குற்றத்தை ஏவியவர்கள், துணைபுரிந்தவர்கள், ஆயுதம் மற்றும் ஆலோசனை வழங்கியவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும். அதற்கான பரிகாரங்களும், நீதியும், நிவாரணங்களும், குற்றவாளிகளுக்கு கடும்தண்டனைகளும் வழங்கப்பட வேண்டும். நிரந்தரமான சமாதானத்திற்கும், நல்லிணக்கத்திற்கும் இது அடிப்படையானவை. தமிழ் மக்களுக்கான அரசியல், சமூக, பொருளாதார உரிமைகளுக்கான சாத்தியப்பாடுகளும் இனப்படுகொலை, போர்க்குற்ற விசாரணையில் உள்ளது. சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்டங்கள் பாரபட்சமற்றவை. சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்படுமானால் சுதந்திரமாக, எவ்வித அச்சுறுத்தலும் இல்லாமல் பாதிக்கப்பட்ட மக்கள் சாட்சியம் அளிக்க முடியும். எனவே தான், மனித உரிமைகள் மீதான அக்கறையுள்ள அனைவரும் வன்னி இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களை பாரபட்சமற்ற சர்வதேச விசாரணை நடத்த வேண்டுகின்றனர். சர்வதேச விசாரணைக்கான போராட்டங்களையும், முயற்சிகளை தொய்வில்லாமல் தொடர வேண்டும்!

Tuesday, November 09, 2010

மாமிசத்தை புசித்து இரத்தத்தை பருகுபவன்


ஆதிநகரக் குடிகளை
நவபாணங்களில்
எரித்துக் கொன்ற
இந்திரனுக்காக
நகர்களும்
தேர்களும்,
தெருக்களும்,
மாடங்களும், மரங்களும்
நவீனம் பூசிக்கொண்டன.

அவன் வருகைக்காக
மண்டையோடுகளும்
எலும்புத் துண்டுகளும்
கோர்த்து
நவசாமிகள் மந்தரித்த
மாலையுடன்
காத்திருந்த இவனோ
முன்பிருந்து
காடுகளில்
நகர்களில்
நாடுகளில்
ஆதிக்குடிகளை
வேட்டையாடி
அகதிகளாக்கி கொன்ற
இந்திரனின் பிள்ளை.

அவன்
"வறுமையையும், நோயையும்
விரட்டுகிற வல்லமை
உனக்குள்ளது" என்றான்.
இவன் விரட்டியடிப்பதில்
வல்லவன் தான்.

நகரங்களின் தெருக்களில்
விரட்டியடிக்கப்பட்ட பிச்சைக்காரர்களும்
இடிந்த கட்டிட வனாந்தரங்களில்
அநாதரவாக அடைக்கப்பட்ட
பெண்களும், பசிக்கு அழுத குழந்தைகளும்
காடுகளுக்குள் சுட்டு கழிகளில்
இவன் கட்டியிழுத்த
ஆதிக்குடி மக்களும்
கிழக்கு தீவில்
இவனது பாணங்களால்
எரிக்கப்பட்ட ஆதிநிலமும்
இவனது வல்லமையின்
அடையாளங்கள்.

எசமானைப் போன்று
வறியவர்களை
நோயாளிகளை
குழந்தைகளை
எளியவர்களை
கொன்று
மாமிசத்தை புசித்து
இரத்தத்தை பருகுபவன் இவன்.

Sunday, August 01, 2010

அருந்ததிராய் உரை: வெற்றி மக்களுக்கே!

கீற்று இணையத்தளத்தில் வெளியாகியிருக்கும் அருந்ததிராயின் உரை தண்டகாரண்ய காட்டில் கார்ப்பரேட் இந்தியப் பேரரசு  நடத்தி வருகிற அழித்தொழிப்பு, படுகொலை அரசியலை பதிவு செய்கிறது. சனநாயகம், மக்களின் உரிமைகள் மீது அக்கறையுள்ள அனைவரும் வாசிக்க வேண்டியது. நன்றி: கீற்று.காம் 
 
கீழே அருந்ததிராய் பேசுகிறார்.
-----
(சென்னையில் 2010 சூன் 4ஆம் நாள் உள்நாட்டு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு நடத்திய அரங்கக் கூட்டத்தில் எழுத்தாளர் அருந்ததிராய் ஆற்றிய உரையின் தமிழாக்கம்) தொகுப்பு : வேல்முருகன்
 
அனைவருக்கும் வணக்கம். இங்கு உங்கள் முன் நிற்பதைப் பெருமையாகக் கருதுகிறேன். இவ்வளவு பெரிய கூட்டத்தை நான் எதிர்பார்க்கவில்லை. உங்களுக்குத் தெரிந்ததுதான், நான் எழுத்தாளரே தவிர, பேச்சாளர் அல்ல. ஆகவே, என் பேச்சில் குற்றங்குறைகள் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன்.
எடுத்த எடுப்பில் நாம் கருத்தளவில் சிலவற்றைத் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். ஊடகங்கள், உள்துறை அமைச்சர், இந்திய அரசு ஆகியோர் நாட்டில் அமைதியின்மை நிலவுவதாகவும், அமைதியை மீட்கவும் நடுத்தர வர்க்கத்தினரையும் அமைதி விரும்புவோரையும் சாமானிய கிராமப்புற மக்களையும் பாதுகாக்கவும் வேண்டுமானால் போர் தொடுக்கவும் பாதுகாப்புப் படைகளை ஈடுபடுத்தவும் வேண்டிய தேவை இருப்பதாகக் கூறி வருகிறார்கள். இராணுவத்தை அழைத்தாக வேண்டும் என்று பேசப்படுவதை நேற்றைய செய்தியேடுகளில் படித்திருப்பீர்கள். நேர்மாறானதே உண்மை. அரசுக்குத்தான் போர் தேவைப்படுகிறது, அவசரமாகத் தேவைப்படுகிறது. அரசாங்கம் என்பதே இல்லாமற் போய்விட்டது. இப்போதிருப்பது ஒரு பெருங்குழும அரசுதான். இந்தப் பெருங்குழும அரசுக்குப் போர் தேவைப்படுகிறது; அவசரமாகத் தேவைப்படுகிறது.
மாவோயிஸ்டுகள் 
2004ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொறுப்பேற்றவுடனே பிரதமர் முதலில் வெளியிட்ட கருத்துகளில் ஒன்று மாவோயிஸ்டுகள்தான் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று; உண்மையில், அவர் அப்படிப் பேசிய நேரத்தில் ஆந்திரப் பிரதேசத்தில் மாவோயிஸ்டுகள் அநேகமாய் அடியோடு துடைத்தெறியப்பட்டிருந்தார்கள். அவர்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை இழந்து அம்மாநிலத்தை விட்டுத் துரத்தப் பட்டிருந்தார்கள். மாவோயிஸ்டுகள் அநேகமாய்த் தம் வரலாற்றிலேயே மிகவும் தாழ்வுற்றிருந்தார்கள்.

ஆனால், பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்ட உடனே சுரங்கக் குழுமங்களின் பங்கு விலை திடீரென்று உயர்ந்தது. அவர்கள் பங்குச் சந்தையிலே பெருத்த இலாபம் ஈட்டினார்கள். ஏனென்றால் அந்தப் பகுதிகளில் ஏதோ நடக்கப் போகிறது என்பதற்கான அறிகுறியாக அதைக் கருதினார்கள். சில மாதங்களுக்குள் 2005-06 வாக்கில் நூற்றுக்கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. பெரிய சுரங்கக் குழுமங்களோடும், பெரிய அகக் கட்டமைப்புக் குழுமங்களோடும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. 

சல்வா ஜுடும் 
பஸ்தாரில், டாடா, எஸ்ஸார் குழுமங்களோடு ஒருங்கிணைந்த உருக்கு தயாரிப்பதற்காகப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிச் சில வாரங்களுக் குள்ளேயே ஒரு செய்தி வந்தது. நக்கலைட்டுகள் குறித்துச் சலிப்புற்ற பழங்குடி மக்கள் ஒன்று சேர்ந்து சல்வா ஜுடும் என்கிற தன்னெழுச்சிப் படையை அமைத்திருப்பதாக அந்தச் செய்தி கூறியது. சல்வா ஜுடும் என்பதை அமைதி வேட்டை என்றோ, தூய்மை வேட்டை என்றோ மொழி பெயர்க்கலாம். முதலில் பலரும் இந்தக் கதையை நம்பிவிட்டனர். இவர்களுக்கு அரசே ஆயுதம் கொடுக்கும் செய்தி வெளியான பிறகுதான் உண்மை வெளிவந்தது. இந்த சல்வா ஜுடும் படைக்கு டாடா, எஸ்ஸார் குழுமங்கள் நிதியுதவி செய்வதாக இந்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை அறிக்கையே தெரிவித்தது. பிறகு இந்த அறிக்கை திரும்பப் பெறப்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுச் சில வாரங்களுக்குள் சல்வா ஜுடும் பற்றி நாம் கேள்விப்பட்டோம்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் பாதுகாப்பதற்காகத்தான் சல்வா ஜுடும் ஊர் ஊராகச் சென்றது. அடிப்படையில் அதன் பணி என்பது மக்களைக் கிராமங்களிலிருந்து துரத்தியடிப்பதே. அது கொலையிலும,; தீவைப்பிலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையிலும் ஈடுபட்டது. மக்களைச் சாலையோரத்திய முகாம்களுக்குள் விரட்டியது. இது 'நிலச்சுத்திகரிப்பு நடவடிக்கை" என்று அழைக்கப்பட்டது.

இதற்கான இராணுவ உத்தியைக் கண்டுபிடித்தவர் பிரித்தானியப் படைத் தளபதி ஜெனரல் கிரீக்ஸ். அவர் மலேசியாவில் கம்யூனிஸ்டு களுக்கு எதிராகப் பிரித்தானியர் நடத்திய போரில் இந்த உத்தியைத்தான் கையாண்டார்.

மக்களை அச்சுறுத்தி ஊரை விட்டு வெளியேற்றிக் காவல்துறையின் முகாம்களுக்குள் அடைப்பதுதான் அது. தண்டகாரண்யப் பகுதியில் இந்த உத்தியைக் கொண்டு 660 கிராமங்கள் காலி செய்யப்பட்டன. 50,000 மக்கள் முகாம்களில் அடைக்கப்பட்டார்கள். மூன்றரை இலட்சம் மக்கள் காணாமற் போய் விட்டார்கள். இன்று வரை அவர்களைக் காணவில்லை. சிலர் அடுத்திருந்த ஆந்திரப் பிரதேசத்துக்குப் போய் விட்டார்கள். ஆனால் பலர் அஞ்சி நடுங்கிக் காடுகளில் ஒளிந்துள்ளார்கள். ஆனால் முப்பதாண்டுகளாக மாவோயிஸ்டு இயக்கம் அந்தப் பகுதியில் வளர்ந்து வருகிறது. அது சுரங்கம் வெட்டுவதை எதிர்ப்பதற்கான இயக்கமன்று. பெருங்குழுமங்களின் சுரங்க வேட்டை தொடங்குவதற்கு ஏழாண்டு முன்பே மாவோயிஸ்டு இயக்கம் வந்துவிட்டது என்பதை நாமறிவோம். பழங்குடி மக்கள் போராடத் தொடங்கிப் பல நூற்றாண்டுகள் கழிந்த பிறகே மாவோ பிறந்தார் என்பதையும் நாமறிவோம்.

தண்டகாரண்யத்தில் என்ன நடந்தது என்றால், மாவோயிஸ்டுகளை எதிர்த்துப் போராடுவது என்ற பெயரில், மிருகத்தனமான நிலச் சுத்திகரிப்பு நடவடிக்கைதான் இடம் பெற்றது. சல்வா ஜுடும் எதிர்விளைவையே உண்டு பண்ணியது. அதன் நடவடிக்கைகளால் மாவோயிஸ்டுகள் வளர்ந்தார்கள் என்பதே உண்மை. அவர்களின் படைவீரர் தொகை பன்மடங்கு பெருகியது. ஏனென்றால், கொள்ளைகளும் தீவைப்புகளும் பாலியல் வன்கொடுமைகளும் பழங்குடி மக்களைச் சீற்றமடையச் செய்து, மாவோயிஸ்டுகளின் பக்கம் தள்ளிவிட்டன. அவர்கள் கூட்டம் கூட்டமாக மக்கள் விடுதலை கெரில்லாப் படையில் சேர்ந்தார்கள்.

பச்சை வேட்டை 
இன்று இந்திய நாடெங்கும் பச்சை வேட்டை என்பது 'நீ எங்கள் பக்கம் இருக்கிறாய், இல்லையேல் எங்கள் பகைவனின் பக்கம் இருக்கிறாய்" என்ற புஷ் கொள்கையை அடியொற்றியே நடைபெறுகிறது. நீ எங்கள் பக்கம் இருக்கிறாய் என்றால் பெருங்குழுமங்களை ஆதரிக்க வேண்டும். நீ எங்களை எதிர்க்கிறாய் என்றால், நீ மாவோயிஸ்டாக இருந்தாலும் சரி, காந்தியவாதியாக இருந்தாலும் சரி, காந்திய சோசலிசவாதியாக இருந்தாலும் சரி, உள்ðர்ப் பழங்குடி இளைஞராக இருந்தாலும் சரி, நீ ஆயுதம் தரித்தவன் என்றாலும் சரி, தரிக்காதவன் என்றாலும் சரி, ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை உள்ளவன் என்றாலும் சரி, இல்லாதவன் என்றாலும் சரி, நிலத்தையும் இயற்கைச் செல்வாதாரங்களையும் பெருங்குழுமங்கள் எடுத்துக் கொள்வதை எதிர்க்கிறாய் என்றால் நீ ஒரு பயங்கரவாதி.

இப்படித்தான் மாவோயிஸ்டு என்ற சொல்லுக்கான, இலக்கண வரையறையை விரிவுபடுத்தி விட்டார்கள். அநீதியை எதிர்க்கிற எவரையும் குறிக்கும் வகையில் அதன் பொருளை விரிவுபடுத்தி விட்டார்கள். இவ்வாறு நம் உள்துறை அமைச்சரே மாவோயிஸ்டு இயக்கத்துக்கு மிகவும் வெற்றிகரமான, மிகப் பெரிய ஆள்சேர்ப்பு முகவர் என்று சொல்லலாம். சிதம்பரம் 'ஒரு மறைமுக மாவோயிஸ்டு" என்றும் கூட சிலர் வேடிக்கையாகச் சொல்கின்றனர். எந்த அரசியல் கட்சிதான் தன்னைப் பெரிதாகக் காட்டிக் கொள்ள விரும்பாது? அந்த அழைப்பை அவர்கள் ஏன் மறுக்கப் போகிறார்கள்?

ஆனால், இப்போது என்ன நடக்கிறது பாருங்கள்; தந்தேவாடாவில் மாவோயிஸ்டுகள் மைய சேம காவல் படையைத் தாக்கிய செய்தியைப் பெருங்குழும ஊடகங்;கள் திரும்பத் திரும்ப வெளியிட்டன. அடுத்து நடந்த விபத்தில் தொடர்வண்டி தடம்புரண்ட போது, யார் செய்தது என்று தெளிவாகத் தெரியாத போதே, இது மாவோயிஸ்டுகளின் வேலைதான் என்று ஊடகங்களும், உள்துறை அமைச்சகமும் உறுதியாக நம்புகின்றன. சாதாரண மக்களை எப்படித் தாக்கலாம்? என்று அவைக் கூக்குரலிட்டன. சாதாரண மக்கள் கொல்லப்படுவதை ஒருபோதும் நான் நியாயப்படுத்த மாட்டேன். அப்படி நியாயப்படுத்துவதற்காக நான் வரவில்லை. ஆனால் நாம் இன்று இங்கே பேசிக் கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் கூட ஆயிரக்கணக்கான ஆயுதக் காவல்படையினர் கலிங்காநகரிலும், ஜகத்சிங்புரத்திலும், ஜார்க்கண்டிலும் நிராயுதபாணிகளான ஆர்ப்பாட்டக் காரர்கள் மீது அடக்குமுறையை ஏவிவிட்டுள்ள செய்தியை யாரும் வெளியிடவில்லை. அங்கெல்லாம் டாட்டாக்களும், ஜிண்டல்களும், மிட்டல்களும் இன்னும் இவைபோன்ற பெருங்குழுமங்களும் நிலப்பறிப்புச் செய்வதை எதிர்த்து மக்கள் போராடி வருகிறார்கள். 

ஊடகங்களின் பங்கு 
இப்படிப் போராடுகிற ஒவ்வொருவரையும் மாவோயிஸ்டு என்று முத்திரை குத்துவதன் வாயிலாகப் பச்சை வேட்டை நடவடிக்கை நகரங்களுக்கு வந்து கொண்டிருக்கிறது. அது நம் எல்லோரையும் குறி வைக்க முயல்கிறது. சுவாரசி யமான வழிகளில் இது நடப்பதை நான் உங்களுக்குச் சொல்வேன்:

மும்பையில் இதே போன்ற ஒரு கூட்டத்தில் நேற்று முதல்நாள் உரை யாற்றினேன். இங்கு போலவே ஏராளமான பத்திரிகை யாளர்கள் வந்திருந்தனர். மறுநாள் காலை இந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா மும்பைப் பதிப்பு போன்ற பல்வேறு ஏடுகளில் அக்கூட்டம் பற்றி விரிவான செய்திகள் இடம் பெற்றிருந்தன. எல்லாத் தொலைக்காட்சிகளிலும் இந்தச் செய்தி இடம்பெற்றது. ஆனால் மறுநாள் அரசாங்கத்துக்குச் சொந்தமான செய்தி முகமையாகிய பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (Pவுஐ) மட்டும் வேறு மாதிரியாக இந்தச் செய்தியை வெளியிட்டது. அருந்ததி சொல்கிறார்: 'நான் ஒரு மாவோயிஸ்டு' என்று; 'என்னைக் கைது செய்து பாருங்கள்' என்று அரசுக்குச் சவால் விடுகிறார், என்ற செய்தியை பி.டி.ஐ. வெளியிட்டது. இது முழுக்க முழுக்கப் பொய்ச் செய்தி. இதை நான் குறிப்பிடுவது நான் கைதுக்கு அஞ்சுகிறேன் என்பதால் அன்று. நான் மாவோயிஸ்டுகளுக்கு எதிரானவள் என்பதாலும் அன்று. 

என்னைப் பற்றி . . . 
 நான் எவ்விதச் சார்புமற்ற சுதந்திரமான எழுத்தாளர். எதிர்ப்பியக்கத்தின் பக்கம் நின்று கொண்டே கேள்விகள் கேட்கும் உரிமை எனக்கு இருப்பதாக நான் கருதுகிறேன். திட்டவட்டமாக நான் எதிர்ப்பியக்கத்தின் பக்கம்தான் நிற்கிறேன். ஆனால் காந்தியவாதிகள், காந்திய சோசலிசவாதிகள், ஆயுதப் போராளிகள், போர்க் குணமிக்க மாவோயிஸ்டுகள் என்று பலதரப்பட்டவர் களாலும் ஆனதே இந்த எதிர்ப்பியக்கம். ஆனால் அனைவரும் பெருங்குழுமக் கொடுந்தாக்கு எனும் ஒரே பகையை எதிர்த்தே போராடி வருகிறார்கள். ஆனால் நான் பேசாததைப் பேசியதாகப் பி.டி.ஐ. செய்தி வெளியிட்ட உடனே முன்பு சரியாகச் செய்தி வெளியிட்ட ஏடுகளும் இப்போது பொய்ச்செய்தியைப் படியெடுத்து வெளியிட்டு விட்டன. தொலைக் காட்சிகளும் செய்தியை மாற்றி வெளியிட்டன. இதெல்லாம் முத்திரை குத்துகிற முயற்சியே என்கிறேன். இந்த விவாதத்தை அவர்கள் முடிந்த வரை அசிங்கப்படுத்த முயல்கிறார்கள். அவதூறுகளை அள்ளித் தெளிக்க முயல்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் சாயம்பூசி மூலையில் தள்ளி அச்சுறுத்தி, வாயடைக்கச் செய்ய முயல்கிறார்கள்.

என்னைப் போன்ற ஒருத்திக்கே அவர்களால் இதையெல்லாம் செய்ய முடியும் என்றால், பிலாஸ்பூரிலும், கலிங்கா நகரிலும், ராய்ப்பூரிலும் பிற இடங்களிலும் போராடுகிற கிராம மக்களுக்கும் செயல்முனைவர்களுக்கும் என்னவெல்லாம் செய்வார்கள் என்று எண்ணிப் பாருங்கள். எங்கள் பக்கம் இல்லாதவர்கள் எல்லாம் எங்களுக்கு எதிரானவர்களே என்ற புஷ் கொள்கையைத்தான் கடைப்பிடிக்கிறார்கள். இதெல்லாம் எப்படித் தொடங்கியது? எப்போது தொடங்கியது? இந்தப் பெரிய பெரிய அகக் கட்டமைப்புத் திட்டங்கள் நீண்ட காலத்துக்கு முன்பே தொடங்கி விட்டன என்பது நமக்குத் தெரிந்ததே. பெரும் பெரும் அணைகள் கட்டியதால் மட்டும் மூன்று கோடியே நாற்பது இலட்சம் மக்கள் வீடுவாசல் இழந்து புலம் பெயர்ந்துள்ளார்கள் எனத் தெரிகிறது. இந்த நாட்டின் பழங்குடி மக்கள் தொகை மட்டுமே உலகில் பெரும்பாலான நாடுகளின் மக்கள் தொகையைக் காட்டிலும் கூடுதலாகும். நலிந்து கிடக்கிற இந்த மக்கள்தாம் இன்று அச்சுறுத் தலுக்கு ஆளாகியுள்ளனர்.

அமெரிக்க அணியில் இந்தியா ஆனால் பின்னோக்கி எண்ணிப் பார்த்தால்… 1989இல் ஆப்கானிஸ்தானின் கரடுமுரடான மலைகளில் சோவியத்துக் கம்யூனிசத்துக்கு எதிரான புனிதப் போரில் முதலாளியம் வெற்றி கண்டபோது இந்த நாடு உட்பட உலகமுழு வதும் அணி மாறியது. அதுவரை அணி சாரா நாடாக இருந்த இந்தியா இப்போது முழுக்க முழுக்க அணி சார்ந்த நாடாகி விட்டது. அது இசுரேல் போன்ற ஒரு நாட்டிற்கே கூட்டாளி ஆகி விட்டது. பாலத்தீனத்தை ஆதரித்து வந்த இந்தியா இன்று வெட்கங்கெட்ட முறையில் இசுரேலுக்கும் அமெரிக்காவுக்கும் கூட நேச நாடாகத் தன்னைக் காட்டிக் கொள்கிறது. அந்த நேரத்தில் நிதித்துறை அமைச்சராக இருந்தவர் மன்மோகன் சிங்.

காங்கிரசுக் கட்சியால் இரண்டு பூட்டுகள்; திறந்து விடப்பட்டன. ஒன்று பாபர் மசூதியின் பூட்டு, இன்னொன்று இந்தியச் சந்தைகளின் பூட்டு. இந்த இரு பூட்டுகளையும் திறந்து இரு வகையான முற்றாதிக்கங்களைக் கட்டவிழ்த்து விட்டனர். ஒன்று இந்து அடிப்படைவாதம். மற்றொன்று சந்தை அடிப்படைவாதம். இந்த இரு அடிப்படைவாதப் போக்குகளுக்கும் இறுதியில் அததற்குப் பொருத்தமான பயங்கரவாதிகள் தேவைப்பட்டார்கள். ஆகவே ஒருபுறம் இசுலாமியப் பயங்கரவாதிகளையும் மறுபுறம் இப்போது மாவோயிஸ்டுப் பயங்கர வாதிகளையும் தயாரித்தார்கள். இந்த இரண்டுக்கும் நடுவில் இந்த அரசாங்கத்தின் பொருளியல் கொள்கைகள் முன்தள்ளப்படுகின்றன. இராணுவ அரசு இல்லாவிட்டால், போலீஸ் அரசு இல்லாவிட்டால் இதற்குமேல் இந்தக் கொள்கையை முன்தள்ள முடியாது. ஏனென்றால் இந்த வளர்ச்சி வீதமும் சனநாயகமும் ஒத்துப் போகக் கூடியவை அல்ல. இதனால் எங்கு வந்து நிற்கிறோம் என்றால், எத்தனையோ ஆண்டுகளாக இராணுவ ஆட்சியில் இருந்துள்ள பாகிஸ்தானில் சனநாயகம் வேண்டும் என்று மக்கள் போராடும் அதே போது, நமக்கு சனநாயகம் இருப்பதாக நாம் நினைத்த இந்தியாவில் நடுத்தர வர்க்கமும் பெருங்குழும ஊடகங்களும் இராணுவ ஆட்சி, காவல்துறை ஆட்சி வேண்டுமென்று கூக்குரலிடு கின்றன. இராணுவம் வரட்டு மென்று அவர்கள் வெளிப் படையாகக் கேட்கிறார்கள். ஒரு கட்டத்தில் இராணுவத் தளபதியும் வான்படைத் தளபதியும் சற்றே தயக்கம் காட்டியபோது, இராணுவத்தை சனநாயகமய மாக்குவது என்றும், சனநாயகத்தை இராணுவமய மாக்குவது என்றும் பகட்டுறப் பேசப்பட்டது. ஆனால் உண்மையில், கிலானி இங்கே கூறியது போல், இராணுவம் சனநாயகத்தன்மை கொண்டதன்று. 

மக்கள் மீது போர் 
நம் மக்கள் மீதான புதிய போர் என்று எல்லோரும் குறிப்பிடுகிறோம். இது புதியதன்று. ஏனென்றால் - நம் மக்கள் என்பது யாரைக் குறிக்குமோ நானறியேன் - இந்தியா சுதந்திரம் பெற்ற நாளிலிருந்தே போர் நடத்திக் கொண்டுதான் இருக்கிறது. அது ஆட்சிப் பரப்புகளைக் கைப்பற்றிச் சேர்த்துள்ளது. மக்கள் மீது போர் தொடுத்துள்ளது. நாகாலாந்து, மணிப்பூர், காசுமீர், தெலங்கானா, பஞ்சாப், கோவா, ஐதராபாத், நக்சல்பாரி இயக்கம்… என்று காலமெல்லாம் போர்தான். இந்த நாடு தன் மக்கள் மீதே போரில் ஈடுபடாத ஆண்டு எதுவுமில்லை. இது என்ன வகையான போர்? நாகர்களுக்கு எதிராக, மணிப்பூரிகளுக்கு எதிராக, காசுமீரிகளுக்கு எதிராக, சீக்கியர்களுக்கு எதிராக, ஏழை எளியவர்களுக்கு எதிராக, தெலங்கானாவில் தலித்துகளுக்கும் ஆதிவாசிகளுக்கும் எதிராக, மேற்கு வங்கத்தில், பெரும்பாலும் பழங்குடிகளான நக்;சலைட்டுகளுக்கு எதிராக… எப்போதுமே கீழ்ச்சாதியினருக்கு எதிராக, முசுலீம்களுக்கு எதிராக, கிறித்தவர்களுக்கு எதிராக, பழங்குடி மக்களுக்கு எதிராக இந்தப்;போர் நடந்து வருகிறது. இந்த அரசு பிறந்த நாள் முதல் தன் மக்கள் மீதே போர் புரிந்து வரும் மேல்சாதி அரசாகும். இது புதிய போர் அல்ல என்று பேராசிரியர் சாய்பாபா இங்கே எடுத்துக்காட்டினார். இது இயற்கைச் செல்வாதாரங்களுக்கான போர். இலங்கையில் நடைபெற்றவை குறித்து நீங்கள் அனைவரும் அடைந்துள்ள வேதனையை நானறிவேன். அங்கு நடைபெற்ற இனப்படுகொலையில் பத்தாயிரக் கணக்கானத் தமிழ்மக்கள் கொன்றொழிக்கப்பட்டனர். இலங்கையில் நடைபெற்றது தமிழர்களுக்கு எதிரான போர்தான், அதில் ஐயமில்லை. ஆனால் அது பெருங்குழுமப் போரும் ஆகும் என்பதை உங்களுக்கு நான் சொல்ல வேண்டும்.

இன்று இந்தியத் தொழில் வணிகக் கூட்டமைப்பாகிய 'ஃபிக்கி' இலங்கை அரசுக்கு ஆதரவு திரட்டி வருகிறது. இந்திய அரசாங்கம் எப்போதுமே முழுக்க முழுக்க இலங்கை அரசுக்கு ஆதரவாக இருக்கிறது. இது குறித்து ஏதாவது செய்திருக்க வேண்டியவை தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளே. ஆனால் அவை எதுவும் செய்யவில்லை என்பது மிகப்பெரிய வெட்கக்கேடு! ஏனென்றால் அவர்கள் இதை நிறுத்தியிருக்க முடியும். என்றாலும் நிறுத்தவில்லை. அவர்கள் ஒதுங்கி நின்று கொண்டார்கள்.

இன்று இந்தியப் பெருங்குழுமங்கள் அங்கே போய்க்கொண்டிக்கின்றன. மேலும் மேலும் பணம் ஈட்டுவதற்காக அவை போகின்றன. இதே போன்ற நிலைமைதான் இந்தியாவின் மையப்பகுதிகளிலும் உருவாகி வருகிறது. இந்தப் பகுதிகளை அரசினர் 'மாவோயிஸ்டு வேட்டை" என்கின்றனர். நாம் 'எம்ஒயுயிஸ்டு வேட்டை" என்கிறோம். ஏனென்றால் அங்கெல்லாம் எம்ஒயு (ஆழுரு) எனப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு உட்படாத மலையோ காடோ எதுவுமில்லை. இது நான் முன்பே சொன்னது போல் - மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போரன்று. இது இந்த நாட்டில் வறியவர்களிலும் வறியவர்களாக உழன்று கொண்டிருக்கும் மக்களுக்கு எதிரான போரே ஆகும். தண்டகாரண்யத்தைப் பொறுத்தவரை, இலங்கை அரசு சென்ற அந்த எல்லை வரை இந்திய அரசு செல்லுமளவுக்கு இந்தியாவில் நாம் விட்டு விட மாட்டோம் என்று நினைக்கிறேன்.

இலங்கையும் இந்தியாவும்
 இலங்கை அரசு செய்தது போல் இந்திய அரசு வெளிப்படையாக வான் தாக்குதல் நடத்தவும் சுட்டுத் தள்ளவும் கூட்டம் கூட்டமாக மக்களை அழிக்கவும் முடியாது என்று நினைக்கிறேன். ஏனென்றால் இவர்கள் பார்ப்பனியக் குணம் படைத்த சூழ்ச்சிக்காரர்கள். பையப் பைய இனக் கொலை செய்வதுதான் நமது அரசின் திட்டம்.

நல்ல பழங்குடி யார்? செத்துப்போன பழங்குடிதான் என்பது மட்டுமல்ல இந்திய அரசின் கொள்கை. புலம் பெயர்ந்த பழங்குடிதான், ஊட்டச்சத்து இல்லாமல் மெலிந்துகிடக்கும் பழங்குடிதான், உரிமைகள் கேட்காத பழங்குடிதான், கண்ணியத்தைப் பறிகொடுத்த ஆணோ பெண்ணோ ஆகிய பழங்குடிதான், மனவுறுதி குலைந்த பழங்குடிதான், குப்பையில் வீசப்பட்ட பழங்குடிதான், சேரியில் கிடக்கிற பழங்குடிதான்... இவர்களே நல்ல பழங்குடிகள் என்பதும் கூட இந்திய அரசின் கொள்கைதான்.

நாம் மிகவும் நாசூக்கானவர்கள், அப்படியெல்லாம் சட்டென்று ஒருவரைக் கொன்று போட முடியாது. நாம் புலால் உண்ணாதவர்கள், பார்ப்பனியர்கள். அப்படிச் செய்ய மாட்டோம். தண்ட காரண்யத்தில் நடப்பவை செய்தியாவ தில்லை. ஏனென்றால் அவை வெறும் கொலைகள் மட்டுமல்ல. ஒரு பெரும் மக்கள் கூட்டமே நூற்றுக் கணக்கான ஆயிரக்கணக் கான மக்கள் - தங்கள் கிராமங்களுக்குச் செல்ல முடியாமலும், தங்கள் வயல்களில் சாகுபடி செய்ய முடியாமலும் அஞ்சி நடுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்குக் கல்விக் கூடங்கள் இல்லை, மருத்துவமனைகள் இல்லை, மருத்துவர்கள் இல்லை, எந்தவிதமான வசதிகளும் இல்லை. இந்த அவலநிலைக்கான பழி முழுவதும் மாவோயிஸ்டுகள் மீதே சுமத்தப்படுகிறது. ஆனால் மாவோயிஸ்டுகளே இல்லாத பழங்குடிப் பகுதிகளில் ஆய்வு செய்துள்ள மருத்துவர்களைக் கேட்டுப் பாருங்கள்.

இந்தப் பகுதிகளின் மக்கள் ஊட்டச் சத்தின்மை தொடர்பான எய்ட்ஸ் நோயால் பீடிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். எய்ட்ஸ் எப்படி நோய் எதிர்ப்புத் திறனை அழித்து விடுகிறதோ, அதேபோல் ஊட்டச் சத்தின்மையும் இந்த மக்களின் நோய் எதிர்ப்புத் திறனை அடியோடு அழித்து, அவர்களை எல்லா வகை நோய்களும் தொற்றுவது எளிதாகி விடுகிறது. இதனால் ஒருவர் சாகவில்லை என்றால், இந்த நலிவு அடுத்தடுத்த தலைமுறைக்குப் பரவி உடல்நிலையை மோசமாக்கி விடும். இதைத்தான் பையப் பைய நடக்கும் இனக்கொலை என்கிறேன். இதுதான் அவர்களின் திட்டம்.

அந்தப் பகுதியைப் பாதுகாப்புப் படைகள் முற்றுகையிட்டுள்ளன. மக்கள் வெளியே வர முடியாது. அவர்களுக்கு உணவுப் பங்கீடு கிடைப்பதில்லை. பங்கீட்டுக் கடைகள் பாதுகாப்பு முகாம்களுக்குள் இருப்பதால் அவர்கள் அங்கே போக முடியாது. அவர்கள் கடைக்குப் போய் மருந்து வாங்க முடியாது. அது மூளை சார்ந்த மலேரியா அல்லது சாதாரண மலேரியா பரவியுள்ள பகுதி. விரைவில் அவர்களுக்கான உயிர்க்காற்று குறைந்து போய் அவர்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் வளர்கிறது.

உள்நாட்டுப் பாது காப்புக்கு மிகப் பெரிய ஆபத்து யார் என்று அண்மையிலே ஒரு செய்தியாளர் என்னைக் கேட்டார். என்னைப் பொறுத்த வரை, பேராசை பிடித்த நடுத்தர வர்க்கமும் மேல்தட்டு வர்க்கமும்தான் மிகப்பெரிய ஆபத்து என்று நான் பதிலளித்தேன்.

யார் பிரிவினைவாதிகள்? 
இந்தியாவில் இவர்கள்தான் மிகப் பெரிய பிரிவினைப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியிருப்பவர்கள். இவர்கள் இந்த நாட்டை விட்டுப் பிரிந்து விண்வெளிக்குப் போய், அங்கிருந்து கீழே பார்த்துக் கேட்கிறார்கள்: “எங்கள், பாக்சைட்டுக்கு மண்ணில் என்ன வேலை? எங்கள் தண்ணீருக்கு ஆற்றில் என்ன வேலை? எங்கள் மரத்துக்குக் காட்டில் என்ன வேலை? அதையெல்லாம் எடுத்துக்கொடுங்கள்” என்கிறார்கள். மக்களைத் தேவைக்கதிகமானவர் களாகக் கருதுகிறார்கள். தேவைக்கதிகமாக உண்ணும் பெருந்தீனிக்காரர்களாக நினைக்கிறார் கள்.

நம் உள்துறை அமைச்சர் சிதம்பரம் உலகின் மிகப் பெரிய சுரங்கக் குழுமங்களில் ஒன்றாகிய வேதாந்தாவின் இயக்குநர் குழுவிலேயே இடம் பெற்றிருந்தவர். என்ரான் குழுமத்தின் வழக்குரைஞராக இருந்தவர். சுரங்கப் பெருங்குழு மங்களுக்காக எத்தனையோ முறை நீதிமன்றங்களில் வாதிட்டவர். இவர் நிதித் துறை அமைச்சராக இருந்த போது இந்தியாவுக்கான தனது இலட்சியக் கண்ணோ ட்டம் என்னவென்பதை அறிவித்தார். நாட்டின் 85 விழுக்காடு மக்கள் நகரங்க ளில் வாழ வேண்டும் என்பதே அது. 50 கோடி மக்களைக் கிராமப் புறங்களிலிருந்து வெளியேற்றி விட வேண்டும் என்பதே இதன் பொருள். காவல்துறையை ஈடுபடுத்தாமல், இராணுவத்தை ஈடுபடுத்தாமல் இதை உங்களால் செய்ய முடியுமா? முடியவே முடியாது. வெளியேற்றப்பட்ட பிறகு இந்த மக்கள் என்ன செய்வார்கள்? சேரிகளில் வசிப்பார்கள். அவர்களுக்கு யாரும் வேலை கொடுக்கப் போவதில்லை. நகரங்களில் இப்போது இருப்பவர்களுக்கே வேலை இல்லையே! மீண்டும் மீண்டும் அவர்களை வெளியேற்றிக் கொண்டே இருப்பீர்களா?

வெற்றி பெறுவோம் 
அண்மையில் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.என். கிர்பால் “சேரிவாசிகள் நம் சீர்மிகு நாட்டின் சேப்படிக்காரர்கள் (பிக்-பாக்கெட்டுகள்)” என்று கூறினார். மக்களைக் கிராமங்களிலிருந்து வெளியேற்றுவதும் நகரங்களிலிருந்து வெளி யேற்றுவதுமாகக் சுற்றிச் சுழல விட வேண்டியதுதான். ஏனென்றால் அவர்கள் தேவைக்கதிகமான பிறவிகள்! ஒழிந்து போக வேண்டியவர்கள்! நூறாயிரம் உழவர்கள் தற்கொலை செய்து கொண்டது பற்றி ஆட்சியாளர்கள் வருத்தப்படுவதாக நினைத்து விடாதீர்கள். அவர்களுக்கு வருத்தமில்லை. மேலும் பலர் இப்படிச் சாக வேண்டும், ஏழைகள் தொலைந்து போக வேண்டும் என்பதே அரசின் விருப்பம். 18,19ஆம் நூற்றாண்டுகளிலும் தென் அமெரிக்காவிலும் வட அமெரிக்காவிலும் கனடா விலும் நடந்ததற்கும் இங்கு நடப்பதற்கும் ஒரு வேறுபாடு உள்ளது: நாம் ஒரு சனநாயக நாடு என்று பாசாங்கு செய்து கொள்கி றோம். இது தன்னைத் தானே குடியேற்ற நாடாக்கிக் கொள்கிற சனநாயகம் தானே தன் உறுப்புகளைத் தின்ன முற்படுகிற சனநாய கம்; ஆனால் உறுப்புகள் தம்மைத் தின்னக் கொடுக்க மறுக்கின்றன. இந்தப் போர் புதியதன்று. இந்தப் போரில் நாம் வெற்றி பெறுவோம் என்பதுதான் புதிய செய்தியாக இருக்கப் போகிறது. நம்மால் வெற்றி பெற முடியும்.

ஐந்தாண்டு காலமாக, உலகிலேயே மிகவும் ஏழ்மைப்பட்ட பஞ்சைப் பராரிகள் உலகிலேயே மிகப் பெரிய பன்னாட்டுக் குழுமங்களைக் கிஞ்சிற்றும் ஈவிரக்கமற்ற பன்னாட்டுக் குழுமங்களைத் தடுத்து நிறுத்தியுள்ளார்கள்; முன்னேற விடாமல் முடக்கியுள்ளார்கள். இது இடர்ப்பாடுகள் நிறைந்த போராட்டமே என்றாலும், மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நம் சனநாயகத்தில் ஒவ்வொரு நிறுவனமும் கெட்டுச் சீரழிந்து விட்டது. ஆனால் மக்களின் மனவுறுதி முறிந்து போகவில்லை. நாம் அவர்கள் பக்கம் நின்றாக வேண்டும். நாம் ஒதுங்கி நின்று நம்மால் செய்யக் கூடியது ஒன்றுமில்லை என்று கூற முடியாது. இலங்கையில் மக்கள் கொல்லப்படுவதை ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தது போல் இப்போதும் இருந்து விடக் கூடாது. இது ஈவிரக்கமே இல்லாத அரசு. மக்கள் கொல்லப்படுவதை நாம் அனுமதிக்க மாட்டோம் என்று நான் கூறியிருக்கக் கூடாது. அது தவறுதான். ஏனென்றால் காசுமீரில் மக்கள் கொல்லப்படுவதை நாம் தடுக்கவில்லையே! அங்கு எழுபத்தெட்டாயிரம் மக்கள் கொல்லப்பட்டுள் ளார்கள். வடகிழக்கில் பத்தாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். ஆனால், உங்களுக்குத் தெரியுமா, இந்திய அரசு சடலங்களை எண்ணுவதில் லை. ஆகவே, எத்தனைப் பேர் என்று நமக்குத் தெரியாது. மேற்கு வங்கத்திலும் ஆந்திரத்திலும் ஆயிரக்கணக் கான நக்சலைட்டுகள் கொல்லப்பட்டார்கள். இது கருணையில்லாத அரசு. 

ஊடகங்கள் 
 இந்த நாட்டின் ஊடகங்கள் பெரிதும் ஒத்துப் போகிறவையாக இருக்கின்றன. கெட்ட செய்தியை வெளியிடாமல் மறைத்து விடுகின்றன. நான் இங்கு பேசும் போதே, என்னை நக்சலைட்டு ஆதரவாளர் என்று முத்திரையிட்டு 'இவளைச் சிறையில் போடு" என்று சொல்ல விரும்புகின்றன. சிறை செல்லும் ஆசை எனக்கும் இல்லை. நான் ஒன்றும் ஈகியல்லேன். நான் கருத்துகளில் நம்பிக்கை கொண்டுள்ள எழுத்தாளர். எதிர்ப்பியக்கத்தின் நன்மைக்காகவே கூட நமக்கு நாம் கடினமான கேள்விகளைக் கேட்டுக் கொள்ள வேண்டும் என நம்புகிறேன். 'காந்தியவாதிகள் தொடங்கி மாவோயிஸ்டுகள் ஈறாக எதிர்ப்பியக்கத்தின் பல் வண்ண அணிவகுப்பு என்று கூறி வருகிறேன் அல்லவா" அந்த அணிவகுப்பில் காந்திய வாதிகளிடம் புரட்சிகர இலட்சியக் கண்ணோட்டம் இருக்கவே செய்கிறது என்று சொல்லலாம். வேண்டுமானால், பெருங்குழும இராணுவக் கொடுந்தாக்குதலுக்கு முகங்கொடுப்பதற்கான புரட்சிகர உத்தி அவர்களிடம் இல்லை எனலாம்.

ஆனால் மாவோயிஸ்டுகளின் இலட்சியக் கண்ணோட்டம் முழுக்க முழுக்கப் புரட்சிகரமானது என்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியாது. இன்று அவர்கள் காடுகளுக்குள் துரத்தப்பட்டிருப்பதற்கு இந்திய அரசின் அழித்தொழிப்புக் கொள்கையே காரணம். அவர்களைப் பூண்டோடு அழிக்க விரும்புவதால் அவர்கள் காடுகளுக்குள் பின்வா ங்கிச் சென்றுள்ளார்கள். மாவோயிஸ்டுகள் தமது வரலாற்றில் எப்போதுமே பழங்குடிப் பகுதிகளில் தான் மிகவும் வலுவாக இருந்துள்ளார்கள். ஆனால், இன்று பழங்குடிப் பகுதிகள் மீது சுரங்கக் குழுமங்களும் அகக்கட்டமைப்புக் குழு மங்களும் கொடுந்தாக் குதல் தொடுத்துள்ளன. பழங்குடி மக்கள் இதை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மாவோயிஸ்டு களுக்கென்று அரசின் சுரங்கக் கொள்கைக்கு மாறான ஒரு சுரங்கக் கொள்கை உண்டா? 

சுரங்கமும் சுற்றுச் சூழலும் 
 சுற்றுச் சூழலியல் சார்ந்து சுரங்கம் வெட்டுவதில் நம்பிக்கை வைத்துள்ளோம் என்பது போல் நாம் பேசிக் கொண்டிருக்க முடியாது. சுற்றுச் சூழலியல் சார்ந்து பாக்சைட்டு; வெட்டியெடுக்க முடியுமா என்றால் முடியாது. ஓரிசா மலைகளில் புதைந்துள்ள பாக்சைட்டின் மதிப்பு 4 திரிலியன் (நாலாயிரம் கோடி கோடி) டாலர் ஆகும். இவ்வளவு பெருந்தொகை கிடைக்கும் என்பதால்தான் இராணுவத்தை அழைக்க நினைக்கிறார்கள். ஆனால் அந்தப் பாக்சைட்டு மலைகளைப் பொருளியல் வகையில் மதிப்பிடவே முடியாது. ஏனென்றால் அந்த மலைகள் நீர் தேக்கி வைத்திருப்பவை. ஓவ்வொரு நாளும் அந்தத் தண்ணீர் பள்ளத்தாக்குகளுக்குப் பாய்கிறது. அந்தப் பகுதியின் சுற்றுச் சூழலை இவ்வாறு இம்மலைகள் பேணிக் காக்கின்றன.

சுற்றுச் சூழலைக் கெடுக்காமல் பாக்சைட்டு எடுக்க முடியாது. பெரிய அணைகள் கட்டி மின்சாரம் இயற்றாமல் பாக்சைட்டை அலுமினாவாகவும் அலுமினாவை அலுமினியமாகவும் மாற்ற முடியாது. அலுமினியம் தயாரிக்கும் செயல்முறைதான் உலகிலேயே மிகவும் நச்சுத் தன்மையும் அழிவுத் தன்மையும் வாய்ந்த தொழிற் செயல்முறையாகும். சுற்றுச் சூழலியல் சார்ந்து அலு மினியம் தயாரித்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை. நீங்கள் தயாரிக்கும் அலு மினியம் நேராகப் படைசார் தொழில் துறைக் கட்டமைவுக் குள் போய்விடும். நேராகப் போர் இயந்திரத்துக்குள் போய்; ;விடும். நமக்கு நாமேயும் கேள்வி கேட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும். என்னைப் போன்றவர்கள் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். நான் இங்கே நிற்பது உங்களுக்கோ வேறு எவருக்கு மோ சங்கடமில்லாமற் செய் வதற்காக அல்ல. அது என் வேலையில்லை. சங்கடமான கேள்விகளைக் கேட்பதும,; என்ன நடக்கிறது இங்கே என்று வினவுவதும்தான் என் வேலை.

ஆனால் நான் கோட்டின் இந்தப் பக்கம் இருக்கிறேன். பெருங்குழும வன்பறிப்பை எதிர்க்கும் எதிர்ப்பியக்கத்தின் பக்கம் இருக்கிறேன். இந்தப் பக்கம்தான் இருக்கிறேன். கோடானுகோடி டாலர் மதிப்புள்ள கனிம வளங்கள் - இரும்புத் தாது, பாக்சைட்டு, மாங்கனீஸ், தங்கம், வைரம், மாணிக்கம் போன்றவை - இருக்கும்போது இதிலிருந்து கிடைக்கக் கூடிய பணம் மலையளவு பெரிது. இந்தப் பணத்தைக் கொண்டு அரசுகளையே விலைக்கு வாங்கலாம். ஊடகங்களை வாங்கலாம்; நீதிபதிகளை வாங்கலாம்;: தேர்தல்களையும் வாங்கலாம். பத்தாயிரக்கணக்கான கோடிகளில் அரசியல் ஊழல் முறைகேடுகள் நடப்பதை அறிவீர்கள். இந்தப் பணம் ஏது? எங்கிருந்து வருகிறது? பாக்சைட்டு மலைகளிலிருந்து வருகிறது. இரும்புத் தாதுவிலிருந்து வருகிறது. ஊகப் பங்கு வணிகத்திலிருந்து வருகிறது.

அரசு இன்று இந்தத் தனியார் குழுமங்களுக்குச் சுரங்க ஒப்பந்தங்கள் வழங்குகிறது. இரும்புத் தாது டன் ஒன்றுக்கு உரிமைக் கட்டணமாக அரசுக்குக் கிடைப்பது 24 ரூபாய் மட்டுமே. ஆனால் இதைக்கொண்டு தனியார் குழுமம் ஈட்டுவது 5,000 ரூபாய். கோடிக் கணக்கான டன்களுக்கு இந்த ஒப்பந்தங்கள் வழங்கப் படுகின்றன. அதனால்தான் இங்கே பெல்லாரிக் குடியரசு ஆள முடிகிறது. மது கோடா வளர முடிகிறது. இந்தப் பெருங் குழுமங்களிடமிருந்து காசு வாங்கிச் செயல்படும் தொலைக் காட்சிகள் உள்ளன. இந்தத் தொலைக்காட்சிகள் எந்தக் கேள்வியும் கேட்கப் போவ தில்லை. அவர்களால் தேர்தலையே விலை கொடுத்து வாங்க முடியும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். 

அரசியல் கட்சிகள் 
 பாரதிய சனதாக் கட்சியும் காங்கிரசும் அண்ணா திமுகவும் திமுகவும்தான் கட்சிகள் என்று நீங்கள் நினைக்கலாம். இல்லை, இவையல்ல கட்சிகள். டாட்டாவை எதிர்க்க அம்பானி, அம்பானியை எதிர்க்க மிட்டல், மிட்டலை எதிர்க்க மற்றொருவர்… உண்மையில் இவையே கட்சிகள். இந்தப் பெருங்குழுமங்களுக்கு ஆதரவாக ஆயுதப் படைகளே உள்ளன. சத்திஸ்கரில் சல்வா ஜுடும், மேற்கு வங்கத்தில் ஹர்மா படை, ஒரிசாவில் பாஸ்து குண்டர்கள் அல்லது டாட்டா குண்டர்கள் என்றவாறு உள்ளன.

ஆனால், இந்த உள்நாட்டுப் போர்ச் சூழலை நாம் சமாளித்தாக வேண்டும். மிகவும் கெட்டிக்காரத்தனமாக இதற்குள் நுழைந்து வெளிவர நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். காட்டுக்குள்ளே உங்களை ஒரு துப்பாக்கிக் குண்டு தாக்கலாம். ஆனால் காட்டுக்கு வெளியே உங்களுக்குச் சிறை உண்டு, ஊடகங்களில் உங்களைத் திசை திருப்பும் வழிகள் உண்டு. இவற்றை எப்படிச் சமாளிக்கப் போகிறோம்? வன்முறையா, அகிம்சையா என்ற வினாவைத் திரும்பத் திரும்ப அவர்கள் நம்முன் எழுப்பி வருவது கருத்துக்குரியது. இது இயக்கங்களைப் பிரிக்கும் முயற்சியாகும். இந்த இயக்கங்கள் ஒன்றை ஒன்று குற்றஞ் சொல்லிக் கொண்டிருக்கவில்லை, ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொண்டிருக்கவில்லை. மேதா பட்கர் மாவோயிஸ்டுகளைக் கண்டிக்கவில்லை. மாவோ யிஸ்டுகளும் மேதா பட்கரைக் கண்டிக்கவில்லை. பத்திரிகையாளர்களும் பத்திரிகைகளும் உரிமை வாதிகளும்தான் குறுஞ்செய்திக் கருத்துக்கணிப்பு நடத்துவதும் தொலைக்காட்சி வழி அறநெறி போதிப்பதுமாய் ஏதேதோ செய்து கொண்டிருக்கிறார்கள்.

எதிர்ப்பியக்கத்தின் பன்மை 
இவர்கள் அனைவரும் தமக்குள் எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும், இந்த வேறுபாடுகள் எவ்வளவு கடுமையானவையாக இருந்தாலும், ஒரே பெருங்குழுமக் காட்டாதிக்கத்தை எதிர்த்தே, ஒரே பெருங்குழுமப் படையெடுப்பை எதிர்த்தே போராடுகிறோம் என்பதை நன்கறிவார்கள். மக்கள் தங்கள் போராட்ட உத்திகளை வெறும் கருத்தியல் அடிப்படையில் வகுப்பதில்லை என்பதும் அவர்களுக்குத் தெரியும். காட்டாக, நர்மதைப் பள்ளத்தாக்கில் ஆயுதப் போராட்டம் நடத்த முடியாது. அங்கு யாருடன் சமர் புரிவது? உங்கள் வீட்டை மூழ்கடிக்கும் ஆற்று நீருடனா? இதே போல், அடர்ந்த காட்டுக்குள், ஊர்விட்டு ஊர் செல்லவே பல நாள் ஆகும் போது, ஊரைச் சுற்றி மையச் சேமக் காவல் படையும், சத்தீஸ்கர் காவல்துறையும் நிற்கும் போது, உங்களால் என்ன செய்ய முடியும்? உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடியுமா? தொடர் முழக்கப் போராட்டம் நடத்த முடியுமா? உங்கள் பேச்சைக் கேட்பது யார்?

காந்தியப் போராட்டம் நடத்துவதானால் பார்க்கவும் கேட்கவும் ஆள் வேண்டும். காட்டில் இதற்கு வழியில்லை. மேலும், பட்டினி கிடப்பவன் உண்ணாவிரதம் இருக்க முடியுமா? பணம் இல்லாதவர்கள் வரிகொடா இயக்கமோ சரக்குப் புறக்கணிப்போ நடத்த முடியுமா? என்று நீங்கள் கேட்டுப் பாருங்கள். அவர்களிடம் எதுவும் இல்லை, பணம் இல்லை. பார்க்கவும் கேட்கவும் அவர்களுக்கு யாருமில்லை. அவர்கள் என்னதான் செய்யமுடியும்? மாவோயிஸ்டு என்றும் காந்தியவாதி என்றும் வேறு பலவாறும் செய்யப்படும் இலக்கண வரையறைகள் எல்லாம் களத்தில் அவ்வளவு தெளிவானவை யாகவோ அவ்வளவு தூயவையாகவோ இருக்க வேண்டியதில்லை. நீங்களே சாலையில் காந்தியவாதியாகவும் காட்டில் மாவோயிஸ்டாகவும் இருக்கலாம். அவர்கள் நமக்கு இந்த வரையறைகளைச் செய்தளிக்க விடக் கூடாது. நம் மண்டைக்குள்ளிருக்கும் சிந்தனைத் திறனை நாம் கைவிடத் தேவையில்லை. நீ எங்கள் பக்கம் இருக்கிறாய், இல்லையென்றால் பயங்கரவாதிகளின் பக்கம் இருக்கிறாய் என்;பது போன்ற மிரட்டல்களுக்கு நாம் அஞ்சத் தேவையில்லை.
 நான் தண்டகாரண்யத்தில் காட்டுக்குள் செல்வதற்கு முன் தந்தேவாடா காவல்துறை கண்காணிப்பாளரைச் சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம் 18 நக்சலைட்டுகளை என் வீரர்கள் கொன்று விட்டார்கள் என்று படத்தைக் காட்டினார். இளம் வயதினர், இளம் பழங்குடிகள் 18 பேர் கொல்லப்பட்டிருந்தனர். அவர்களில் எழுவர் இருபது வயதுக்குட்பட்ட பெண்கள,; தலையில் பூ வைத்திருந் தார்கள். நான் கேட்டேன்: அவர்கள் நக்சலைட்டுகளாகவே இருக்கலாம். ஆனால் இந்தப் படத்தை வைத்து அவர்களை நக்சலைட்டுகள் என்று எப்படிச் சொல்ல முடியும்? நெற்றியில் 'நான் நச்சலைட்டு' என்று எழுதி ஒட்டிவைத்துள்ளார்களா, என்ன? 'பாருங்கள், அம்மா, அவர்கள் எங்களிடம் இருக்கக் கூடிய மலேரியா மருந்தும் டெட்டால் போத்தலும் வைத்திருந்தார்கள்". ஆகவே, மாவோயிஸ்டு என்பதற்கு இது ஒரு வகையான விளக்கம். 

பேராசை வழி 
பிறகு அவர் சொன்னார்: “நம்மால் காவல் துறையையும் இராணுவத்தையும் பயன்படுத்தி இந்தப் போரில் வெற்றி பெற முடியாது. நாம் வெற்றிபெற ஒரே வழி இம்மக்களுக்குப் பேராசையின் பொருளைக் கற்றுத் தருவதுதான்.” ஏனென்றால் பேராசை என்றால் என்ன என்றே அவர்களுக்குப் புரியாது. வீட்டுக்கு ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி கொடுங்கள், போரில் வென்று விடலாம். இங்கே அரசியல் கட்சிகள் இதையே செய்து வருவதாக எனக்கு ஒருவர் நினைவுப்படுத்தினார். மக்களைக் கவரும் தொலைக் காட்சியைக் கொண்டு போரில் வென்று விடலாம். மாவோயிஸ்டு என்றால் யார் என்பதற்கு இப்படி விதம் விதமாக விளக்கம் தரப்படுகிறது. இறுதியில் அந்தக் கிராமங்களில் மக்களுக்கு என்ன நேரிட்டது, பாருங்கள்.

அந்தக் காவல் துறைக் கண்காணிப்பாளர் சொன்னார்:
“யாரெல்லாம் வெளியே வந்து காவல்துறை முகாம்களில், அல்லது சல்வா ஜுடும் முகாம்களில், வசிக்கவில்லையோ அவர்கள் எல்லாம் மாவோயிஸ் டுகளே.” அதாவது யாரெல்லாம் கோழி மேய்த்துக் கொண்டிருக்கிறார்களோ, யாரெல்லாம் வீட்டில் உட்கார்ந்திருக்கிறார்களோ, யாரெல்லாம் வயலில் நின்று கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் எல்லாம் பயங்கரவாதிகள் என்று பொருள். தண்டகாரண்யத்தில் பயங்கரவாதத்துக்கு இதுவே இலக்கண வரையறை.

செப்;டெம்பர் 11 (இரட்டைக் கோபுரத் தகர்ப்பு) நிகழ்ச்சிக்குப் பிறகு நாம் நெடுந்தொலைவு வந்து விட்டோம். இராணுவத்தை அழைப்பது பற்றியும், வான் படையைத் துணைக் கொள்வது பற்றியும் நேற்று கூட பேசியுள்ளனர். இதற்கு என்ன பொருளோ, யாமறியோம். ஏழைகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காகச் சுடுவதாம்! இதை நாம் அனுமதிப்பதுபோல் பெரிய வெட்கக் கேடு எதுவும் இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக, உலகிலேயே மிகவும் வறுமைப்பட்டவர்களும் ஊட்டங்;குறைந் தவர்களும், ஏதுமற்றவர்களுமான மக்களுக்கு எதிராகப் படை நடத்துவதை அனுமதிக்கலாமா? இதுதான் நாட்டு நலன் என்றால், இப்படித்தான் நம் நாடு இருக்கும் என்றால், இது நம்மை பாசிஸ்டுகள் ஆக்கி விடக் கூடியது. இதை எண்ணி இரவில் நம்மால் தூங்க முடியவில்லை. தேர்தலில் இவர்களுக்கு வாக்களித்தோமே என்று கூட வெட்கப்படுகிறோம், வேதனைப்படுகிறோம். நாம் வாக்களிக்கக் கூடாது. வேறொன்றும் செய்ய முடியாவிட்டாலும் வீட்டிலேயே இருந்து விடுங்கள். அதுவே மனித குலத்துக்குச் செய்யும் உதவியாக இருக்கும். 

முதலாளிய முற்றாதிக்கம் 
முடிவாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். அதாவது முதலாளியம் போல் முற்றாதிக்கத் தன்மையுள்ள கருத்தியல் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. ஏனென்றால் தன் கூடவே முதலாளியமல்லாத ஒரு சமூகமும் ஒருங்கே நிலவுவதை அதனால் சகித்துக் கொள்ள முடியாது. இன்று முதலாளியமல்லாத ஒரே சமூகம் பழங்குடிச் சமூகம் மட்டுமே. தெற்காசியாவில் என்ன நடக்கிறது? ஆப்கானிஸ்தான் முதல் வசிரிஸ்தான் வரை, பழங்குடி மக்கள் வாழும் இந்தியாவின் வடகிழக்கிலும், சிவப்புத் தாழ்வாரம் எனப்படும் பகுதி முழுக்கவும் ஒரு கொடுந்தாக்குதல் நடக்கக் காண்கிறோம். இதற்கான எதிர்ப்பியக்கம் வௌ;வேறுவிதமாக வடிவம் கொள்கிறது. அது ஆப்கானிஸ்தானில் தீவிர இஸ்லாமாகவும், இந்தியாவில் தீவிரக் கம்யூனிசமாகவும் இருக்கலாம். ஆனால் தாக்குதல் என்பது இயற்கைச் செல்வாதாரங்களைக் கைப்பற்றுவதற்கான பெருங்குழுமத் தாக்குதலே.

ஆகவே, இதை எப்படிப் பார்க்கப் போகிறோம்? என்னைப் பொறுத்த வரை நம்பிக்கை மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளேன். கிட்டத்தட்ட பத்தாண்டு காலம் நம்மில் சிலரால் செய்ய முடியாமலிருந்ததைப் பச்சை வேட்டை நடவடிக்கை செய்து விட்டது. அது பெருங்குழும வட்டாரங்களின் முகத்திரையைக் கிழித்து விட்டது. பெரும்புள்ளிகளை அவர்களின் சொகுசான, மேலாண்மை அறைகளிலிருந்து வெளியே இழுத்து வந்து விட்டது! அவர்கள் வெளியே வந்து போர்க் கருவிகளேந்திக் கொலை செய்வதற்கு முனைந்து நிற்கிறார்கள். தெலங்கானாவில் குழந்தைகளைக் கூட ஒட்டுப் படைகள் கொலை செய்தன. இந்தப் படைகள் இந்திய அரசின் படைகள் அல்ல. இவை பெருங்குழுமப் பேரரசின் கூலிப்படைகள் ஆகும். ஆகவே, பச்சை வேட்டை நடவடிக்கையானது அநேகமாய் அனைவருக்குமே நிலைமைகளைத் தெளிவாக்கிய அளவில் நமக்கு உதவியுள்ளது. 

வெற்றி முக்கியம் 
ஆனால், இந்தப் போரில் நாம் வெற்றி பெறுவதன் முக்கியத்துவத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். தண்டகாரண்யக் காட்டிலும், லால்கரிலும். ஜார்க்கண்டிலும் நம்மால் வெற்றி பெற முடியும் என்றால், முதலாளிய இயந்திரத்தைப் பார்த்து நில் என்று சொல்ல முடியும், உனக்கு எதுவும் தர மாட்டோம் என்று சொல்ல முடியும். வேறுவிதமாகச் சிந்திக்கும் முறைக்கு இடமளித்தாக வேண்டும் என்று கேட்க முடியும். இந்த வெற்றியின் தொடர்ச்சியாகப் பிற வெற்றிகளை அடைய முடியும். ஏனென்றால் இன்று நாம் போராடுவது பாரதிய சனதா குறித்தோ காங்கிரஸ் குறித்தோ மார்க்சிஸ்டுகள் குறித்தோ மாவோயிஸ்டுகள் குறித்தோ அல்ல, மானுடத்தின் வருங்காலத்தை மாறுபட்ட வழியில் வடிவமைப்பது குறித்தும், மகிழ்ச்சிக்கும் மனநிறைவுக்கும் மாறுபட்டதோர் இலக்கணம் வகுப்பது குறித்தும,; இயற்கையோடு இயைந்து வாழ்வதின் வாய்ப்பு குறித்தும் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். இதில் நாம் வெற்றி பெற வேண்டும். எப்படியோ தோற்றுப் போனால் எல்லாவற்றையும் இழந்து விடுவோம். 

பழங்குடித் தாயகங்கள் 
இறுதியாக, நான் எழுதிய ஒன்றைப் படித்துக் காட்டி நிறைவு செய்ய விரும்புகிறேன்: ஆசியத் துணைக் கண்டத்தின் குறுக்கே ஆப்கானிஸ்தான் முதல் வசிரிஸ்தான் ஊடாகப் பாகிஸ்தானின் வடமேற்கு எல்லை மாகாணம் வரை இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் ஊடாக, சிவப்புத் தாழ்வாரம் எனப்படுகிற நிலப்பரப்பு வரை பழங்குடிப் பகுதிகள் கிளர்ந்தெழுந்து போராடுகின்றன. இந்த எழுச்சியின் இயல்பு ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் தீவிர இஸ்லாமாக வடிவெடுத் துள்ளது. இந்தியாவின் காடுகளடர்ந்த இதய பூமியில் அது தீவிரக் கம்யூனிசமாக வடிவெடுத்துள்ளது. ஆனால் இந்தப் பழங்குடித் தாயகங்கள் மீதான கொடுந்தாக்குதல் தடையிலா வணிகச் சந்தையால் தூண்டப்படுகிறது. ஆனால் முதலாளியியம் இயற்கைச் செல்வாதாரங்களாகக் கருதுகிறவற்றைக் கைப்பற்றிக் கட்டுப்படுத்த வேட்கை கொண்டு இந்தத் தாக்குதலைத் தொடுத்துள்ளது. நீடித்த போருக்கே வாய்ப்பு இருப்பது போல் தோன்றுகிறது. இதற்கொரு மாற்று வழி முதலில் இந்த நெருக்கடியைப் புவிக்கோளுக்குக் கொண்டுவந்து சேர்த்த அந்தக் கற்பனைத் திறனிலிருந்து வரும் என்பது மிகையான எதிர்பார்ப்பாகவே இருக்கும். பச்சை வேட்டை நடவடிக்கை போன்ற போர்களின் நோக்கம் உண்மையிலேயே தன்னிறைவான வாழ்க்கை முறைகளின் இரகசியங்களை அறிந்திருப்பவர்களை ஒழித்துக் கட்டுவதே ஆகும்.

இந்தப் போரை நடத்துகிறவர்கள் வென்று விடுவார்களானால், அந்த வெற்றியானது ஆதிவாசி மக்களுக்கு மட்டுமல்ல, இறுதியில் மனிதகுலத்துக்கே ஒரு பிரளயப் பேரழிவின் விதைகளைத் தன்னுட் கொண்டிருக்கும். கொடிய முறையில் குளறுபடியாகிவிட்ட உலகத்தை வேறுவிதமாகக் கற்பனை செய்து பார்ப்பது நோக்கிய முதல் படி என்பது வேறுவிதமான கற்பனை கொண்டிருப்பவர்களை ஒழித்துக் கட்டும் முயற்சியைத் தடுத்து நிறுத்துவதுதான். இந்தக் கற்பனை முதலாளியத்துள் அடங்காது, அதேபோல் பொதுவுடைமைக்குள்ளும் அடங்காது. மகிழ்ச்சி என்றால் என்ன, மனநிறைவு என்றால் என்ன என்பதை அறவே மாறுபட்ட முறையில் புரிந்து கொள்ளும் கற்பனையே அது. இந்த இறுதியான வெற்றியை அடைய வேண்டுமானால், யார் நம் கடந்த காலத்தின் காவலர்களைப்போல் தோன்றக் கூடுமோ, யார் உண்மையில் நம் வருங்காலத்தின் வழிகாட்டிகளாக இருக்கக் கூடுமோ, அவர்கள் உயிர் பிழைத்து வாழ்வதற்கு ஒரு பௌதிக இடைவெளியை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது. இதைச் செய்ய வேண்டுமானால், நாம் கேட்க வேண்டிய கேள்விகள்:

நீரை ஆறுகளிலேயே விட்டுவிடுவோமா?
மரங்களைக் காடுகளிலேயே விட்டுவிடுவோமா?
பாக்சைட்டையும் தாதுப் பொருட்களையும் மலைகளிலேயே விட்டு விடுவோமா?

நம்மால் அப்படி விட்டு விட முடியாது என்றால் நாம் இந்தப் போரினால் பாதிக்கப்படுகிறவர்களிடம் ஒழுக்கம் பற்றிப் பேசுவதை நிறுத்தி விட வேண்டும்.
நன்றி!                                                                                                                                           

Wednesday, December 16, 2009

சியோனிஸ்டு யூதர்களும், இஸ்ரேலும் : சில குறிப்புகள்

தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்களுக்கு யூதர்கள், பாலஸ்தீனர்களின் வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய உண்டு. இப்பிரதி யூதர்கள் பற்றி தமிழ் பேசும் மக்களுக்கு அறிமுகமாகியுள்ளது போன்ற ஒப்பீட்டு முயற்சியல்ல. வெறுமனே ஒப்பீடுகளின் பெருமிதங்களில் மிதப்பதால் மனித இனம் விடுதலையை பெறவும் முடியாது.

1948 வரையில் இஸ்ரேல் என்பது கனவாக இருந்தது. அதற்காக யூதர்கள் உலகமெங்குமிருந்து ஒன்றுதிரண்டு உழைத்தார்கள். இன்று அமெரிக்க அரசியலில் கருத்துக்களை உருவாக்கி, கொள்கை முடிவுகளை எடுக்க வைக்கிற பெரும்பலம் கொண்டவர்களாக யூதர்கள் இருக்கிறார்கள். பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திய சர்வதேச மனித உரிமை குற்றங்களை ஐ.நா.மனித உரிமை சபை நியமித்த ‘கோல்டு ஸ்டோன் விசாரணை அறிக்கை’ இவ்வருடத்தில் சுட்டிக்காட்டியது. உடனடியாக இஸ்ரேலை காப்பாற்ற தனது அதிகாரத்தை பயன்படுத்தியது அமெரிக்கா. அரபு நாடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள சிறிய நாடான இஸ்ரேலின் பாதுகாப்பு தந்திர பொறிமுறை அதன் ஆயுதங்களைக் காட்டிலும் அமெரிக்காவின் ஆதரவில் தங்கியுள்ளது. உலகமெங்கும் சிதறிக்கிடந்த யூதர்களால் இவ்வளவு பலத்தையும், ஆதரவையும் எப்படி திரட்ட முடிந்தது? இந்த கேள்விக்கான விடை 18 நூற்றாண்டுகள் கழித்து யூதர்கள் இஸ்ரேலை நிறுவ முன்னெடுத்த திட்டங்களில், நகர்வுகளில் அடங்கியுள்ளது.கி.பி 70ஆம் ஆண்டில் எருசலேம் நகரம் ரோமை பேரரசின் முற்றுகைக்குள் சென்றது. எருசலேம் ஆலயம் அழிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து யூதர்கள் உலகமெங்கும் சிதறினார்கள். ஆனால் அவர்கள் தங்களது கலாச்சாரம், பண்பாட்டை கைவிடவில்லை. யூத சமூகத்தில் நாடு திரும்பும் வேட்கையும், கனவும் தலைமுறைகளை கடந்து தொடர்ந்தது.

சியோனிஸ்டு இயக்கத்தின் துவக்கம்
இஸ்ரேலுக்கான ஆதரவை திரட்டும் வேலை 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் துவங்கியது. யூதர்களுக்கான நாட்டை உருவாக்கும் கனவை வளர்த்தெடுத்து பல நாடுகளின் ஆதரவை திரட்டும் வேலையில் ஈடுபட யூதர்கள் 1897ல் சியோனிஸ்ட் இயக்கத்தை (Zionist movement) உருவாக்கினார்கள். யூதர்களின் நாட்டை உருவாக்க சியோனிஸ்ட் அமைப்பும், சியோனிஸ்டு யூதர்களும் ஈடுபட்டனர். ‘சியோனிஸ்ட்’ (Zionist) என்னும் சொற்பதம் எருசலேம் (Jerusalem) நகரின் அருகிலுள்ள சியோன் மலையை (Zion) நினைவுபடுத்துகிறது. சியோன் மலை இஸ்ரேலிய மக்களையும், எருசலேமையும் குறிப்பிடும் குறியீடாக யூதர்களின் மத நூல்களிலும், கிறித்தவர்களின் மத நூல்களிலும் பயன்படுத்தப்படுகிறது. யூதர்கள், கிறிஸ்தவர்கள் இணைந்து இஸ்ரேலை நிறுவ இக்கலாச்சார குறியீடு பெயரில் ‘சியோனிஸ்ட் இயக்கம்’ உருவாக்கப்பட்டது. உலகமெங்கும் சிதறியிருந்த யூதர்களின் மனங்களில் தங்களுக்கான நாட்டை உருவாக்க, அதற்காக உழைக்க இக்கலாச்சார குறியீடு தூண்டியது. அதற்காக உழைக்க சியோனிஸ்டு இயக்கம் உலக அளவில் யூதர்களை திரட்டியது.

(நிழற்படம்: சியோனிஸ்டுகளின் முதல் உலக மாநாடு, நன்றி:http://www.zionpress.org)

19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கிழக்கு ஐரோப்பாவில் குறிப்பாக போலந்து, ரசியா, ரொமானியாவில் வாழ்ந்த யூதர்கள் இணைந்து ‘சியோனுக்கு போகும்’ நோக்கத்துடன் ‘சியோன் விரும்பிகள்’ (Lovers of Zion) சங்கங்களை உருவாக்க துவங்கினார்கள். அவர்கள் பெரும்பாலும் வர்த்தகத்தில் ஈடுபட்டதால் பணக்காரர்களாக இருந்தனர். டெல் அவிவ் அருகிலுள்ள யாஃபா நகரில் விவசாய பாடசாலையை 1870ல் யூதர்கள் உருவாக்கினர். யாஃபா நகரில் 10 ஹெக்டேர் நிலத்தை சர் மோசஸ் மாண்ட்பியோர் என்கிற யூதர் வாங்கினார். ரசியாவில் இரண்டாம் சார் மன்னன் அலெக்சாந்தரின் கொலையை தொடர்ந்து 1881-1882 வரையில் யூதர்களுக்கு எதிராக கலவரங்கள் நடந்தன. அதற்கு பிறகு சியோனுக்கு திரும்பும் நோக்கம் யூதர்களிடம் மேலும் வலுவடைந்தது. 1882ல் டாக்டர்.யூதா லெய்ப் பென்ஸ்கர் எழுதிய கட்டுரையில் யூதர்களுக்கான நாடு, சுய விடுதலை ஆகிய கருத்தாக்கம் முன்வைக்கப்பட்டது. அதற்கு பிறகு பாலஸ்தீனத்திற்கு யூதர்கள் செல்வது ஆரம்பமானது. ‘சிரியா மற்றும் பாலஸ்தீன யூத விவசாயிகள் மற்றும் கலைஞர்களுக்கான ஆதரவு அமைப்பு’ ரசியாவில் அரசின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டது.

ரசியாவில் சட்டரீதியாக செயல்படும் அனுமதி கிடைத்தவுடன் ரசியாவில் வாழ்ந்த யூதர்களிடமிருந்து பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கான திட்டங்களை உருவாக்க பண வசூலை துவக்கினார்கள். பாலஸ்தீனத்தில் யூதர்களின் குடியிருப்புகளை உருவாக்கவும், விவசாயத்திற்கும் இவ்வமைப்புகள் திட்டங்களை செயல்படுத்தின. 1882ல் பாலஸ்தீனத்தில் 2200 ஹெக்டேர் நிலத்தை சில யூதர்கள் வாங்கினார்கள். ரசிய கலவரத்துக்கு பிறகு ரசியாவிலிருந்து யூதர்கள் பாலஸ்தீனத்திற்குள் குடிபுகுவது பெருகியது. அவர்களுக்கு சியோனிஸ்ட் அமைப்பு மற்றும் சியோன் விரும்பிகள் சங்கங்கள் பாலஸ்தீனத்தில் குடிபுக உதவிகளை செய்தன. துவக்கத்தில் சியோனிஸ்டுகளிற்கு யூதர்கள் அனைவரிடமும் ஆதரவு இருக்கவில்லை. உலகமெங்கும் சுமார் ஒன்றரை கோடி யூதர்கள் இருந்த 1921ம் ஆண்டில் சியோனிஸ்டு இயக்கத்தில் 7 லட்சத்து 70 ஆயிரம் யூதர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருந்தனர். பெரும்பான்மையான யூத மக்கள் யூதர்களுக்கு தனிநாடு வேண்டுமென்ற சியோனிஸ்டுகளின் கொள்கையை ஆதரிக்கவில்லை. யூதர்களுக்கான நாடு கொள்கையை கைவிடாமல், சியோனிஸ்டுகள் பலமான திட்டங்களை முன்னெடுத்தனர். யூத மக்களிடம் அக்கொள்கையை பரப்பி அவர்களை இணைப்பதிலும், உலக நாடுகளின் ஆதரவை திரட்டவும் பல்வேறு வழிகளையும், திட்டங்களையும் முன்னெடுத்தனர்.

யூத தேசிய நிதியும், பாலஸ்தீனத்தில் யூதர்களின் குடியேற்றமும்
சியோனிஸ்ட் இயக்கத்தின் 5வது உலக மாநாடு சுவிட்சர்லாந்து நாட்டில் பாசல் நகரில் 1901ல் நடைபெற்றது. அம்மாநாட்டில் யூதர்களுக்கான நாட்டிற்கு நிலங்களை வாங்குவதற்காக பொதுநிதியை உருவாக்க நீண்ட விவாதம் நடைபெற்றது. அதன் முடிவில் ‘யூத தேசிய நிதி’ உருவாக்கப்பட்டது. அந்த நிதி யூத மக்கள் அனைவருக்குமான பொது நிதியாக முடிவானது. 2 லட்சம் பவுண்ட்களுடன் நிதி துவங்கியது. 10, 20 என்று ஒவ்வொருவரும் வழங்கிய நிதி யூதர்களின் கனவை நோக்கிய திட்டங்களுக்கு செலவிடப்பட்டது. யூதர்கள் தங்களது தேசிய நிதி பங்களிப்பிற்கு கொடுத்த பெயர் செக்கெல். பின்னர் இஸ்ரேலின் நாணயத்திற்கு செக்கெல் என்று பெயர் சூட்டினார்கள். யூத தேசிய நிதியை நிர்வகிக்கும் தலைமையகம் எருசலேமாக உருவானது. 1902 முதல் சியோனிஸ்ட் ஆவணங்களுக்கான சிறப்பு முத்திரைகள் வெளிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. அதிலிருந்து கிடைத்த பணமும் யூத தேசிய நிதியில் சேர்ந்தது. யூத தேசிய நிதிக்கு கிடைத்த நன்கொடையை வைத்து 50 ஏக்கர் நிலத்தை ஹதேராவில் முதல் முறையாக வாங்கினார்கள். தொடர்ந்து யூத தேசிய நிதி (Jewish National Fund) மூலம் பல பகுதிகளில் பெருமளவு நிலங்களை வாங்கினார்கள். நிலங்களோடு கட்டமைப்புகளையும் உருவாக்க ஆரம்பித்தனர். வாங்கிய நிலத்தில் ஆலீவ் மரத்தோட்டங்கள், காடுகள், பள்ளிக்கூடங்கள், கல்வி நிலையங்களை உருவாக்கினார்கள். யூத தேசிய நிதி உருவாக்கப்பட்ட முதல் பத்து ஆண்டுகளில் சுமார் 85 ஆயிரம் யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியிருந்தனர். 1921ல் யூத தேசிய நிதியத்திடம் 25 ஆயிரம் ஏக்கர் நிலம் சொந்தமாகியிருந்தது. அப்போது 76 நாடுகளில் வாழ்ந்த யூதர்களின் எண்ணிக்கை சுமார் ஒன்றரை கோடி.

ஒவ்வொருவருக்கும் யூதர்களின் நாடு பற்றிய விழிப்புணர்வை உருவாக்க திட்டத்தை உருவாக்கினார்கள். யூத தேசிய நிதியத்திற்காக யூதர்களுக்கு சொந்தமான வீடுகள், மத நிலையங்கள், அலுவலகங்கள், பாடசாலைகள், வியாபார நிலையங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் நீல நிற உண்டியல் வைக்கப்பட்டது. பாலினம், வயது ஆகிய எந்த வேறுபாடுமில்லாமல் யூதர்களின் நிலத்தை உருவாக்க அனைவரும் ஈடுபடுத்தப்பட்டனர். இளவயதினர்களுக்கு சியோனிஸ்டு இயக்கம் தனியாக திட்டங்களை நடத்தியது. ஜனவரி 1926ல் யூத தேசிய நிதி அமெரிக்காவின் ஆதரவுடன் செயல்பட ஆரம்பித்தது. வனம், நீர், சுற்றுலா, பொழுதுபோக்கு, கல்வி, ஆய்வு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார்கள்.

1927ற்குள் 50 ஆயிரம் எக்கர் நிலத்தில் 50 யூத குடியிருப்புகள் உருவாக்கப்பட்டிருந்தது. 1935ற்குள் 1750 ஏக்கர் நிலத்தில் சுமார் 17 லட்சம் மரங்களை நட்டிருக்கிறார்கள். நீர் ஆதாரங்களை உருவாக்கினார்கள். 1935ல் யூதர்களிடம் 89,500 ஏக்கர் நிலமிருந்தது. யூதர்களின் குடியேற்றத்திற்கு பிரிட்டன் அதிகாரம் தடைகளை விதித்திருந்தது. 1904ல் பாலஸ்தீனத்தில் சுமார் 35 ஆயிரம் யூதர்கள் மட்டுமே இருந்தனர். அவர்களில் சுமார் 20 ஆயிரம் பேர் பாலஸ்தீனத்திலிருந்து பல நாடுகளுக்கும் திரும்ப போயிருந்தனர். ஆனால் யூத தேசிய நிதியை ஏற்படுத்தி தொடர்ந்து நிலங்களை வாங்கி குடியேற்றங்களை உருவாக்கியதால் 1939ற்குள் 4 லட்சத்து 50 ஆயிரம் யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியேறினர். அவர்களில் சுமார் 10 விழுக்காடு யூதர்கள் யூத தேசிய நிதிக்கு சொந்தமான நிலத்தில் இருந்தனர். பிரிட்டன் யூதர்கள் புதிய குடியிருப்புகளை உருவாக்க தடை விதித்தது. ஆனாலும் பிரிட்டனின் தடையை மீறி யூதர்கள் பெருமளவில் நிலங்களை வாங்கினார்கள். அவற்றில் குடியிருப்புகள், கட்டுமானங்களை கட்ட திட்டமிட்டார்கள். இரவில் ஒரேயடியாக 10 நகரங்களை யூத தேசிய நிதிக்கு சொந்தமான நிலத்தில் கட்டி எழுப்பியிருந்தனர். டெல் அவிவ் நகரும் யூத தேசிய நிதியிலிருந்து உருவாக்கப்பட்டது தான். யூதர்களுக்கான நாட்டை உருவாக்கும் இந்த வேகமும், வேட்கையும் தான் இஸ்ரேலை உருவாக்கியது. 1939ல் இரண்டாம் உலகப் போர் துவங்கியது. அப்போதும் யூத தேசிய நிதிக்கான நன்கொடைகள் அதிகமாக குவிந்தது.

(படம்: பாலஸ்தீனத்தை நோக்கிய யூதர்களின் கடல் பயணம், zionpress.org)
இட்லரின் இன அழிப்பு கொடுமைகளுக்கு பிறகு யூதர்களின் பெரும்பகுதியினர் அமெரிக்கா மற்றும் பாலஸ்தீனத்திற்கு குடிபெயர்ந்தனர். பாலஸ்தீனத்தில் நுழைய சட்டப்புறம்பான வழிகளையும் பயன்படுத்தினார்கள். 1939ல் ஐரோப்பாவிலிருந்து யூதர்களை காப்பாற்றி கடல் வழியாக கொண்டு சென்று பாலஸ்தீனத்திற்குள் குடியேற்றினார்கள். கடல் பயணங்கள் சாத்தியமில்லாத போது அரபு நாடுகளில் தங்கியிருந்த யூதர்களை நிலம் வழியாக குடியேற்றினார்கள். இவை அனைத்தும் சட்டத்துக்கு எதிராக செய்யப்பட்ட குடிபெயர்வுகள். 1945 துவங்கி மூன்று ஆண்டுகளில் 70 ஆயிரம் யூதர்களை வட ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து 65 முறை கடல் பயணங்கள் மூலம் பாலஸ்தீனத்திற்குள் குடியேற்றினார்கள். இதற்காக கப்பலை வாங்கவும், மாலுமிகளை நியமிக்கவும், சைப்பிரசில் இடைத்தங்கல் முகாம்களோடு தொடர்பு கொள்ளவும் தனியாக குழுக்களும், அமைப்பும் உருவாக்கப்பட்டது. ஆனால் இவை அனைத்திலும் சியோனிஸ்ட் இயக்கத்தின் பங்கிருந்தது.

(படம்: பாலஸ்தீனத்தில் நுழைந்த யூதர்கள்...)
கூட்டுறவு விவசாய பண்ணைகள்
கலிலேயா கடற்கரை பகுதியில் 1909ல் முதல் விவசாய கூட்டுறவு பண்ணை உருவாக்கப்பட்டது. அங்கே வேலை செய்த யூதர்களில் பலர் கடுமையான உழைப்பிற்கு ஈடுகொடுக்க முடியாமல் யோர்தான் நாட்டின் நகரங்களுக்கும், புலம்பெயர் தேசங்களுக்கும் சென்றனர். 1914ல் அந்த கூட்டுப்பண்ணையில் 50 யூதர்கள் மட்டுமே வேலை செய்தனர். ஒரேயடியாக நாட்டை உருவாக்ககுவதற்கு பதிலாக சிறிய சிறிய திட்டங்களாக உருவாக்கி, அவற்றில் யூதர்கள் அனைவரையும் ஈடுபட வைத்து, யூத ஒற்றுமையை உருவாக்கினார்கள். அதன் பிறகு அனைத்து யூதர்களையும் ஒருங்கிணைப்பது அவர்களுக்கு எளிதாக இருந்தது. தனித்தனியாக நிலங்களை வாங்கும் போது தனிநபர்களால் விவசாயத்திற்கு தேவையான முதலீடு, உழைப்பு மற்றும் குடியிருப்புகளின் பாதுகாப்பு சிக்கல்கள் உருவாகும். ஆனால் கூட்டுறவு விவசாய முறையில் உழைப்பு, உற்பத்தி வலுவடைவது ஒருபுறம். கூட்டுறவு விவசாய முறையில் யூதர்களை ஒற்றுமையாக இணைத்து கூட்டாக செயல்படும் வாய்ப்பு இருந்தது. இந்த கூட்டுறவு முறையினால் அயல்நாடுகளிலிருந்து வந்து நிலங்களில் குடியேறுகிற யூதர்களின் வருமானம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது நோக்கமாக இருந்தது. அதில் அவர்கள் வெற்றியும் பெற்றனர். துவக்கத்தில் கூட்டுறவு பண்ணைகளில் சோசலிச சிந்தனைத் தாக்கம் இருந்தது. இஸ்ரேல் நாடாக உருவாகிய பிறகு கூட்டுறவு விவசாயம் குறைந்து தனியார்மயம் வளர்க்கப்பட்டது.

யூதர்களுக்கு ஆதரவான பிரிட்டனின் பால்பஃர் பிரகடனம்
1917ல் அறிவியலாளரும், சியோனிஸ்டு இயக்கத்தின் தலைவர் செய்ம் வெய்ஸ்மன் பாலஸ்தீனத்தில் யூதர்களின் நாட்டை நிறுவ ஆதரவை பிரகடனம் செய்ய பிரிட்டன் அரசை வற்புறுத்தி அதில் வெற்றியும் பெற்றிருந்தார். லண்டனில் வசித்த லார்டு ரோத்ஸ்சைல்டு வீட்டிற்கு பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆர்தர் பால்பஃர் நவம்பர் 2, 1917ல் கடிதம் ஒன்றை அனுப்பினார். அக்கடிதம் தான் பால்பஃர் பிரகடனம். யூதர்களின் நாடு அதுவரையில் சியோனிஸ்ட் இயக்கம் மற்றும் யூதர்களின் திட்டமாக இருந்தது. ஆனால் பால்பஃர் பிரகடனம் மூலம் பிரிட்டன் யூதர்களுக்கான நாட்டிற்கான முதல் அங்கீகாரம். உலகின் வல்லரசு நாடான பிரிட்டனின் ஆதரவை பெற யூதர்கள் தந்திரமான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். லார்டு ரோத்ஸ்சைல்டு சியோனிஸ்ட், பெரும் பணக்காரர், வங்கி உரிமையாளர், உயிரியலாளர், அரசியல்வாதி ஆகிய பலமுகங்களை கொண்டவர். பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினராக 11 வருடங்கள் பணியாற்றியிருந்தார். லார்டு ரோத்ஸ்சைல்டு யூதர்களுக்கான நாட்டை உருவாக்க தனது அரசியல், சமூக செல்வாக்கை பயன்படுத்தினார். முதல் உலக யுத்தம் நடந்த அவ்வேளை மத்திய கிழக்கில் பிரிட்டன் போரில் தொய்வு நிலையில் இருந்தது. பிரிட்டனுக்கு தேவையான ஆதரவை திரட்டும் நிலையில் சியோனிஸ்ட் இயக்கம் அமெரிக்காவில் பலமாகவும், அரசியல் அழுத்தம் கொடுக்கும் செல்வாக்குடனும் இருந்தது. யூதர்களின் நாட்டை பிரிட்டன் ஆதரிப்பதன் மூலம் யூதர்கள் அமெரிக்காவை பிரிட்டனுக்கு ஆதரவாக போரில் இறங்க வைக்கமுடியுமென்று பிரிட்டனுக்கு நம்பிக்கையளித்தனர்.

பிரிட்டனுக்கு ஆதரவாக துருக்கியை எதிர்த்து போரிடவும் பாலஸ்தீனத்திலிருந்த யூதர்கள் தயாரானார்கள். அதைப் போல ரசியாவிலிருந்த யூதர்கள் போல்ஸ்விக் புரட்சியில் பங்கெடுத்தனர். அதனால் ரசியா முதல் உலகப் போரில் தொடர்ந்து போரிட ரசியாவில் குடியிருந்த யூதர்கள் செல்வாக்கு செலுத்துவார்களென்று பிரிட்டனுக்கு நம்பிக்கையூட்டினார்கள். பிரிட்டன் யூதர்களுக்கு ஆதரவளிக்காமல் போனால் ஜெர்மனி பாலஸ்தீனத்தை கைப்பற்றுமென்றும் சியோனிஸ்டுகள் பிரிட்டனுக்கு தெரிவித்தனர். அப்போதைய பிரிட்டன் பிரதமர் லாய்டு ஜார்ஜ் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் பால்பஃர் கிறிஸ்தவ வழிபாட்டில் தீவிரமாக இருந்தனர். அவர்களிடம் மத நம்பிக்கையை பயன்படுத்தி ‘யூதர்களை அவர்களது தாய்நிலத்தில் மீண்டும் குடியேற்றுவதன் மத ரீதியான’ விளக்கங்களை சொல்லி ஆதரவை திரட்டினார்கள். இவை எல்லாவற்றிற்கும் நேரடி சந்திப்புகள் மற்றும் செய்தி ஊடகங்கள் ஆகிய அனைத்தையும் பயன்படுத்தினார்கள். யூதர்கள் செய்த இந்த அரசியலின் விளைவாக யூதர்களுக்கான நாடு பற்றிய விருப்பத்தை பால்பஃர் பிரகடனம் வழியாக பிரிட்டன் வெளியிட்டது. முதலாம் உலகப்போருக்கு பின்னர் உருவான நாடுகளின் கூட்டமைப்பு (பின்னர் அது ஐ.நா சபையாக உருவெடுத்தது) 1922ல் பால்பஃர் பிரகடனத்தை அங்கீகரித்து பாலஸ்தீனத்தை ஆளும் பொறுப்பை பிரிட்டனுக்கு வழங்கியது.

பாலஸ்தீனம் பிரிட்டனின் ஆளுகைக்குள் வந்ததும் யூதர்களின் நம்பிக்கை அதிகமானது. சியோனிஸ்டுகளுக்கு ஆதரவு பெருக ஆரம்பித்தது. 1930களில் இதனால் பல நாடுகளிலிருந்தும் பாலஸ்தீனத்திற்கு குடிபுகுந்த யூதர்கள் எண்ணிக்கை அதிகமானது. அதைத் தொடர்ந்து விழிப்படைந்த பாலஸ்தீனர்களுக்கும், யூதர்களுக்கும் மத்தியில் 1936ல் மோதல் துவங்கியது. மோதலை நிறுத்துவதற்காக பாலஸ்தீனத்திற்கு யூதர்கள் குடிபெயர்வதற்கு 1939ல் பிரிட்டன் கட்டுப்பாடுகளை விதித்தது.

யூதர்களின் அமெரிக்க ஆதரவு
உடனடியாக அமெரிக்காவில் ஏற்கனவே அரசியல், ஊடகம், தொழில்த்துறை ஆகிய அனைத்திலும் ஊடுருவி செல்வாக்கு செலுத்திய சியோனிஸ்ட் யூதர்கள் அமெரிக்க அரசின் ஆதரவை திரட்டும் வேலையில் இறங்கினார்கள். தங்களுக்கு அமெரிக்க செனட்டர்களிடம் ஆதரவு திரட்டினார்கள். அதற்காக தொடர்ந்து சந்திப்புகள், கூட்டங்கள், கடிதம் ஆகிய அனைத்தும் பயன்படுத்தப்பட்டன. அமெரிக்க அதிபர் ட்ருமன் செனட்டராக இருக்கும் போதே அவருடன் நெருங்கிய தொடர்புகளை உருவாக்கினார்கள். ட்ருமன் அமெரிக்க அதிபரானதும் யூதர்களுக்கு சுய நிர்ணய உரிமை இருப்பதாக குறிப்பிட்டு பால்பஃர் பிரகடனத்தை அங்கீகரித்தார். இட்லரின் கொடுமைகளுக்கு ஆளானதால் யூதர்களுக்கு என்று தனிநாடு அவசியம் என்னும் கருத்து ட்ரூமன் நம்பினார்.

ட்ரூமனை தங்களுக்கு ஆதரவாக்குவதற்கு சியோனிஸ்டுகள் பலவிதமான அரசியல் அழுத்தங்களையும், தந்திரங்களையும் கையாண்டார்கள். அரபு நாடுகளுக்கும், சோவியத் ரசியாவிற்கும் மத்தியில் கூட்டு வலுவடைந்து வருவதாக ட்ரூமனின் ஆட்சியின் போது வெளியுறவுத்துறையும், பாதுகாப்புத் துறையும் நம்ப வைக்கப்பட்டது. அதனால் அமெரிக்காவுக்கு எண்ணை விநியோகம் தடைபடுமென்று கருத்து உருவாக்கப்பட்டது. அவற்றை எதிர்கொள்ள மத்திய கிழக்கில் அமெரிக்கா யூதர்களுக்கு ஆதரவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வற்புறுத்தப்பட்டது. அமெரிக்காவின் தலையீடு துவங்கியது. பிரிட்டனும், அமெரிக்காவும் இணைந்து ‘ஆங்கிலோ-அமெரிக்கன் விசாரணைக் குழு’ அமைத்தன. அக்குழு 1946ல் பாலஸ்தீனம் பற்றிய சில பரிந்துரைகளை வைத்தது. யூதர்கள் அல்லது அரபு மொழி பேசும் பாலஸ்தீனர்களுக்கான தனிநாடுகள் பாலஸ்தீனத்தில் உருவானால் பொது அமைதி கெட்டு குழப்பங்களும், மோதல்களும் நடைபெறும் ஆகையால் யூதர்கள் மற்றும் அரபு மொழி பேசும் மக்கள் மத்தியில் நம்பிக்கை உடன்படிக்கை ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை உருவாகுக்க வேண்டும் என்று அக்குழு பரிந்துரைத்தது. யூதர்களை பாலஸ்தீனத்தில் குடிபுக அனுமதிக்க வேண்டும், தன்னாட்சியுரிமையுடன் இரு மாநிலங்கள் உருவாக்க வேண்டும். எருசலேம், பெத்லெகேம், நெகெவ், தெற்கு பாலஸ்தீனம் ஆகிய பகுதிகளை நிர்வகிக்க வலுவான மைய அரசு ஒன்றையும் உருவாக்க வேண்டுமென்று அக்குழு பரிந்துரைத்தது.

அக்குழுவின் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதற்கு பிறகு வன்முறை தாக்குதல்கள் அதிகமானது. அதனால் பிரிட்டன் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேற முடிவெடுத்து, ஏப்பிரல் 2, 1947ல் ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனத்தின் பொறுப்பை ஏற்றுக்கொள்ள சிறப்புக்குழுவை உருவாக்க தீர்மானம் கொண்டுவந்தது. அக்குழு முன்வைத்த யோசனைகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் ஐக்கிய நாடுகள் சபையில் யூதர்களுக்கும், பாலஸ்தீனர்களுக்கும் தனிநாடும், எருசலேம் சர்வதேச பகுதியாகவும் அறிவிக்கலாமென்று ஐ.நா தீர்மானம் எண் 181 பரிந்துரைத்தது. ஆனால் அதுவும் நிறைவேறவில்லை. இதற்கிடையே சியோனிஸ்டுகள் ட்ரூமனிடம் தங்களது செல்வாக்கு மற்றும் அழுத்தங்களை செலுத்த தவறவில்லை. இந்த நிலையில் பிரிட்டன் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறும் காலக்கெடுவும் வந்தது. மே 14, 1948ல் டெல் அவிவ் அருங்காட்சியகத்தில் கூடிய சியோனிஸ்டு யூத மக்கள் பேரவை இஸ்ராயேல் நாட்டை நிறுவியுள்ளதாக பிரகடனத்தை வெளியிட்டது. பாலஸ்தீனம் மீதான பிரிட்டனின் அதிகாரம் முடிவிற்கு வந்த தினத்தில் இப்பிரகடனம் வெளியானது. உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றான ஐக்கிய அமெரிக்கா அதிபர் ட்ரூமன் இஸ்ரேலை அதே இரவில் அங்கீகரித்தார். ட்ரூமனின் அங்கீகார அறிவிப்பு ஊடகங்களுக்கு வெளியாகும் வரையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கும், அமெரிக்காவின் ஐ.நா பிரதிநிதிகளுக்கும் கூட ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. மூன்று நாட்கள் கடந்து மற்றொரு வல்லரசான சோவியத் ரசியா அங்கீகரித்தது. இஸ்ரேல் பிரகடனம் செய்யப்பட்ட போது சுமார் 350 யூத குடியிருப்புகளும், 6 லட்சத்து 50 ஆயிரம் யூதர்களும் குடிபுகுந்திருந்தனர். அவற்றுள் 233 யூத குடியிருப்பு நகரங்கள் யூத தேசிய நிதியால் உருவாக்கப்பட்டவை.

முற்றுகைக்குள் பாலஸ்தீனர்கள்
அரபு-இஸ்ரேல் மோதல் துவங்கியது. 1948ல் சுமார் 7 லட்சம் பாலஸ்தீனர்கள் அகதிகளாக்கப்பட்டனர். 1967ல் சிரியா, யோர்தான், எகிப்து ஆகிய நாடுகளுடன் இஸ்ரேல் போரிட்டது. அப்போரின் முடிவில் காசா பகுதி, கிழக்கு எருசலேம், மேற்கு கரையோரம் ஆகிய பாலஸ்தீன பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. சுமார் 30 லட்சம் பாலஸ்தீனர்களின் சுதந்திரம் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பால் பறிக்கப்பட்டது. இதுபற்றி விவாதிக்க நவம்பர் 1967ல் ஐ.நா பாதுகாப்புச் சபை கூடி விவாதித்தது. இக்கூட்டத்தில் இஸ்ரேலும் அழைக்கப்பட்டிருந்தது. ஆக்கிரமிப்பு பகுதிகளிலிருந்து இஸ்ரேலிய படைகள் வெளியேற வேண்டும். அப்பகுதி நாடுகளின் எல்லை, இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை மதிக்க வேண்டும் என்று வற்புறுத்தியது ஐ.நா பாதுகாப்புச் சபையின் தீர்மானம் எண் 242. ஆனால் இன்றும் காசா பகுதி, கிழக்கு எருசலேம், மேற்கு கரையோரம் ஆகிய பகுதிகள் இஸ்ரேலின் முற்றுகைக்குள்ளும், ஆக்கிரமிப்பிலும் இருக்கிறது. இதனால் பாலஸ்தீனர்களின் வாழ்க்கை இயல்பாக இல்லை. பாலஸ்தீன மக்களின் வளங்களை இஸ்ரேல் சுரண்டுகிறது. இஸ்ரேலிய ராணுவத்தின் தாக்குதல்கள், பாலஸ்தீன ஆயுதப் போராட்ட இயக்கங்களின் எதிர்தாக்குதல்கள் என்று சமாதானத்தையும், மனித உரிமைகளையும் இழந்துள்ளனர் அம்மக்கள்.

இஸ்ரேலின் தாக்குதல்கள் மற்றும் ஆக்கிரமிப்பிற்கு எதிராக பாலஸ்தீன இயக்கங்களால் நடத்தப்படுகிற தற்கொலை தாக்குதல்களும், ராக்கெட்களும் இஸ்ரேலிய மக்களையும் பாதிக்கிறது. ஆனாலும் பாதிப்புகளின் கொடூரமும், உக்கிரமான மனித உரிமை மீறல்களும் பாலஸ்தீனர்களையே வதைக்கிறது.
பாலஸ்தீன பகுதிகளுக்கு உணவு, மருந்து, அடிப்படை தேவைகளுக்கான பொருட்கள் உட்பட அனைத்தையும் இஸ்ரேலிய ராணுவத்தின் சோதனை கெடுபிடிகளை கடந்தே கொண்டு செல்ல முடியும். ஆனால் பாலஸ்தீன மக்களின் நடமாடும் உரிமையை மறுத்து நூற்றுக்கணக்கான தடுப்பு அரண்களையும், சுற்றுச்சுவர்களையும், ராணுவக் கெடுபிடிகளையும் உருவாக்கி தடுக்கிறது இஸ்ரேல். அம்மக்களுக்கு உணவு, மருந்து உட்பட எதுவும் சரியாக கிடைப்பதில்லை. உயிரைக் காப்பாற்ற அவசர மருத்துவ ஊர்திகள் இத்தடைகளை கடந்து செல்வது எளிதல்ல. அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் தடுக்கப்படும் அம்மக்கள் நூற்றுக்கணக்கான மைல் தொலைவில் பயணம் செல்ல வேண்டிய கொடூரமான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அப்படி நீண்ட தொலைவு பயணத்திற்கான பணச்செலவு அவர்களிடம் இருப்பதில்லை. அவர்கள் வேலை செய்ய முடியாதபடி இந்த தடுப்பு அரண்களும், சுவர்களும், ராணுவக் கெடுபிடியும் உள்ளது. பாலஸ்தீனர்களில் 65 விழுக்காடு மக்கள் வேலையில்லாமை மற்றும், 75 விழுக்காடு மக்கள் வறுமையிலும் வாடுகிறார்கள்.

கோல்டு ஸ்டோன் விசாரணை அறிக்கை
டிசம்பர் 2008ல் காசா பகுதியில் பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின் மனித உரிமை குற்றங்களை கண்டறிய தென்னாப்பிரிக்க நீதிபதி கோல்டு ஸ்டோன் தலைமையில் குழுவை ஐ.நா மனித உரிமை சபை நியமித்தது. அக்குழு விசாரணையின் முடிவில் 575 பக்கங்களில் அறிக்கையை ஐ.நா மனித உரிமை சபையிடம் கையளித்தது. ஆனால் அந்த அறிக்கையை இஸ்ரேலும், அமெரிக்காவும் நிராகரித்தன. அவ்வறிக்கையில் இஸ்ரேல் சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு எதிராக நடந்துகொண்டதை விரிவாக பட்டியலிட்டிருக்கிறது. அவற்றில் பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துகிற பொருளாதார தடைகள், மின்சார தடை, எரிபொருள் தடை, மீன்பிடி தடை உட்பட அனைத்து மனிதாபிமான தடைகளையும் விவரித்து அவை சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவை என்பதை தெரிவித்தது. ஆனால் அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதற்கான பலம் ஐ.நாவிடம் இல்லை. இஸ்ரேலின் மனித உரிமை குற்றங்களை விசாரிப்பதற்காக பாலஸ்தீன ஆதரவு நாடுகள் கொண்டு வந்த தீர்மானங்களை அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேல் புறக்கணிக்கிறது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உலகின் இஸ்லாமிய மற்றும் பல நாடுகளும் இருக்கிற போதிலும் சர்வதேச விசாரணையை நடைபெற வைப்பது எளிதல்ல. அதற்கு காரணம் அமெரிக்காவிலுள்ள யூதர்களும், யூத அமைப்புகளும் தொடர்ந்து அமெரிக்காவை தங்கள் பக்கமாக வைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்

காசா பகுதில் விமான தாக்குதல்கள், பீரங்கி தாக்குதல்கள், கனரக ஆயுதங்களின் தாக்குதல்களை இஸ்ரேலிய படைகள் செய்திருந்தது. அவற்றில் 1444 பாலஸ்தீன பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பாலஸ்தீன அரசின் கட்டுமானங்கள், பாலஸ்தீன காவல்த்துறை, நிர்வாக அலுவலகங்கள் ஆகியவையும் தாக்குதலுக்குள்ளானது. பாலஸ்தீனர்களின் ராணுவ முக்கியத்துவமில்லாத கட்டுமானங்கள் மற்றும் விவசாய நிலங்களையும் இஸ்ரேலின் தாக்குதல்கள் அழித்திருந்தன. இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் 240 பேர் பாலஸ்தீன காவல்த்துறையை சார்ந்தவர்கள். பாலஸ்தீன போராளிகள் பொதுமக்களுக்கு மத்தியிலிருந்து மக்களை கேடையமாக வைத்து இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசுவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியிருந்தது. அதன் நிமித்தமாகவே இஸ்ரேலிய படைகள் தாக்குதலை தொடுப்பதாகவும் பரப்புரைகள் நடந்தன. ஆனால் கோல்டு ஸ்டோன் அறிக்கையில் பாலஸ்தீன போராளிகள் நகர்ப்புறங்களில் மக்களுக்கு மத்தியிலிருந்து ஏவுகணைகளை வீசியதை தெரிவித்தது. அதே வேளை மக்களை தாக்குதல் நடந்த பகுதிகளுக்கு செல்ல பாலஸ்தீன போராளிகள் வற்புறுத்தியதாக ஆதாரமில்லை என்று தெரிவித்திருந்தது.

இந்தியா உட்பட உலக நாடுகள் ஆதரவுடன் வன்னி மக்கள் மீது சிறீலங்கா அரசு நடத்திய தாக்குதலை நியாயப்படுத்த இஸ்ரேலைப் போல ‘மனிதக் கேடையங்கள்’ பரப்புரையை இந்திய ஊடகங்களும், இந்திய அரசும் நடத்தியது கவனிக்கத்தக்கது. ஆனால் அப்போது ஐ.நாவும், மேற்குலக நாடுகளும் மக்கள் அடர்த்தியான குடியிருப்புகள், பாதுகாப்பு வலையம், மருத்துவமனைகள், பாடசாலைகள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்திய சிறீலங்காவிற்கு ஆதரவாக நின்றன. மக்கள் மீதான தாக்குதலை நிறுத்துவதற்கு சிறீலங்கா மீது கடுமையான அழுத்தங்களை பயன்படுத்தவில்லை. ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அழிக்க சிங்கள பேரினவாத அரசுக்கு ஆயுதங்கள், ஆலோசனைகளை கொடுத்த நாடுகளின் வரிசையில் இஸ்ரேலும் இடம்பெற்றது. இவையெல்லாம் உலக நாடுகளின் அரசியல் லாபங்களுக்கு ஏற்ப நடத்தப்படுகிற அரசியல் விளையாட்டுகள். அவை வெற்றிபெறுவதில் ஊடகங்களின் பங்குண்டு.

இஸ்ரேலின் ஊடக பரப்புரைகள் அமெரிக்க மக்களுக்கும், உலகிற்கும் இஸ்ரேலின் மனித உரிமை மீறல்கள், ஆக்கிரமிப்புகளை வெளியிடாமல் இருப்பதற்காக ஊடகவியலாளர்களோடு இஸ்ரேலின் பரப்புரைக் குழு உறவுகளை நெருக்கமாக உருவாக்கியுள்ளது. மோதல்கள், தாக்குதல்கள், ஆக்கிரமிப்புகளில் ஊடகங்கள் வகிக்கிற பங்கையும், அரசியலையும் மக்கள் கவனிக்க தவறுகிறார்கள். போரில் அல்லது ஆக்கிரமிப்புகளில் மக்கள் எத்தகைய செய்திகளை அறிய வேண்டும், எப்படி அவற்றை புரிந்துகொள்ள வேண்டும் என்பதை ஊடக நிறுவனங்களே தீர்மானிக்கின்றன. ஆக்கிரமிப்பு மற்றும் போரின் போது ஊடகங்களில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு வார்த்தையிலும் அரசியல் மறைந்துள்ளது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்புகளையும், தாக்குதல்களை சிஎன்என் தொலைக்காட்சி பலமுறை ‘தற்காப்பு நடவடிக்கை’ என்று விவரித்திருந்தது. வன்முறைகளில்லாத பாலஸ்தீன கிளர்ச்சிகளும், எதிர்ப்புகளும் பயங்கரவாதமாக காட்சிப்படுத்தப்பட்டன.

பாலஸ்தீனர்களது குடியிருப்புகள், நிலங்களை சியோனிஸ்டுகளும் இஸ்ரேலிய ராணுவத்தினரும் அழிக்கிறார்கள். பாலஸ்தீன மக்களின் குடியிருப்புகள் மீது இஸ்ரேலிய விமானங்களும், பீரங்கிகளும், எந்திர துப்பாக்கிகளும் குண்டுகளை வீசுகின்றன. ஆனால் பாலஸ்தீனர்களின் தரப்பு நியாயம் ஊடகங்களில் வெளிவராதபடி இஸ்ரேல் பரப்புரைகளை நடத்துகிறது. 1982ல் இஸ்ரேல் லெபனானை ஆக்கிரமிப்பு செய்த போது இஸ்ரேலின் ஊடக பரப்புரை அமெரிக்காவில் துவக்கப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆதரவான பரப்புரைகளை முன்னெடுக்கிற ‘அமெரிக்க இஸ்ரேலி பொது விவகாரக் குழு’ இஸ்ரேலுக்கு ஆதரவை திரட்டுவதோடு நிறுத்தவில்லை. இஸ்ரேலின் மீது குற்றம் சுமத்துகிற செய்திகளை வெளியிடும் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களை கண்டித்து போராட்டங்கள் நடத்துவது, நெருக்கடி கொடுப்பது ஆகியவற்றிலும் ஈடுபடுகிறார்கள். அமெரிக்காவிலுள்ள இஸ்ரேலுக்கு ஆதரவான பலமான அமைப்பாக இது உருவெடுத்துள்ளது.

இரண்டாயிரம் ஆண்டுகளாக உலகமெங்கும் சிதறிக்கிடந்த யூதர்கள் திரண்டு தங்களுக்கான கனவு தேசத்தை உருவாக்க இணைந்த ஒற்றுமையும், அரசியல் பலமும் உலகமெங்கும் விடுதலைக்காக போராடுகிற மக்களுக்கு உதாரணமாக இருக்கலாம். ஆனால் யூதர்களது வரலாற்றிலிருந்து முரண்பாடுகளையும் அடையாளம் காண வேண்டும். அத்தகைய முரண்பாடுகள் மனிதகுல வளர்ச்சிக்கும், மனித விடுதலைக்கும் பெரிய தடைகளாக இருப்பவை. அத்தகைய முரண்பாடுகளோடு அனைத்து மக்களுக்குமான நிரந்தர விடுதலையை அடைய முடியாது. யூதர்கள் இரண்டாம் உலகப் போரின் போது இட்லரின் வதை முகாம்களில் சித்திரவதைக்குள்ளான மக்கள் உருவாக்கிய இஸ்ரேல் இன்று பாலஸ்தீன மக்களின் உரிமைகளை மறுத்து, மனித உரிமை குற்றங்களில் ஈடுபடுவது அத்தகையது. பாலஸ்தீனர்களின் விடுதலை, உரிமைகளை மறுப்பதால் மோதல் நீங்காமல் இன்றும் தொடர்கிறது. நீண்ட காலமாக தங்களது நிலத்திலிருந்து அகற்றப்பட்ட மக்கள் ஆதிக்க சக்தியாகி அடக்குமுறை ஆயுதத்தை பயன்படுத்துவது எவ்வளவு பெரிய முரண்பாடு. அதிகாரங்கள் நகர்த்தப்படுவதால் மட்டுமே மனித இனம் விடுதலையை அடைய முடியாது. அடிமையாக இருந்த மக்கள் அதிகாரங்களை கைப்பற்றும் போது மனித விடுதலையை மையப்படுத்தும் அரசியல் வடிவம் உருவாகாமல் போனால் அவர்களே ஆதிக்க சக்திகளாகி அடக்குமுறையாளர்கள் ஆகிறார்கள். யூதர்களின் வரலாறு உலகிற்கு இதை உணர்த்துகிறது.

தகவல் உதவி:
http://english.aljazeera.net/
http://www2.ohchr.org/english/bodies/hrcouncil/specialsession/9/FactFindingMission.htm
http://www.un.org
http://www.trumanlibrary.org/
http://www.palestinefacts.org/
http://www.jnf.org
http://www.mfa.gov.il

டிசம்பர் 2009, உன்னதம் இதழுக்காக எழுதப்பட்டது.
கீற்று இணையத் தளத்திலும் வாசிக்கலாம்.

Monday, November 16, 2009

நோபல் விருதில் வெளிப்படும் அரசியல்

2009ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் விருது "சர்வதேச உறவு மற்றும் மக்களிடையே ஒத்துழைப்பை பலமடைய செய்யும் அசாதாரணமான முயற்சிகளுக்காக" அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல் விருதை அறிவித்த தேர்வு குழு ‘மோதல்கள், அணு ஆயுதங்கள், தட்பவெட்பநிலை மாற்றம் ஆகிய பிரச்சனைகளுக்கான தீர்விற்காக முயற்சிகளை உறுதிப்படுத்தும் விதமாக’ விருதை வழங்குவதாக தெரிவித்தது. சர்வதேச உறவை வலுப்படுத்துதல், பேச்சுவார்த்தைகளுகான புதிய சூழ்நிலையை உருவாக்குதல், ஐ.நா அமைப்புகளில் அமெரிக்காவின் கடப்பாடுகளை புதுப்பித்தல் ஆகிய காரணங்களுக்காக விருது வழங்கப்படுவதாக அறிவித்திருக்கிறது. ஒபாமா பதவியேற்று 11 நாட்களுக்கு பிறகு நோபல் விருதுக்கான விண்ணப்ப நாள் முடிந்தது. விருதுக்கான முதல் தேர்வு பட்டியலை உருவாக்கும் பணியும் மார்ச் மாதத்தோடு முடிவடைந்தது. ஒபாமாவுக்கு பதவியேற்ற மிகக்குறுகிய காலத்தில் நோபல் விருதை வழங்குவது பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது. அவசரமாக ஒபாமாவுக்கு விருது வழங்க காரணமென்ன?

ஜார்ஜ் புஸ் அதிபராக இருந்த போது ஈராக், ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமிப்பு தாக்குதல்களில் அமெரிக்கா ஈடுபட்டு பேரழிவை உருவாக்கியது. உலக பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக சதாம் உசேன் ஈராக்கில் பேரழிவு ஆயுதங்களை உற்பத்தி செய்வதாக அறிவித்தது அமெரிக்கா. அதற்காக ஐ.நாவில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பவுல் ஆற்றிய உரை ஐ.நா மற்றும் உலக நாடுகளையே ஏமாற்றியது ஆகியவை தனிக்கதை. அமெரிக்காவின் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகளை தடுக்க ஐ.நா மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு வலுவில்லாமல் போனது. உலக ஒழுங்குமுறைகளை மதிக்காத ஜார்ஜ் புஸ் ஆட்சியில் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புக் குரல்கள் உலகமெங்கும் உருவாக துவங்கியது. அதே வேளையில் அமெரிக்கா கட்டியெழுப்பிய ஒற்றைமய உலகமயமாக்கல் பொருளாதார கொள்கையின் விளைவுகள் பங்குச்சந்தை சரிவு மற்றும் பொருளாதார வீழ்ச்சியை உருவாக்கியது. பல லட்சம் பேர் வேலையிழந்தனர். அமெரிக்காவின் வலிமையான ராணுவம் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் ஒருபக்கம் திணறிக்கொண்டிருந்த போது, அமெரிக்காவின் முதலாளித்துவ நிறுவனங்கள் சரிவை சந்தித்தன.

உலக அரங்கில் அமெரிக்க பேரரசின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி ஏகாதிபத்தியத்தை நிலைநிறுத்தும் முகமொன்று தேவைப்பட்ட நேரத்தில் பராக் ஒபாமா அதிபரானார். ஜார்ஜ் புஸ் ஆட்சி ஒழிந்து போகும் நாட்களை எதிர்பார்த்த மக்களுக்கு ஒபாமாவின் பேச்சுக்கள் அமெரிக்கா மாறுவது போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளது. ஆப்பிரிக்க அமெரிக்க மக்கள் நிறவெறிக்கு எதிராக நடத்திய போராட்டங்களின் மகுடமாக பராக் ஒபாமா வெள்ளை மாளிகையில் உச்சபட்ச அதிகாரத்தில் இருப்பதால் அடிமைத்தனங்களும், அடக்குமுறைகளும் ஒழிந்து போகுமென்ற நம்பிக்கை உலகமெங்கும் வேகமாக பரவியது. ஒபாமாவின் பேச்சுக்களை கடந்து இராணுவ, வெளியுறவு கொள்கையில் பெரிதாக எந்த மாற்றங்களும் இதுவரையில் நிகழவில்லை. உலகமெங்கும் அமெரிக்கா புதிய ராணுவ தளங்களை உருவாக்கும் திட்டத்தை தொடர்கிறது. இக்கட்டுரை எழுதப்படும் நேரம் ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 40,000 அமெரிக்க படையினரை அனுப்ப ஒபாமா திட்டமிடும் செய்தி வருகிறது. பாலஸ்தீன காசா பகுதியில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு குடியமர்த்தலை நிறுத்துவதற்கு பதிலாக ஒபாமா நிர்வாகம் இஸ்ரேலுக்கு சார்பாக நிற்கிறது. இஸ்ரேல் மீதான நடவடிக்கைகளிலிருந்து ஐ.நாவில் பாதுகாப்பு கவசம் வழங்குவதையும் தொடர்கிறது. வன்னியில் இனப்படுகொலை நடந்துகொண்டிருந்த போது மே 10 வரையில் ஒபாமா மௌனமாகவே இருந்தார். இந்த நிலையில் ஒபாமா நிர்வாகம் எந்த அடிப்படையில் மாறுபட்டதாக இருக்கிறது?

"அணு ஆயுதங்களில்லாத உலகை அமெரிக்கா விரும்புகிறது” என்ற செய்தியை ஏப்பிரல் 3, 2009ல் ஒபாமா தெரிவித்திருந்தார். தொடர்ந்து ஒபாமாவும் ரசிய அதிபர் மெட்வெதெவ் ஜூலை 6. 2009ல் அணு ஆயுதங்களை குறைப்பதற்கான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டனர். அதன்படி 2012ம் ஆண்டிற்குள் இரு நாடுகளும் தங்களிடமுள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை குறைக்க ஒப்புக்கொண்டன. இதுவொன்றும் அசாதாரணமான முடிவாக பார்க்க முடியாது. 1991ல் ஜார்ஜ் புஸ் இரசாயன ஆயுதங்களை அழிப்பதற்கான முடிவை எடுத்தது. ஆனால் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கலந்த ஆயுதங்கள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. அதனால் லூகேமியா என்கிற புற்றுநோயால் பாதிப்புக்குள்ளாகிற ஈராக்கிய குழந்தைகளின் எண்ணிக்கை இன்று வரையில் அதிகரித்து வருகிறது. உலகில் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் ஒழிந்தால் உலகில் சமாதானமும், சகவாழ்வும் உருவாகுமென்பது நாகரீகமான ஒரு கற்பனை மட்டுமே. பூமி வெப்பமாதல், மூன்றாம் உலக நாடுகளில் மோதல்கள் ஆகிய பிரச்சனைகளுக்கு மூல காரணமாக இருப்பவை பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளித்துவ சுரண்டல்கள். அரசுகளின் துணையுடன் மக்களின் நிலங்களை அபகரித்து இயற்கை வளங்கள், தாது பொருட்கள் ஆகியவற்றை பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையிடுவதால் மோதல்களும், வறுமையும், வேலையிழப்புகளும் அதிகமாகின்றன. அமெரிக்க அரசின் ராணுவ, பொருளாதாரம் வெளியுறவுக் கொள்கைகள் பன்னாட்டு முதலாளிகளுக்கு ஆதரவான சந்தைப் பொருளாதார (free market economy) சுரண்டலுக்கு பாதுகாவலாக இருக்கிறது.

அமெரிக்காவின் ஏகாதிபத்திய இலட்சியத்தை அடைவதில் ஜார்ஜ் புஸ், ஒபாமா இருவருக்குள்ளும் மாறுபட்ட கருத்துக்களில்லை. அதை அடைவதற்கான வழிகளில் ஜார்ஜ் புஸ் ஆக்கிரமிப்பு போர்களை நேரடியாக பயன்படுத்தி அமெரிக்காவின் ‘உலக இரட்சகன்’ பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதால் ஒபாமா சமாதான முகமூடியை தேர்ந்தெடுத்திருக்கிறார். அணு ஆயுதங்களை ஒழிப்பது மிகவும் அவசியமானது. ஆனால் அதுமட்டுமே உலகில் நிரந்தர சமாதானத்தை உருவாக்கிவிடாது.

இவ்வருடம் நோபல் விருதுக்கான பட்டியலில் முன்னணியில் இருந்தவர்கள் இருவர். ஆப்கானிஸ்தானை சார்ந்த மருத்துவரும், மனித உரிமை ஆணையத்தின் தலைவியுமான மருத்துவர் சிமா சமர். அவர்களில் சமாதானத்திற்கான நோபல் விருதிற்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர் கொலம்பியா நாட்டின் செனட்டரும், வழக்கறிஞரும், மனித உரிமைகள் செயல்பாட்டாளருமான பைடட் கொர்டொபா ருயிஸ் என்னும் 54 வயதான பெண். கொலம்பியா நாட்டில் ஊழலற்ற நேர்மையான ஆட்சியியலுக்காக போராடுகிற அவர் பெண்கள் அமைப்புகள், விவசாயிகள் அமைப்புகளால் பெரிதும் ஆதரிக்கப்படுபவர். கொலம்பியாவின் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சமாதானத்திற்கான குழுவில் முக்கிய பங்காற்றி வருகிறார்.

அமெரிக்காவின் கைப்பாவையாக செயல்படுகிற குறிப்பிட்ட சிலரால் கொலம்பியா ஆளப்படுகிறது. விவசாயிகள், கிராமப்புற ஏழைகள் ஆட்சியாளர்களின் திட்டங்களாலும், பன்னாட்டு நிறுவனங்களாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அமெரிக்க ஆதிக்கத்தை எதிர்த்து கொலம்பியாவில் ஆட்சி மாற்றத்தை உருவாக்க போராடுவதாக அறிவித்து 1966 முதல் பார்க் என்கிற கொலம்பியா புரட்சிகர இராணுவப் படை (Revolutionary Armed Forces of Colombia - FARC) ஆயுதப் போராட்ட்த்தை நடத்தி வருகிறது. சுமார் 18 ஆயிரத்திற்கும் மேல் உறுப்பினர்களை கொண்டு அதிநவீன ஆயுதங்களோடு இயங்குகிறார்கள். சுமார் 50 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு நிலம் பார்க் அமைப்பின் கட்டுப்பாட்டிலிருக்கிறது. 1997 முதல் பார்க் கொரில்லாக்களை அயல்நாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆட்களை கடத்தி சிறை வைப்பது, குண்டுவெடிப்புகள் பார்க் கொரில்லாக்களின் வழிமுறைகள். கடத்தப்பட்டவர்களில் அரசு அதிகாரிகள், ராணுவத்தினர் மற்றும் பல அயல்நாட்டினரும் உண்டு. கடத்தப்பட்டவர்கள் பல ஆண்டுகள் அவர்களது கட்டுப்பாட்டில் அடர்ந்த காடுகளில் சிறை வைக்கப்பட்டனர். பலர் கொல்லப்பட்டனர்.

பார்க் அமைப்பை அழிப்பதற்காக கொலம்பிய அரசு 1968 முதல் இராணுவத்துக்கு உதவுவதற்காக ஆயுதக்குழுக்களை உருவாக்கியது. இராணுவ புலனாய்விற்காக ஆயுதக்குழுக்களை பயன்படுத்த 1990ல் அமெரிக்காவின் சிஐஏ, இராணுவம் மற்றும் இஸ்ரேலிய இராணுவம் ஆலோசனை மற்றும் பயிற்சிகளை வழங்கியது. இராணுவத்துக்கு புலனாய்வு தகவல்களை பெறுவதற்காக தனிநபர்களுக்கும், மாபியா கும்பல்களுக்கும் ஆயுதங்களை வழங்கிய பிறகு கொலம்பியாவில் ஆயுத வன்முறை பரவி பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்தது. அரசின் படைகளோடு இணைந்து செயல்பட்ட ஆயுதக்குழுக்கள் ஆட்களை கடத்துவது மற்றும் படுகொலைகளில் ஈடுபட்டனர்.

கிராமங்களுக்குள் புகுந்த ஆயுதக்குழுவினர் விவசாயிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளை பாரபட்சமில்லாது படுகொலை செய்தார்கள். உதாரணமாக மே 2003ல் குயாஹிபோ பழங்குடி மக்கள் வாழும் பெற்றொயெஸ் என்னும் கிராமத்தில் புகுந்த ஆயுதக்குழு ஒன்று தாக்குதலை நடத்தியது. 11,12 மற்றும்15 வயதான மூன்று சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தனர். 16 வயது நிரம்பிய கற்பிணி சிறுமி ஒமைரா பெர்னான்டெசை பாலியல் பலாத்காரம் செய்து அவரது வயிற்றை கிழித்து சிசுவை கத்தியால் வெட்டி படுகொலை நிகழ்த்தி ஆற்றில் வீசினார்கள். ஆண்கள் பலர் கொல்லப்பட்டனர். கொலம்பிய ராணுவத்தின் 18வது படை பிரிவினரும் ஆயுதக்குழுவோடு சேர்ந்து படுகொலையை நிகழ்த்தினார்கள். இதே போன்று பலமுறை கிராமங்களில் கொடூரமான முறையில் பழங்குடியினர் கொல்லப்பட்டனர்.

கொலம்பிய ஆயுதக்குழுக்களுக்கு அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் நிதியளித்தன. வாழைப்பழங்கள் மற்றும் இதர பொருட்களை விற்பனை செய்கிற அமெரிக்க நிறுவனமான சிக்குயிற்றா 1997 முதல் 2004 வரையில் 17 லட்சம் அமெரிக்க டாலர்களை ஆயுதக்குழுக்களுக்கு வழங்கியது. தொழிற்சங்கவாதிகளுக்கு மிகவும் ஆபத்தான நாடு கொலம்பியா. 15 வருடங்களுக்குள் சுமார் 4000 தொழிற்சங்க தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இந்த கொலைகளில் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் ஆயுதக்குழுக்கள் தொடர்புள்ளது. குளிர்பானம் மற்றும் தண்ணீர் விற்பனையில் வளங்களையும், உழைப்பையும் கொள்ளையடிக்கிற கொக்கோ கோலா கொலம்பியாவில் தொழிற்சங்க தலைவர்களை கொலை செய்வதற்காக ஆயுதக்குழுக்களை கூலிப்படையாக பயன்படுத்தியது.

நோபல் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பைடட் கொர்டொபா ருயிஸ் மனித உரிமை மீறல்கள் மற்றும் அரசின் மோசமான கொள்கைகளை எதிர்த்து வருபவர். அதனால் 1999 ஆண்டில் இருமுறை அரசிற்கு ஆதரவான ஆயுதக்குழு அவரை கடத்தியது. அவரை கொலை செய்ய இருமுறை தாக்குதல் நடந்தது. அவற்றிலிருந்து தப்பி கனடா நாட்டில் சிலகாலம் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். கொலம்பியாவிற்கு திரும்பிய அவர் 2002 தேர்தலில் மீண்டும் செனட்டராக தேர்வானார். பெண்கள், ஓரின சேர்க்கையினர், திருநங்கைகள், ஆப்ரோ கொலம்பியன் சமூக மக்கள் ஆகியவர்களது உரிமைகளை வலியுறுத்தியும், குடும்ப வன்முறை, ஊழல் ஆகியவற்றை எதிர்த்தும் அவரது பணி அமைந்தது. கொலம்பியன் லத்தீன் அமெரிக்க பெண்கள் அமைப்பில் முக்கிய பங்காற்றுபவர். அவரது பங்கேற்பு வழியாக பாலியல் மற்றும் மகப்பேறு சுகாதாரத்திற்கான அரச கொள்கைகள் உருவாக்கப்பட்டன. 1995ம் ஆண்டு பெண்கள் உரிமையை ஆராய்வதற்காக சீனாவின் தலைநகர் பெய்ஜிங்ல் நடந்த உலக மாநாட்டில் கலந்துகொண்டு அதனடிப்படையில் செயல்படுத்த உழைத்திருக்கிறார். அவரது முயற்சியால் தாய்மார்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கான வரைவு சட்டம் உருவானது. குடும்ப பாதுகாப்பு சட்டம், பெண்களுக்கு சமவுரிமை வழங்கும் சட்டம், குடும்ப வன்முறை தண்டனை சட்டம், பாலியல் குற்றங்களுக்கு கூடுதல் தண்டனை வழங்கும் திருத்தச்சட்டம், ஆப்பிரிக்க இன மக்களுக்கு ஆட்சிமன்றத்தில் சிறப்பு இடம் வழங்கல் ஆகிய முக்கிய விசயங்களில் பணியாற்றியிருக்கிறார்.

கொர்டொபா அமைதி வழியில் கொலம்பியாவின் மோதல்களையும், வன்முறையையும் முடிவிற்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். சமாதானத்திற்கான கொலம்பியர்கள் என்னும் அமைப்பின் தலைமையை ஏற்றிருக்கும் அவர் 2007ம் ஆண்டு முதல் 16 பணயக் கைதிகளை பார்க் கொரில்லாக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீட்டார். விடுவிக்கப்பட்ட பணயக் கைதிகள் பல ஆண்டுகளாக சிறைபிடிக்கப்பட்டவர்கள். வெனிசுவேலாவின் அதிபர் ஹூகோ சாவேசும் அவரோடு முயற்சியில் ஈடுபட்டிருந்தார். பேச்சுவார்த்தைக்காக சந்தித்த போது எடுத்த நிழற்படங்களை வைத்து கொர்டொபா மீது பார்க் கொரில்லாக்களுக்கு சாதகமானவர் என்ற குற்றச்சாட்டு பரப்பப்பட்டது. கொர்டொபாவின் முயற்சியால் விடுவிக்கப்பட்ட முன்னாள் ஆளுநர் ஆலன் யாரா, ‘நான் கடத்தப்பட்ட நேரம் கடுமையாக மன அழுத்தம் வந்தது. காரணம் விடுதலை பற்றி சிந்திக்க எந்த நம்பிக்கையும் இருக்கவில்லை,’ ‘ஆனால் 2008ல் செனட்டர் கொர்டொபா நான் உட்பட மற்றவர்களின் விடுதலைக்கு முயற்சிப்பது வானொலியில் கேட்ட நேரம் கொர்டொபா எனக்கு விடுதலை தருகிற தேவதையானார்,’ என்கிறார்.

சுமார் 700 பணயக் கைதிகளை பார்க் அமைப்பு பிடித்து வைத்துள்ளனர். மனிதாபிமான அடிப்படையில் அவர்களை மீட்பதற்காக கைது செய்யப்பட்ட கொரில்லாக்களை பரிமாறிக்கொள்ளும் முயற்சியில் கொர்டொபா ஈடுபடுகிறார். ஆனால் கொலம்பியாவின் அதிபர் ஆல்வரோ உரைப் ராணுவ தாக்குதலை நடத்த திட்டமிடுகிறார். பார்க் அமைப்பிடம் சிக்கியுள்ளவர்கள், விவசாயிகள், பழங்குடியினர் கடுமையான ஆபத்தில் சிக்க நேரிடும் என்பதால் சமாதான பேச்சுக்கள் மூலம் மோதலை முடிவுக்கு கொண்டுவரவேண்டும். அதற்காக மீண்டும் பார்க் அமைப்போடு பேச்சு நடத்த செல்ல தயாரென்கிறார் கொர்டொபா. பராக் ஒபாமா அரசு கொலம்பியாவில் ராணுவத்திற்கு நிதியுதவிகளை செய்கிறது. இவ்வருடம் கொலம்பியாவிற்கு வழங்கப்படும் நிதியில் 57% ராணுவத்திற்கு வழங்கப்படுகிறது. இதனால் ராணுவ தாக்குதல்களும், வன்முறையும் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளன. லத்தீன் அமெரிக்க நாடுகளின் வளங்கள், உழைப்பு மற்றும் பொருளாதாரத்தை அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனங்கள் நீண்ட காலமாக கொள்ளையிடுகின்றன. அவற்றிற்கு சாதகமாக பொம்மை அரசுகளை அமெரிக்கா உருவாக்குவதும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்ப்பதும் தொடர்ந்து நடைபெறுகிறது. பல நாடுகளின் பணம் செயலிழந்து அமெரிக்க டாலர் புழக்கத்திலிருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களின் உழைப்பு சுரண்டலுக்கு சாதகமாக வட அமெரிக்க தாராள வர்த்தக உடன்படிக்கை முந்தைய ஜார்ஜ் புஸ் அரசினால் உருவாக்கப்பட்டது. அதன்படி சுதந்திர பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் தொழிலாளர்களின் உழைப்பை சக்கையாக பிழிந்து எந்த உரிமைகளையும் மதிக்காத ஏற்றுமதி சார்ந்த வர்த்தக உற்பத்தி உருவாக்கப்பட்டுள்ளது. கொலம்பியாவும் அத்தகைய வர்த்தகத்தில் பங்கேற்கிறது.

‘அமெரிக்காவின் ‘கொலம்பிய திட்டம்’ லத்தீன் அமெரிக்காவில் குறிப்பாக கொலம்பியாவிற்குள் அமெரிக்காவிற்கு சாதகமானது,’ “தான் ஊக்கப்படுத்துவதாக சொல்லுகிற சனநாயக பாதுகாப்பை தடுக்கிற சுவராக கொலம்பியாவில் அமெரிக்கா செயல்பட விரும்புகிறது” என்கிறார் கொர்டொபா. ‘கடந்த இரு கொலம்பிய அரசுகளும் முந்தைய அரசுகளை விடவும் அமெரிக்க அரசு மற்றும் உலக முதலீட்டாளர்களின் பொம்மையாக செயல்படுகிறது’ என்று சாடுகிற அவர் ‘பெருகிவருகிற வேலையில்லா திண்டாட்டம் லத்தீன் அமெரிக்க நாடுகளின் மையப் பிரச்சனையாக உள்ளது. முதலாளித்துவ பொருளாதார கொள்கையை நடைமுறைப்படுத்தி அரசு நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறைகளையும் தனியாரிடம் ஒப்படைக்கும் ஒவ்வொரு நாளும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. அங்கே சமூக நீதியில்லை. அது தான் பிரச்சனை,’ என்கிறார் தீர்க்கமாக.

மேற்குலக நாடுகள் கூட்டாக கட்டியெழுப்புகிற முதலாளித்துவ பொருளாதார கொள்கைகளையும், ராணுவ ஆதிக்க கொள்கைகளையும் எதிர்க்கிறவர்களுக்கு நோபல் விருது வழங்கப்படாதது அதிர்ச்சியான விசயமல்ல. ஆதிக்கவர்க்கத்தினரின் விருதுகள் தங்களது கொள்கைகளுக்கு சாதகமானவர்களுக்கே வழங்கப்படும். நோபல் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டதற்காக நன்றி தெரிவித்த கொர்டொபா, ‘சுரண்டல் மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராக செயல்பட்டும், சமாதானம் மற்றும் நீதிக்காக போராடுவதாலும் பாலியல் பலாத்காரம், கொலை, படுகொலை, காணாமல் போகவைத்தல், சித்திரவதை, இடப்பெயர்வு ஆகியவற்றிற்கு ஆளான கொலம்பிய மக்களின் துயரங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. சண்டையில்லாததால் மட்டும் சமாதானம் ஏற்படுமென்று என்னால் நினைக்க முடியவில்லை. சமாதானம் பல கோடி மக்களின் வறுமை, சமூக புறக்கணிப்பு மற்றும் அடிமைத்தன சூழல்களில் மாற்றம் ஏற்படுத்தாது. இந்த சமாதானம் செல்வம், வளங்கள், வாய்ப்புகள், அங்கீகாரம், இணைத்துக்கொள்ளல் ஆகியவற்றை கணக்கிலெடுக்கவில்லை; வன்முறை, அதிகாரம் மற்றும் பொது வளங்களை தவறாக பயன்படுத்தல், லஞ்சம் மற்றும் மனித உரிமைகள் மற்றும் இயற்கையை அலட்சியம் செய்வதையும் நிறுத்தப்போவதில்லை. தண்டனையிலிருந்து விலக்கு, ஆயுதக்கடத்தல், ஆட்கடத்தல் மற்றும் ஏழைகளிடமிருந்து செல்வத்தை அபகரிக்கும் ஆதிக்கம் நிறைந்தவர்களையும் இந்த சமாதானம் ஒழிக்கப்போவதில்லை,’ என்கிறார். வேற்றுமைகள் மற்றவர்களை புறக்கணிக்கவோ, ஒழிக்கவோ பயன்படாத போது மட்டுமே சமாதானம் சாத்தியப்படுமென்கிறார் அவர். ‘எந்த மாறுபாடுமில்லாது அனைவரின் மனித உரிமைகளையும் மதிக்கும் போதும், அவற்றை குழந்தைகளின் சுகாதாரம், கல்வி, தரமான குடும்ப கலாச்சாரம், வன்முறையற்ற குழந்தைப் பருவம் மற்றும் இளவயதினருக்கு தரமான வேலைக்கான வாய்ப்புகள் உறுதிசெய்யப்படும் போது மட்டுமே சமாதானம் சாத்தியம்,’ என்கிறார் கொர்டொபா. அனைத்து மனிதர்களும் நிறம், பாலினம், மதம், நாடு, பாலியல் வாழ்க்கைமுறை அல்லது பொருளாதார நிலை போன்ற பாகுபாடில்லாமல் மதிப்பும் அங்கீகாரமும் பெறும் போது சமாதானம் மலரும் என்கிறார் அழுத்தமாக. கொர்டொபாவின் சமாதானம் மீதான சிந்தனை மிக ஆழமானவை. அவை அனைத்து வகை ஒடுக்குதல்கள், புறக்கணிப்புகள், ஆதிக்கங்களுக்கு மாற்றாக முழு மனித விடுதலையை இலட்சியமாக கொண்டிருக்கின்றன.

மனித விடுதலைக்காக உழைக்க உறுதிபூண்டுள்ள அவர் ஒபாமாவிற்கு அழுத்தமான செய்திகளையும் விடுக்கிறார். ‘ஒபாமாவின் பதவியேற்பு விழா பேச்சில் குறிப்பிட்ட அனைத்தையும் நிறைவேற்ற உலகமெங்கும் அமெரிக்காவின் சமாதான கொள்கையை உருவாக்க ஒபாமாவிற்கு விருது கிடைத்திருப்பது அரசியல் அடிப்படையில் மிக முக்கியமானது. அந்த விருதானது நம்பிக்கையின் ஒபாமாவை குறிப்பது, ராணுவ தளங்களின் ஒபாமாவை அல்ல,’ என்கிறார். கொலம்பியாவில் அமெரிக்காவின் புதிய ராணுவ தளங்களை உருவாக்கும் திட்டத்தை ஒபாமா மீளாய்வு செய்ய வேண்டுமா என்ற கேள்விக்கு, ‘அப்படி தான் நினைக்கிறேன். அது மட்டுமல்ல, உலகமெங்கும் சமாதானத்தை உருவாக்க ஒபாமா தயாரிக்கிற திட்டத்தில் கொலம்பியாவின் ஆயுதமோதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். அதனால் கொலம்பியாவில் மட்டுமல்ல லத்தீன் அமெரிக்கா முழுவதும் சமாதானத்தை உருவாக்கவும் ஹொண்டூராசில் சனநாயகத்தை மீட்கவும், உதாரணமாக, இந்த கண்டத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்ற அவருக்கு இந்த பரிசு அவசியமானது,’ என்கிறார் கொர்டொபா.

உதவிய இணையத்தளங்கள்

http://www.piedadcordoba.net/
http://www.globalpost.com/
http://colombiajournal.org/
http://nobelprize.org/

நவம்பர் மாத உன்னதம் இதழில் வெளிவந்தது. இனியொரு இணையத்தளத்தில் மறுபதிவு செய்யப்பட்டது.

Thursday, August 06, 2009

திரை கடலோடியும் துயரம் தேடு - 'இந்தியா டுடே' விமர்சனம்


திரை கடலோடியும் துயரம் தேடு நூலைப் பற்றி 'இந்தியா டுடே' ஏட்டில் முனைவர்.பெர்னாட் டி சாமி எழுதிய விமர்சனம் பின்வருமாறு:

நவயுக அடிமைகள்

புலம்பெயர் தொழிலாளர்களின் அவலங்கள் பற்றிய பதிவு

இன்றைய முக்கிய பிரச்சனையான தொழிலாளர்கள் புலம்பெயர்வை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கிறது இந்நூல். வேலைக்காக பலரும் அயல்நாடுகளுக்கு 'புலம்பெயர்வது ஏன்?' என்ற கேள்விக்கு, அவர்களது தாய்நாடுகளில் நிலவும் சமூக பொருளாதார பிரச்சனைகளை ஆசிரியர் மையப்படுத்திருக்கிறார். ஆனால் அவர் வெளிநாடுகளின் கவர்ந்து இழுக்கும் காரணங்களைப் (Pull Factors) பற்றி சொல்லவில்லை. புலம்பெயர்வில் நடக்கும் அனைத்து வகை கடத்தல்களையும் விவரித்துள்ளார். கட்டாய வேலைக்காக அதிகம் கடத்தப்படும் தொழிலாளர்களின் நிலை பற்றியும் அறிவுசார்ந்த வேலை மற்றும் உடல் உழைப்பு இவற்றிற்கு இடையிலான வித்தியாசம் பற்றியும் விரிவாக பேசியிருக்கலாம்.

அங்கீகரிக்கப்படாத, குறைந்த ஊதியம் கொண்ட திறனற்ற வேலை செய்பவர்களாக வீட்டு வேலைத் தொழிலாளர்களை வெளிநாடுகள் (செல்லக்) கருதும் பொழுது, இன்றைக்கு அவர்களிடையே கண்டங்களைக் கடந்த தொடர்பு உருவாகி, பல நாடுகளில் வீட்டு வேலைப் பெண்கள் போராடி உரிமைகளைப் பெற்றுள்ளனர் (ஹாங்காங்). திறன் அற்ற, குறைந்த திறன் பெற்ற, கீழ்த்தரமான வேலைகளுக்காக ஆவணங்கள் இன்றி தொழிலாளர்கள் கடத்தப்படுவது நாம் சிந்திக்க வேண்டிய மிக முக்கிய உண்மை.

இப்பிரச்சனைக்கான சட்டங்கள், தீர்வுகள் பற்றி குறிப்பிடும் போது, ஐ.நா.சபை ILO Convention பற்றி குறிப்பிட்டிருந்தாலும், ஒவ்வொரு நாட்டிலும் இயற்றப்படும் சட்டங்களே புலம்பெயர் தொழிலாளர்களைப் பாதுகாக்கப் போதுமானவை. வெளிநாட்டு தூதரகங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்கான அதிகாரிகள் இருந்தால் தான் அவர்களின் பாதுகாப்பும், உரிமைகளும் வென்றெடுக்கப்படும். இந்த பிரச்சனையின் உள் பரிணாமத்தைப் புரிந்து கொள்ள ஐ.நா சார்பு அமைப்புகளின் வாதங்களை தாண்டிய புரிதல் தேவை. அதேநேரம் ஆசிரியருடைய அனுபவம் இந்நூலுக்கு முக்கிய ஆதாரமாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
முனைவர். பெர்னாட் டி சாமி
ஆகஸ்டு 12, 2009 இந்தியா டுடே நாளிதழில் வெளிவந்தது. விமர்சகர் சென்னை லயோலா கல்லூரியில் பணிபுரிகிறார்.