Monday, November 16, 2009

நோபல் விருதில் வெளிப்படும் அரசியல்

2009ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் விருது "சர்வதேச உறவு மற்றும் மக்களிடையே ஒத்துழைப்பை பலமடைய செய்யும் அசாதாரணமான முயற்சிகளுக்காக" அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல் விருதை அறிவித்த தேர்வு குழு ‘மோதல்கள், அணு ஆயுதங்கள், தட்பவெட்பநிலை மாற்றம் ஆகிய பிரச்சனைகளுக்கான தீர்விற்காக முயற்சிகளை உறுதிப்படுத்தும் விதமாக’ விருதை வழங்குவதாக தெரிவித்தது. சர்வதேச உறவை வலுப்படுத்துதல், பேச்சுவார்த்தைகளுகான புதிய சூழ்நிலையை உருவாக்குதல், ஐ.நா அமைப்புகளில் அமெரிக்காவின் கடப்பாடுகளை புதுப்பித்தல் ஆகிய காரணங்களுக்காக விருது வழங்கப்படுவதாக அறிவித்திருக்கிறது. ஒபாமா பதவியேற்று 11 நாட்களுக்கு பிறகு நோபல் விருதுக்கான விண்ணப்ப நாள் முடிந்தது. விருதுக்கான முதல் தேர்வு பட்டியலை உருவாக்கும் பணியும் மார்ச் மாதத்தோடு முடிவடைந்தது. ஒபாமாவுக்கு பதவியேற்ற மிகக்குறுகிய காலத்தில் நோபல் விருதை வழங்குவது பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது. அவசரமாக ஒபாமாவுக்கு விருது வழங்க காரணமென்ன?

ஜார்ஜ் புஸ் அதிபராக இருந்த போது ஈராக், ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமிப்பு தாக்குதல்களில் அமெரிக்கா ஈடுபட்டு பேரழிவை உருவாக்கியது. உலக பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக சதாம் உசேன் ஈராக்கில் பேரழிவு ஆயுதங்களை உற்பத்தி செய்வதாக அறிவித்தது அமெரிக்கா. அதற்காக ஐ.நாவில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பவுல் ஆற்றிய உரை ஐ.நா மற்றும் உலக நாடுகளையே ஏமாற்றியது ஆகியவை தனிக்கதை. அமெரிக்காவின் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகளை தடுக்க ஐ.நா மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு வலுவில்லாமல் போனது. உலக ஒழுங்குமுறைகளை மதிக்காத ஜார்ஜ் புஸ் ஆட்சியில் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புக் குரல்கள் உலகமெங்கும் உருவாக துவங்கியது. அதே வேளையில் அமெரிக்கா கட்டியெழுப்பிய ஒற்றைமய உலகமயமாக்கல் பொருளாதார கொள்கையின் விளைவுகள் பங்குச்சந்தை சரிவு மற்றும் பொருளாதார வீழ்ச்சியை உருவாக்கியது. பல லட்சம் பேர் வேலையிழந்தனர். அமெரிக்காவின் வலிமையான ராணுவம் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் ஒருபக்கம் திணறிக்கொண்டிருந்த போது, அமெரிக்காவின் முதலாளித்துவ நிறுவனங்கள் சரிவை சந்தித்தன.

உலக அரங்கில் அமெரிக்க பேரரசின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி ஏகாதிபத்தியத்தை நிலைநிறுத்தும் முகமொன்று தேவைப்பட்ட நேரத்தில் பராக் ஒபாமா அதிபரானார். ஜார்ஜ் புஸ் ஆட்சி ஒழிந்து போகும் நாட்களை எதிர்பார்த்த மக்களுக்கு ஒபாமாவின் பேச்சுக்கள் அமெரிக்கா மாறுவது போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளது. ஆப்பிரிக்க அமெரிக்க மக்கள் நிறவெறிக்கு எதிராக நடத்திய போராட்டங்களின் மகுடமாக பராக் ஒபாமா வெள்ளை மாளிகையில் உச்சபட்ச அதிகாரத்தில் இருப்பதால் அடிமைத்தனங்களும், அடக்குமுறைகளும் ஒழிந்து போகுமென்ற நம்பிக்கை உலகமெங்கும் வேகமாக பரவியது. ஒபாமாவின் பேச்சுக்களை கடந்து இராணுவ, வெளியுறவு கொள்கையில் பெரிதாக எந்த மாற்றங்களும் இதுவரையில் நிகழவில்லை. உலகமெங்கும் அமெரிக்கா புதிய ராணுவ தளங்களை உருவாக்கும் திட்டத்தை தொடர்கிறது. இக்கட்டுரை எழுதப்படும் நேரம் ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 40,000 அமெரிக்க படையினரை அனுப்ப ஒபாமா திட்டமிடும் செய்தி வருகிறது. பாலஸ்தீன காசா பகுதியில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு குடியமர்த்தலை நிறுத்துவதற்கு பதிலாக ஒபாமா நிர்வாகம் இஸ்ரேலுக்கு சார்பாக நிற்கிறது. இஸ்ரேல் மீதான நடவடிக்கைகளிலிருந்து ஐ.நாவில் பாதுகாப்பு கவசம் வழங்குவதையும் தொடர்கிறது. வன்னியில் இனப்படுகொலை நடந்துகொண்டிருந்த போது மே 10 வரையில் ஒபாமா மௌனமாகவே இருந்தார். இந்த நிலையில் ஒபாமா நிர்வாகம் எந்த அடிப்படையில் மாறுபட்டதாக இருக்கிறது?

"அணு ஆயுதங்களில்லாத உலகை அமெரிக்கா விரும்புகிறது” என்ற செய்தியை ஏப்பிரல் 3, 2009ல் ஒபாமா தெரிவித்திருந்தார். தொடர்ந்து ஒபாமாவும் ரசிய அதிபர் மெட்வெதெவ் ஜூலை 6. 2009ல் அணு ஆயுதங்களை குறைப்பதற்கான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டனர். அதன்படி 2012ம் ஆண்டிற்குள் இரு நாடுகளும் தங்களிடமுள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை குறைக்க ஒப்புக்கொண்டன. இதுவொன்றும் அசாதாரணமான முடிவாக பார்க்க முடியாது. 1991ல் ஜார்ஜ் புஸ் இரசாயன ஆயுதங்களை அழிப்பதற்கான முடிவை எடுத்தது. ஆனால் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கலந்த ஆயுதங்கள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. அதனால் லூகேமியா என்கிற புற்றுநோயால் பாதிப்புக்குள்ளாகிற ஈராக்கிய குழந்தைகளின் எண்ணிக்கை இன்று வரையில் அதிகரித்து வருகிறது. உலகில் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் ஒழிந்தால் உலகில் சமாதானமும், சகவாழ்வும் உருவாகுமென்பது நாகரீகமான ஒரு கற்பனை மட்டுமே. பூமி வெப்பமாதல், மூன்றாம் உலக நாடுகளில் மோதல்கள் ஆகிய பிரச்சனைகளுக்கு மூல காரணமாக இருப்பவை பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளித்துவ சுரண்டல்கள். அரசுகளின் துணையுடன் மக்களின் நிலங்களை அபகரித்து இயற்கை வளங்கள், தாது பொருட்கள் ஆகியவற்றை பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையிடுவதால் மோதல்களும், வறுமையும், வேலையிழப்புகளும் அதிகமாகின்றன. அமெரிக்க அரசின் ராணுவ, பொருளாதாரம் வெளியுறவுக் கொள்கைகள் பன்னாட்டு முதலாளிகளுக்கு ஆதரவான சந்தைப் பொருளாதார (free market economy) சுரண்டலுக்கு பாதுகாவலாக இருக்கிறது.

அமெரிக்காவின் ஏகாதிபத்திய இலட்சியத்தை அடைவதில் ஜார்ஜ் புஸ், ஒபாமா இருவருக்குள்ளும் மாறுபட்ட கருத்துக்களில்லை. அதை அடைவதற்கான வழிகளில் ஜார்ஜ் புஸ் ஆக்கிரமிப்பு போர்களை நேரடியாக பயன்படுத்தி அமெரிக்காவின் ‘உலக இரட்சகன்’ பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதால் ஒபாமா சமாதான முகமூடியை தேர்ந்தெடுத்திருக்கிறார். அணு ஆயுதங்களை ஒழிப்பது மிகவும் அவசியமானது. ஆனால் அதுமட்டுமே உலகில் நிரந்தர சமாதானத்தை உருவாக்கிவிடாது.

இவ்வருடம் நோபல் விருதுக்கான பட்டியலில் முன்னணியில் இருந்தவர்கள் இருவர். ஆப்கானிஸ்தானை சார்ந்த மருத்துவரும், மனித உரிமை ஆணையத்தின் தலைவியுமான மருத்துவர் சிமா சமர். அவர்களில் சமாதானத்திற்கான நோபல் விருதிற்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர் கொலம்பியா நாட்டின் செனட்டரும், வழக்கறிஞரும், மனித உரிமைகள் செயல்பாட்டாளருமான பைடட் கொர்டொபா ருயிஸ் என்னும் 54 வயதான பெண். கொலம்பியா நாட்டில் ஊழலற்ற நேர்மையான ஆட்சியியலுக்காக போராடுகிற அவர் பெண்கள் அமைப்புகள், விவசாயிகள் அமைப்புகளால் பெரிதும் ஆதரிக்கப்படுபவர். கொலம்பியாவின் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சமாதானத்திற்கான குழுவில் முக்கிய பங்காற்றி வருகிறார்.

அமெரிக்காவின் கைப்பாவையாக செயல்படுகிற குறிப்பிட்ட சிலரால் கொலம்பியா ஆளப்படுகிறது. விவசாயிகள், கிராமப்புற ஏழைகள் ஆட்சியாளர்களின் திட்டங்களாலும், பன்னாட்டு நிறுவனங்களாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அமெரிக்க ஆதிக்கத்தை எதிர்த்து கொலம்பியாவில் ஆட்சி மாற்றத்தை உருவாக்க போராடுவதாக அறிவித்து 1966 முதல் பார்க் என்கிற கொலம்பியா புரட்சிகர இராணுவப் படை (Revolutionary Armed Forces of Colombia - FARC) ஆயுதப் போராட்ட்த்தை நடத்தி வருகிறது. சுமார் 18 ஆயிரத்திற்கும் மேல் உறுப்பினர்களை கொண்டு அதிநவீன ஆயுதங்களோடு இயங்குகிறார்கள். சுமார் 50 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு நிலம் பார்க் அமைப்பின் கட்டுப்பாட்டிலிருக்கிறது. 1997 முதல் பார்க் கொரில்லாக்களை அயல்நாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆட்களை கடத்தி சிறை வைப்பது, குண்டுவெடிப்புகள் பார்க் கொரில்லாக்களின் வழிமுறைகள். கடத்தப்பட்டவர்களில் அரசு அதிகாரிகள், ராணுவத்தினர் மற்றும் பல அயல்நாட்டினரும் உண்டு. கடத்தப்பட்டவர்கள் பல ஆண்டுகள் அவர்களது கட்டுப்பாட்டில் அடர்ந்த காடுகளில் சிறை வைக்கப்பட்டனர். பலர் கொல்லப்பட்டனர்.

பார்க் அமைப்பை அழிப்பதற்காக கொலம்பிய அரசு 1968 முதல் இராணுவத்துக்கு உதவுவதற்காக ஆயுதக்குழுக்களை உருவாக்கியது. இராணுவ புலனாய்விற்காக ஆயுதக்குழுக்களை பயன்படுத்த 1990ல் அமெரிக்காவின் சிஐஏ, இராணுவம் மற்றும் இஸ்ரேலிய இராணுவம் ஆலோசனை மற்றும் பயிற்சிகளை வழங்கியது. இராணுவத்துக்கு புலனாய்வு தகவல்களை பெறுவதற்காக தனிநபர்களுக்கும், மாபியா கும்பல்களுக்கும் ஆயுதங்களை வழங்கிய பிறகு கொலம்பியாவில் ஆயுத வன்முறை பரவி பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்தது. அரசின் படைகளோடு இணைந்து செயல்பட்ட ஆயுதக்குழுக்கள் ஆட்களை கடத்துவது மற்றும் படுகொலைகளில் ஈடுபட்டனர்.

கிராமங்களுக்குள் புகுந்த ஆயுதக்குழுவினர் விவசாயிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளை பாரபட்சமில்லாது படுகொலை செய்தார்கள். உதாரணமாக மே 2003ல் குயாஹிபோ பழங்குடி மக்கள் வாழும் பெற்றொயெஸ் என்னும் கிராமத்தில் புகுந்த ஆயுதக்குழு ஒன்று தாக்குதலை நடத்தியது. 11,12 மற்றும்15 வயதான மூன்று சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தனர். 16 வயது நிரம்பிய கற்பிணி சிறுமி ஒமைரா பெர்னான்டெசை பாலியல் பலாத்காரம் செய்து அவரது வயிற்றை கிழித்து சிசுவை கத்தியால் வெட்டி படுகொலை நிகழ்த்தி ஆற்றில் வீசினார்கள். ஆண்கள் பலர் கொல்லப்பட்டனர். கொலம்பிய ராணுவத்தின் 18வது படை பிரிவினரும் ஆயுதக்குழுவோடு சேர்ந்து படுகொலையை நிகழ்த்தினார்கள். இதே போன்று பலமுறை கிராமங்களில் கொடூரமான முறையில் பழங்குடியினர் கொல்லப்பட்டனர்.

கொலம்பிய ஆயுதக்குழுக்களுக்கு அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் நிதியளித்தன. வாழைப்பழங்கள் மற்றும் இதர பொருட்களை விற்பனை செய்கிற அமெரிக்க நிறுவனமான சிக்குயிற்றா 1997 முதல் 2004 வரையில் 17 லட்சம் அமெரிக்க டாலர்களை ஆயுதக்குழுக்களுக்கு வழங்கியது. தொழிற்சங்கவாதிகளுக்கு மிகவும் ஆபத்தான நாடு கொலம்பியா. 15 வருடங்களுக்குள் சுமார் 4000 தொழிற்சங்க தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இந்த கொலைகளில் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் ஆயுதக்குழுக்கள் தொடர்புள்ளது. குளிர்பானம் மற்றும் தண்ணீர் விற்பனையில் வளங்களையும், உழைப்பையும் கொள்ளையடிக்கிற கொக்கோ கோலா கொலம்பியாவில் தொழிற்சங்க தலைவர்களை கொலை செய்வதற்காக ஆயுதக்குழுக்களை கூலிப்படையாக பயன்படுத்தியது.

நோபல் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பைடட் கொர்டொபா ருயிஸ் மனித உரிமை மீறல்கள் மற்றும் அரசின் மோசமான கொள்கைகளை எதிர்த்து வருபவர். அதனால் 1999 ஆண்டில் இருமுறை அரசிற்கு ஆதரவான ஆயுதக்குழு அவரை கடத்தியது. அவரை கொலை செய்ய இருமுறை தாக்குதல் நடந்தது. அவற்றிலிருந்து தப்பி கனடா நாட்டில் சிலகாலம் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். கொலம்பியாவிற்கு திரும்பிய அவர் 2002 தேர்தலில் மீண்டும் செனட்டராக தேர்வானார். பெண்கள், ஓரின சேர்க்கையினர், திருநங்கைகள், ஆப்ரோ கொலம்பியன் சமூக மக்கள் ஆகியவர்களது உரிமைகளை வலியுறுத்தியும், குடும்ப வன்முறை, ஊழல் ஆகியவற்றை எதிர்த்தும் அவரது பணி அமைந்தது. கொலம்பியன் லத்தீன் அமெரிக்க பெண்கள் அமைப்பில் முக்கிய பங்காற்றுபவர். அவரது பங்கேற்பு வழியாக பாலியல் மற்றும் மகப்பேறு சுகாதாரத்திற்கான அரச கொள்கைகள் உருவாக்கப்பட்டன. 1995ம் ஆண்டு பெண்கள் உரிமையை ஆராய்வதற்காக சீனாவின் தலைநகர் பெய்ஜிங்ல் நடந்த உலக மாநாட்டில் கலந்துகொண்டு அதனடிப்படையில் செயல்படுத்த உழைத்திருக்கிறார். அவரது முயற்சியால் தாய்மார்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கான வரைவு சட்டம் உருவானது. குடும்ப பாதுகாப்பு சட்டம், பெண்களுக்கு சமவுரிமை வழங்கும் சட்டம், குடும்ப வன்முறை தண்டனை சட்டம், பாலியல் குற்றங்களுக்கு கூடுதல் தண்டனை வழங்கும் திருத்தச்சட்டம், ஆப்பிரிக்க இன மக்களுக்கு ஆட்சிமன்றத்தில் சிறப்பு இடம் வழங்கல் ஆகிய முக்கிய விசயங்களில் பணியாற்றியிருக்கிறார்.

கொர்டொபா அமைதி வழியில் கொலம்பியாவின் மோதல்களையும், வன்முறையையும் முடிவிற்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். சமாதானத்திற்கான கொலம்பியர்கள் என்னும் அமைப்பின் தலைமையை ஏற்றிருக்கும் அவர் 2007ம் ஆண்டு முதல் 16 பணயக் கைதிகளை பார்க் கொரில்லாக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீட்டார். விடுவிக்கப்பட்ட பணயக் கைதிகள் பல ஆண்டுகளாக சிறைபிடிக்கப்பட்டவர்கள். வெனிசுவேலாவின் அதிபர் ஹூகோ சாவேசும் அவரோடு முயற்சியில் ஈடுபட்டிருந்தார். பேச்சுவார்த்தைக்காக சந்தித்த போது எடுத்த நிழற்படங்களை வைத்து கொர்டொபா மீது பார்க் கொரில்லாக்களுக்கு சாதகமானவர் என்ற குற்றச்சாட்டு பரப்பப்பட்டது. கொர்டொபாவின் முயற்சியால் விடுவிக்கப்பட்ட முன்னாள் ஆளுநர் ஆலன் யாரா, ‘நான் கடத்தப்பட்ட நேரம் கடுமையாக மன அழுத்தம் வந்தது. காரணம் விடுதலை பற்றி சிந்திக்க எந்த நம்பிக்கையும் இருக்கவில்லை,’ ‘ஆனால் 2008ல் செனட்டர் கொர்டொபா நான் உட்பட மற்றவர்களின் விடுதலைக்கு முயற்சிப்பது வானொலியில் கேட்ட நேரம் கொர்டொபா எனக்கு விடுதலை தருகிற தேவதையானார்,’ என்கிறார்.

சுமார் 700 பணயக் கைதிகளை பார்க் அமைப்பு பிடித்து வைத்துள்ளனர். மனிதாபிமான அடிப்படையில் அவர்களை மீட்பதற்காக கைது செய்யப்பட்ட கொரில்லாக்களை பரிமாறிக்கொள்ளும் முயற்சியில் கொர்டொபா ஈடுபடுகிறார். ஆனால் கொலம்பியாவின் அதிபர் ஆல்வரோ உரைப் ராணுவ தாக்குதலை நடத்த திட்டமிடுகிறார். பார்க் அமைப்பிடம் சிக்கியுள்ளவர்கள், விவசாயிகள், பழங்குடியினர் கடுமையான ஆபத்தில் சிக்க நேரிடும் என்பதால் சமாதான பேச்சுக்கள் மூலம் மோதலை முடிவுக்கு கொண்டுவரவேண்டும். அதற்காக மீண்டும் பார்க் அமைப்போடு பேச்சு நடத்த செல்ல தயாரென்கிறார் கொர்டொபா. பராக் ஒபாமா அரசு கொலம்பியாவில் ராணுவத்திற்கு நிதியுதவிகளை செய்கிறது. இவ்வருடம் கொலம்பியாவிற்கு வழங்கப்படும் நிதியில் 57% ராணுவத்திற்கு வழங்கப்படுகிறது. இதனால் ராணுவ தாக்குதல்களும், வன்முறையும் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளன. லத்தீன் அமெரிக்க நாடுகளின் வளங்கள், உழைப்பு மற்றும் பொருளாதாரத்தை அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனங்கள் நீண்ட காலமாக கொள்ளையிடுகின்றன. அவற்றிற்கு சாதகமாக பொம்மை அரசுகளை அமெரிக்கா உருவாக்குவதும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்ப்பதும் தொடர்ந்து நடைபெறுகிறது. பல நாடுகளின் பணம் செயலிழந்து அமெரிக்க டாலர் புழக்கத்திலிருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களின் உழைப்பு சுரண்டலுக்கு சாதகமாக வட அமெரிக்க தாராள வர்த்தக உடன்படிக்கை முந்தைய ஜார்ஜ் புஸ் அரசினால் உருவாக்கப்பட்டது. அதன்படி சுதந்திர பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் தொழிலாளர்களின் உழைப்பை சக்கையாக பிழிந்து எந்த உரிமைகளையும் மதிக்காத ஏற்றுமதி சார்ந்த வர்த்தக உற்பத்தி உருவாக்கப்பட்டுள்ளது. கொலம்பியாவும் அத்தகைய வர்த்தகத்தில் பங்கேற்கிறது.

‘அமெரிக்காவின் ‘கொலம்பிய திட்டம்’ லத்தீன் அமெரிக்காவில் குறிப்பாக கொலம்பியாவிற்குள் அமெரிக்காவிற்கு சாதகமானது,’ “தான் ஊக்கப்படுத்துவதாக சொல்லுகிற சனநாயக பாதுகாப்பை தடுக்கிற சுவராக கொலம்பியாவில் அமெரிக்கா செயல்பட விரும்புகிறது” என்கிறார் கொர்டொபா. ‘கடந்த இரு கொலம்பிய அரசுகளும் முந்தைய அரசுகளை விடவும் அமெரிக்க அரசு மற்றும் உலக முதலீட்டாளர்களின் பொம்மையாக செயல்படுகிறது’ என்று சாடுகிற அவர் ‘பெருகிவருகிற வேலையில்லா திண்டாட்டம் லத்தீன் அமெரிக்க நாடுகளின் மையப் பிரச்சனையாக உள்ளது. முதலாளித்துவ பொருளாதார கொள்கையை நடைமுறைப்படுத்தி அரசு நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறைகளையும் தனியாரிடம் ஒப்படைக்கும் ஒவ்வொரு நாளும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. அங்கே சமூக நீதியில்லை. அது தான் பிரச்சனை,’ என்கிறார் தீர்க்கமாக.

மேற்குலக நாடுகள் கூட்டாக கட்டியெழுப்புகிற முதலாளித்துவ பொருளாதார கொள்கைகளையும், ராணுவ ஆதிக்க கொள்கைகளையும் எதிர்க்கிறவர்களுக்கு நோபல் விருது வழங்கப்படாதது அதிர்ச்சியான விசயமல்ல. ஆதிக்கவர்க்கத்தினரின் விருதுகள் தங்களது கொள்கைகளுக்கு சாதகமானவர்களுக்கே வழங்கப்படும். நோபல் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டதற்காக நன்றி தெரிவித்த கொர்டொபா, ‘சுரண்டல் மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராக செயல்பட்டும், சமாதானம் மற்றும் நீதிக்காக போராடுவதாலும் பாலியல் பலாத்காரம், கொலை, படுகொலை, காணாமல் போகவைத்தல், சித்திரவதை, இடப்பெயர்வு ஆகியவற்றிற்கு ஆளான கொலம்பிய மக்களின் துயரங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. சண்டையில்லாததால் மட்டும் சமாதானம் ஏற்படுமென்று என்னால் நினைக்க முடியவில்லை. சமாதானம் பல கோடி மக்களின் வறுமை, சமூக புறக்கணிப்பு மற்றும் அடிமைத்தன சூழல்களில் மாற்றம் ஏற்படுத்தாது. இந்த சமாதானம் செல்வம், வளங்கள், வாய்ப்புகள், அங்கீகாரம், இணைத்துக்கொள்ளல் ஆகியவற்றை கணக்கிலெடுக்கவில்லை; வன்முறை, அதிகாரம் மற்றும் பொது வளங்களை தவறாக பயன்படுத்தல், லஞ்சம் மற்றும் மனித உரிமைகள் மற்றும் இயற்கையை அலட்சியம் செய்வதையும் நிறுத்தப்போவதில்லை. தண்டனையிலிருந்து விலக்கு, ஆயுதக்கடத்தல், ஆட்கடத்தல் மற்றும் ஏழைகளிடமிருந்து செல்வத்தை அபகரிக்கும் ஆதிக்கம் நிறைந்தவர்களையும் இந்த சமாதானம் ஒழிக்கப்போவதில்லை,’ என்கிறார். வேற்றுமைகள் மற்றவர்களை புறக்கணிக்கவோ, ஒழிக்கவோ பயன்படாத போது மட்டுமே சமாதானம் சாத்தியப்படுமென்கிறார் அவர். ‘எந்த மாறுபாடுமில்லாது அனைவரின் மனித உரிமைகளையும் மதிக்கும் போதும், அவற்றை குழந்தைகளின் சுகாதாரம், கல்வி, தரமான குடும்ப கலாச்சாரம், வன்முறையற்ற குழந்தைப் பருவம் மற்றும் இளவயதினருக்கு தரமான வேலைக்கான வாய்ப்புகள் உறுதிசெய்யப்படும் போது மட்டுமே சமாதானம் சாத்தியம்,’ என்கிறார் கொர்டொபா. அனைத்து மனிதர்களும் நிறம், பாலினம், மதம், நாடு, பாலியல் வாழ்க்கைமுறை அல்லது பொருளாதார நிலை போன்ற பாகுபாடில்லாமல் மதிப்பும் அங்கீகாரமும் பெறும் போது சமாதானம் மலரும் என்கிறார் அழுத்தமாக. கொர்டொபாவின் சமாதானம் மீதான சிந்தனை மிக ஆழமானவை. அவை அனைத்து வகை ஒடுக்குதல்கள், புறக்கணிப்புகள், ஆதிக்கங்களுக்கு மாற்றாக முழு மனித விடுதலையை இலட்சியமாக கொண்டிருக்கின்றன.

மனித விடுதலைக்காக உழைக்க உறுதிபூண்டுள்ள அவர் ஒபாமாவிற்கு அழுத்தமான செய்திகளையும் விடுக்கிறார். ‘ஒபாமாவின் பதவியேற்பு விழா பேச்சில் குறிப்பிட்ட அனைத்தையும் நிறைவேற்ற உலகமெங்கும் அமெரிக்காவின் சமாதான கொள்கையை உருவாக்க ஒபாமாவிற்கு விருது கிடைத்திருப்பது அரசியல் அடிப்படையில் மிக முக்கியமானது. அந்த விருதானது நம்பிக்கையின் ஒபாமாவை குறிப்பது, ராணுவ தளங்களின் ஒபாமாவை அல்ல,’ என்கிறார். கொலம்பியாவில் அமெரிக்காவின் புதிய ராணுவ தளங்களை உருவாக்கும் திட்டத்தை ஒபாமா மீளாய்வு செய்ய வேண்டுமா என்ற கேள்விக்கு, ‘அப்படி தான் நினைக்கிறேன். அது மட்டுமல்ல, உலகமெங்கும் சமாதானத்தை உருவாக்க ஒபாமா தயாரிக்கிற திட்டத்தில் கொலம்பியாவின் ஆயுதமோதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். அதனால் கொலம்பியாவில் மட்டுமல்ல லத்தீன் அமெரிக்கா முழுவதும் சமாதானத்தை உருவாக்கவும் ஹொண்டூராசில் சனநாயகத்தை மீட்கவும், உதாரணமாக, இந்த கண்டத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்ற அவருக்கு இந்த பரிசு அவசியமானது,’ என்கிறார் கொர்டொபா.

உதவிய இணையத்தளங்கள்

http://www.piedadcordoba.net/
http://www.globalpost.com/
http://colombiajournal.org/
http://nobelprize.org/

நவம்பர் மாத உன்னதம் இதழில் வெளிவந்தது. இனியொரு இணையத்தளத்தில் மறுபதிவு செய்யப்பட்டது.

1 கருத்துக்கள்:

பதி said...

நல்ல அலசல் மற்றும் பகிர்வுக்கு நன்றி திரு.

தென்னமெரிக்கா நாடுகளில் உள்ள அரசியலை எளிய முறையில் அலசியுள்ளீர்கள். உண்மையில், கொர்டொபா போன்றவர்களே ஆசியாவில் உள்ள பல நாடுகளுக்கும் தேவையானவர்கள்...

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com