Friday, January 04, 2013

“தமிழ் ஆழி” இதழ் அறிமுக விமர்சனம்

 
“தமிழ் ஆழி” மாதமொருமுறை செய்தி இதழ் இம்மாதம் வெளியாகி இன்னும் சில தினங்களில் கடைகளில் விற்பனைக்கு வருகிறது.

தமிழில் வார, மாத இதழ்கள் பல உள்ளன. அப்புறம் எதற்கு ஒரு புது இதழ் என்கிறீர்களா? புலனாய்வு அரசியல் வார இதழ்கள், மொழிபெயர்ப்பு இதழ்கள் என தமிழில் பல வகை மாத, வார இதழ்கள் வெளியாகின்றன என்பது உண்மை தான். தமிழில் திறமையான செய்தியாளர்களும், கட்டுரையாளர்களும் நிறைந்துள்ளனர். ஆனாலும் ஆதிக்கசார்பு, அதிகார வர்க்க நிழலில் பதுங்காத இதழை காண்பது அரிது. ஊடக அறத்துடன் முழுமையான செய்திகளை வழங்குகிற இதழ் இல்லை. “தமிழ் ஆழி” மாதமொருமுறை செய்தி இதழ் இக்குறையை போக்க வந்திருக்கிறது.

அரசியல், தொழில்நுட்பம், விளையாட்டு, வணிகம், நிகழ்வுகள், கொள்கைகள் குறித்து உள்ளூர் முதல் உலக செய்திகளை நேர்மையாகவும், ஆழமாகவும் தமிழில் தருகிற இதழை தேடுகிறீர்களா? புதிதாக வெளிவந்துள்ள “தமிழ் ஆழி” மாதமொருமுறை செய்தி இதழை வாசித்துப் பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கலாம்.

தமிழ் ஆழி முதல் இதழ் இரண்டு நாட்களுக்கு முன்னர் மின்வடிவில் எனக்கு வாசிக்க கிடைத்தது. முதல் இதழை முதலில் வாசித்த மகிழ்ச்சியுடன், தரமான இதழை வாசித்த நிறைவு எனக்கு. தமிழ் ஆழியின் ஆசிரியர் செந்தில்நாதன் தமிழக சமூக, அரசியல் களத்தில் மிக நீண்ட கால ஈடுபாடுடையவர். தமிழ் மக்களின் அரசியல், சமூகம், பொருளியல் ஆகிய பல தளங்களில் உள்ளார்ந்த நேர்மையான அக்கறையுடைவர். நீண்டகால ஊடக அனுபவமுடையவர். அவரது வழிகாட்டுதலில் தமிழ் ஆழி ஊடக அறத்தோடும், நேர்மையோடும் வளருமென்ற நம்பிக்கை முதல் இதழை வாசிக்கிற போது உருவாகிறது.

உள்ளடக்கம், வடிவமைப்பு, செய்திகள் மற்றும் கட்டுரைகளின் தரத்தை தமிழ் ஆழியின் முதல் இதழிலேயே காணமுடிகிறது. வடிவமைப்பில் உலக இதழ்களை ஒத்திருக்கிறது.

தமிழ் ஆழியின் முதல் இதழ் சுப. உதயகுமார் அவர்களை ஆண்டு நாயகராக தேர்ந்தெடுத்து மக்களின் தலைவராக அவரை அடையாளப்படுத்தியிருக்கிறது. எவ்வகையிலும் அது மிகையான தேர்வில்லை என்பது தமிழ் ஆழிக்கு சுப. உதயகுமார் வழங்கியுள்ள நேர்காணலில் நீங்கள் உணர முடியும். அவரது விசாலமான பார்வை, மக்கள் மீதான ஆழமான நம்பிக்கை, சமூக உரிமைகள், சனநாயகம் குறித்து தன்னலமில்லாத அக்கறையை அவரது நேர்காணல் பதிவு செய்திருக்கிறது. தமிழ் மக்களுக்கான அரசியலை அடையாளப்படுத்துகிறது. இந்த நேர்காணலை நிச்சயம் தவறாமல் வாசியுங்கள்.

இழந்து போன செல்வாக்கை எப்படியாவது தேர்தலுக்கு முன்னர் திரட்டி பதவி நாற்காலியை பிடிக்க வேண்டுமென்பதற்காக ஆதிக்கசாதி, இடைநிலை சாதி அமைப்புகளை கூட்டணி சேர்த்து சாதிவெறியை தூண்டி “காதல்” நாடக அரசியல் நடத்துகிற ராமதாசின் முகத்தை பேரா. தீரனின் நேர்காணல் பதிவு செய்துள்ளது. இந்த சாதிவெறி அரசியலின் பரிணாமத்தை ஆழமாக புரிந்துகொள்ள செய்கிற வகையில் சிந்தனையாளரும், விமர்சகருமான ஸ்டாலின் ராஜாங்கத்தின் கட்டுரை பல கேள்விகளை, குறிப்பாக திராவிட இயக்கத்தினருக்கு எழுப்புகிறது.

குஜராத் தேர்தல் வெற்றியை வைத்து மோடி டில்லியின் மகுடத்தை சூட்டுவாரென்று ஊடகங்கள் செய்தி பரப்புகிற சூழலில், விசயம் அவ்வளவு எளிதா என்கிற கேள்வி கே.கே.சிங் எழுதியுள்ள கட்டுரையில் உள்ளது. டில்லி பாலியல் பலாத்காரக் கொலையை தொடர்ந்து எழுந்த எழுச்சியை குறித்த கட்டுரையுடன், பாலியல் வன்முறை குறித்து ஆழமான கேள்விகளை கவிஞர் மாலதி மைத்ரியின் பதிவும் எழுப்புகின்றன. அணுக்கழிவுகள் அரசியலை ஐ.ஐ.டி மாணவர் பிரதீப் குமாரின் பத்தி நறுக்கென்று அம்பலப்படுத்துகிறது.

கடந்த நவம்பரில் பாலஸ்தீன அரசிற்கு ஐ.நாவில் உறுப்பினரல்லாத பார்வையாளர் இருக்கை கிடைத்துள்ளது உலகமெங்கும் பாலஸ்தீன மக்களின் விடுதலையை கொண்டாடுகிறவர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது. இஸ்ரேலுக்கும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் எரிச்சலையும் ஏற்படுத்தியது. கனவு தேசம் அமைய பாலஸ்தீன மக்கள் எதிர்கொள்ளுகிற சவால்களை தாவூத் குத்தாப் என்கிற பாலஸ்தீனிய பத்திரிக்கையாளர் கட்டுரையில் பதிவு செய்துள்ளார். அவசியம் வாசிக்க வேண்டிய கட்டுரை.

அமெரிக்காவின் அரசு செயலாளராக ஜான் கெர்ரி வருவாரானால் ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ள இருக்கிற சவால் குறித்த கிர்ஸன் பேட்மேனின் கட்டுரை, வால்மார்ட் போன்ற பெரிய பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களை சில்லறை வர்த்தகர்கள் எதிர்கொள்ள வழிமுறைகள் குறித்து மா. ஃபா.கே பாண்டியராஜனின் நேர்காணல், சோம. வள்ளியப்பனின் பொருளாதார அலசல், வேகமாக வளருகிற தொழில்நுட்ப சாதனங்கள் பற்றிய என்.சொக்கனின் கட்டுரை, தொழில் வணிகம் பகுதியில் கிராமத்து குளிர்சாதனப்பெட்டி, புகையில்லா விறகடுப்பு, சினிமா பகுதி, பிரபாகரன், உமா மகேஸ்வரன் மோதல் பற்றி வழக்கறிஞர் எஸ்.ராதாகிருஷ்ணனின் நினைவலையிலிருந்து, ஒருநாள் போட்டியிலிருந்து சச்சினின் விலகலை அலசுகிற அரவிந்தனின் கட்டுரை, விஷ்ணுபுரம் சரவணனின் புத்தக விமர்சனம், தமிழ் ஸ்டுடியோ அருணின் நீர்ப்பறவை திரைப்பட விமர்சனம் என தமிழ் ஆழியின் உள்ளடக்கம் பரந்துபட்டது.

இருபது ரூபாய் கொடுத்து இதழை வாங்குகிற வாசகர்களை ஏமாற்றாத தரமும், உள்ளடக்கமும் கொண்டுள்ளது தமிழ் ஆழி.
 

நிறைகள்:

  • உள்ளூர், இந்திய, உலக நிகழ்வுகளை, கொள்கைகளை, செய்திகளை ஆழமாக, நேர்மையாக பதிவு செய்துள்ளது.
  • பல்வேறு வகைப்பட்ட பிரிவுகளில் துறைசார்ந்த பிரச்சனைகளையும், கொள்கைகளையும் அலசுகிற உள்ளடக்கம்.
  • வடிவமைப்பும், அட்டைப்படமும் நேர்த்தியான தரம்.
  • மேக்ஸ்டர் வழியாக மின்வடிவிலும் வாசிக்கலாம்.

எதிர்பார்ப்பு: ஒரே இதழில் அனைத்தையும் எதிர்பார்க்க இயலாது. ஆனாலும் எதிர்காலத்தில் தமிழ் ஆழியில் எதிர்பார்ப்பவை…

  • நலவாழ்வு மற்றும் மருத்துவத்திற்கான பகுதி,
  • அரோக்கியமான உணவு வகைகள் பகுதி
  • அனைத்து வகை விளையாட்டுகளுக்கும் செய்தியில் இடம்.

சனநாயகமும், மக்களின் உரிமைகளும், இயற்கை வளங்களும் அரசாலும், கார்ப்பரேட் நிறுவனங்களாலும் முடக்கப்பட்டு அழிக்கப்படுகிற சூழலை நாம் இன்றைக்கு சந்திக்கிறோம். சுயநலமும், நுகர்வு எந்திரத்தன்மையும் சேர்ந்து நமது மனங்களை ஒவ்வொரு நொடிப்பொழுதும் செல்லரிக்கிற இக்கட்டான நிலையில் வாழுகிறோம். நம் வருங்கால வாழ்க்கைப் பாதுகாப்பு, பொருளாதாரம், மொழி, பண்பாடு, இயற்கை ஆகியவற்றின் மீதான தாக்குதல்களால் கவலை தருகிற கேள்விக்குறிகள் எழுகின்றன. அறமற்ற ஊடகங்கள் கட்டமைக்கிற செய்திகளால் நாம் சிலந்தி வலைக்குள் சிக்கிய நுகர்வு புழுக்களாக்கப்படுகிறோம். பேரச்சமும், இருளும் கண்ணுக்கெதிரே அச்சுறுத்துகிற காலப்பகுதியில் நெஞ்சில் நேர்மையுடன், வஞ்சகமில்லா அறமுடன் செயல்படும் ஊடகங்கள் தமிழ் மக்களுக்கு அவசியமாகின்றன.

தரமான, நேர்மையான செய்திகளை தருகிற இதழ்களை ஆதரித்து, வளர்த்தெடுப்பது நமது சமூக, அரசியல், பொருளாதார உரிமைகளை பாதுகாக்கவும், வென்றேடுக்கவும் அவசியமானது. உள்ளூர் முதல் உலகம் வரை கச்சிதமாக செய்திகளை ஆழமாக, நேர்மையாக பதிவு செய்துள்ளது தமிழ் ஆழி!

நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும். தமிழ் ஆழியை வாங்கி வாசியுங்கள். நண்பர்களுக்கும் பரிந்துரையுங்கள்.

1 கருத்துக்கள்:

Kovai Makkal Nalluravu Nala Sangam said...

வாழ்த்துக்கள் நன்பரே.
எனது கருத்துக்களை இனி வரும் காலங்களில் நிச்சயம் பகிர்ந்துகொள்வேன்.
நன்றி
மோகன்.

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com