Monday, June 11, 2012

மே,2012 தீராநதி இதழில் எனது நேர்காணல்


உங்கள் இயற்பெயரே தமிழ் மீது பற்றுக்கொண்ட குடும்பத்தை சேர்ந்தவராக உங்களைக் காட்டுகிறதே? 
குமரிமாவட்டம் திருவிதாங்கூரோடு இணைந்திருந்த காலத்தில் படித்ததால் அப்பாவுக்கு மலையாள மொழிவழிக் கல்வியே கிடைத்தது. அப்போதெல்லாம் அரசு பள்ளிக் கூடங்கள் பெரும்பாலும் மலையாள வழிக் கல்விமுறையில் நடந்திருக்கின்றன. வீட்டில் பேச்சு மொழி தமிழாக இருந்தது. உலக யுத்தத்தின் போது ராணுவத்திற்காக கட்டாய ஆள்சேர்ப்பு நடந்தது. அதிலிருந்து தப்பிக்க அப்பாவின் படிப்பு ஆறாம் வகுப்போடு நிறுத்தப்பட்டது. பின்னர், தமிழ் நாளிதழ்களை வாசித்து தமிழில் எழுத, படிக்க கற்றிருக்கிறார். அண்ணாவின் எழுத்துக்கள் மற்றும் பேச்சுக்களால் தமிழ் பற்றும் ஆர்வமும் கூடியதால் அப்பா எங்கள் அனைவருக்கும் அழகிய தமிழ்ப் பெயர்களை சூட்டினார். அம்மா பள்ளியில் கல்வி கற்றதில்லை. நான் துவக்கப் பள்ளியில் தமிழ்வழிக் கல்வியில் படித்தேன். ஆனாலும் ஆறாம் வகுப்பு முதல் ஆங்கில வழிக்கல்வியில் கட்டாயமாக சேர்க்கப்பட்டேன். பள்ளி இறுதியாண்டிற்கு பிறகு கல்லூரியில் தமிழ் படிக்கும் ஆர்வம் இருந்தது. வேலைவாய்ப்பு, குடும்ப பொறுப்பு போன்ற காரணங்களின் பெயரில் தொழில்நுட்ப கல்வி திணிக்கப்பட்டது. அப்பாவின் வாசிப்பு பழக்கம் எனக்கும் தூண்டுதலாக இருந்தது. இளமைக் காலங்களில் மேடைபேச்சு, கட்டுரை, கவிதை அரங்கம் போன்ற ஈடுபாடுகளினால் தமிழில் வாசிப்பு பழக்கம் பெருகியது.

உங்கள் இளமைக்காலம் எப்படியானது?
வறுமையும், நோயும் சேர்ந்திருந்தாலும் இயற்கையோடு புரண்டு திரிந்த நாட்கள் அவை. பள்ளி விடுமுறை நாட்களில் கட்டுமான வேலையில் உடலுழைப்பில் ஈடுபட்டேன். கட்டுமானப் பணிக்கு உதவியாளாக வேலை செய்பவர்களை கட்டிடம் கட்டுபவர்களும், ஒப்பந்தக்காரர்களும், வீட்டின் உரிமையாளர்களும் சேர்ந்து துரத்தி, துரத்தி வேலை வாங்குவதை அனுபவித்தேன். சாந்து சட்டி, கரண்டி, சுத்தியல், அளவுக்கோல் போன்றவற்றை நண்பர்களின் கிண்டல் பார்வையிலிருந்து தப்பிக்க மறைவாக எடுத்து சென்றிருக்கிறேன். அப்போது உடலுழைப்பு குறித்து பொதுப்புத்தியில் பதிந்துள்ள குறைவான மதிப்பீடும் அவமானகரமான பார்வையும் என்னை பாதித்தது.

அப்பா ரப்பர் தோட்டம் ஒன்றில் தின ஊதியத்திற்கு உழைத்தார். அப்போது அவரது வருமானம் மாதம் சுமார் 2000 ரூபாய். அதை வைத்து அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி குழந்தைகள் அனைவரையும் படிக்க வைத்தார். குழந்தைகளை நல்ல விதமாக படிக்க வைத்து, வேலையில் அமர்த்தி சிரமமில்லாத பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டுமென்ற ஆசையும், செயல்பாடும் அப்பாவிற்கு அதிகமாக இருந்தது. அம்மா மிகவும் பொறுப்பான கடுமையான உழைப்பாளி. அவரது தாய், தந்தை 7 வயதில் இறந்த பிறகு வீடும், வீட்டுவேலையும், அனைவரது தேவைகளையும் அறிந்து நிறைவேற்றுவதும் இன்று வரையில் அவரது உலகமாகியுள்ளது. சமையல் செய்யவும், வீட்டுவேலைகளை செய்யவும் அம்மாவிடமிருந்து தான் கற்றேன். அம்மா, அக்காவோடு நெருக்கமாக வளர்ந்தது எனது பள்ளிப்பருவ நாட்கள். அப்போதெல்லாம் நூல்களை வாசிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பெரியார், அண்ணா உள்ளிட்ட சுயமரியாதை இயக்கத் தலைவர்கள், பொதுவுடமை இயக்கத் தலைவர்கள் குறித்து அப்பா அவ்வப்போது சொல்லுவார். பெரும்பாலும் சமூகத்தில் நடைபெறுகிற நிகழ்வுகள் குறித்து அப்பா அடிக்கடி வீட்டில் எங்களோடு இரவு உணவின் போது பேசுவார். அரசியல் குறித்த அறிமுகம் அப்பாவிடம் இருந்தே வந்தது.

கல்வியை முடித்த பிறகு ஒப்பந்த அடிப்படையில் 10 ரூபாய் தின ஊதியத்திற்கு தொழிற்சாலையில் வேலை, விற்பனை பிரதிநிதியாக பல மாதங்கள் ஊதியம் இல்லாமல் வேலை, 2 ஆண்டுகளுக்கும் அதிகமாக வேலையில்லாமல் இருந்தது உட்பட பல அனுபவங்கள் கிடைத்தன. இன்று தொழிலாளர் உரிமை, மனித உரிமை சார்ந்த விசயங்களில் ஈடுபட இந்த அனுபவங்களுக்கு பெரும்பங்குண்டு. கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் துவங்கிய 1989ல் கல்லூரிக்கு போகாமல் இளையோர், மாணவர் அமைப்புகளோடு ஈடுபட்டு அணு உலை எதிர்ப்பு போராட்டங்களிலும், வேலையை அடிப்படை உரிமையாக்க கோரிய போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தேன்.

கூடங்குளம் அணு உலை தொடக்கத்திலேயே போராட்டம் நடத்தப்பட்டதா?
ஆமாம். இன்றைக்கு அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை முடக்குவதற்காக பரப்புகிற பொய்களில் அம்மக்கள் துவக்கத்தில் போராடவில்லை என்பதும் ஒன்று. ஆனால் சோவியத் ரசியாவிடம் ஒப்பந்தம் செய்து கூடங்குளத்தில் அணு உலையை துவங்க ராஜீவ் அரசு அறிவிப்பு செய்ததும் தென்மாவட்டங்களில் அணு உலைக்கு எதிரான போராட்டங்கள் துவங்கிவிட்டன. மாவட்ட தலைநகரம், தாலுகா, சிறுநகரங்களில் பல கட்டங்களாக உண்ணாவிரதம், அடையாள வேலைநிறுத்தம் ஆகிய போராட்டங்கள் நடந்தன. மீனவ மக்கள், விவசாயிகள், பெண்கள் அமைப்புகள், இளையோர் மற்றும் மாணவர் இயக்கங்கள் இணைந்து நிலம் கையகப்படுத்தல் துவங்குவதற்கும் முன்னரே எதிர்ப்பு தெரிவித்தனர். நீரைக் காப்போம்! உயிரைக் காப்போம்! என்ற முழக்கத்தோடு கன்னியாகுமரியில் பல்லாயிரம் மக்கள் திரண்ட பேரணி கூடங்குளம் அணு உலைக்கு எதிராக நடந்தது. ஊர்வலம் கன்னியாகுமரி காவல்நிலையத்துக்கு அருகில் வந்த போது திட்டமிட்டு, தேவையற்ற துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில் உயிர் இழப்பும் ஏற்பட்டன.

நாங்கள் மாணவப் பருவத்தில் இருந்த போது நடைபெற்ற இப்போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறோம். இன்றைக்கு இப்போராட்டத்தை சாதி, மத முத்திரையைக் குத்தியும், அயல்நாட்டு தூண்டுதல் என்றும் அநியாயமாக பழி சுமத்தி அழிக்க அரசுடன் பலரும் கூட்டு சேர்ந்துள்ளார்கள். ஆனால் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் துவங்கிய காலத்திலும் உள்ளூரில் நிதியை வசூலித்து மிக குறைந்த பொருட் செலவிலேயே அந்தந்த பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. ஒருமுறை போராட்டத்திற்காக சுவர், துணி விளம்பரங்களை எழுத துரிகை வாங்க பணம் இல்லாமல் தேங்காய் சவுரியைப் பயன்படுத்தி எழுதினோம். போராட்டப் பந்தல், ஒலிபெருக்கி செலவிற்கு உள்ளூர் கடைகளிலும், பயணிகளிடமும் உதவி பெற்றோம். கூடங்குளத்திற்கு பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீரை கொண்டு செல்ல திட்டம் உருவான போதும் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட அளவில் வேலைநிறுத்தம், சாலைகளை மறித்தும் பலமுறை போராட்டம் நடந்தன. அப்போதும் கூடங்குளம் அணு உலை திட்டத்தை கைவிடுமாறு கோரிக்கைகள் மிகவலுவாக உருவானது. பின்னர் சோவியத் ரசியா கூட்டமைப்பின் உடைவிற்கு பிறகு அத்திட்டத்தை அரசும் தொடரவில்லை. போராட்டமும் வீரியமாகத் இருக்கவில்லை. மீண்டும் இந்திய அரசு கூடங்குளம் அணு உலைகள் திட்டத்தை துவங்கவே போராட்டம் வேகமெடுத்தது. ஆக துவக்கம் முதல் மக்கள் தங்கள் எதிர்ப்பை பல வழிகளில், பல கட்டங்களாக தெரிவித்திருக்கும் நிலையில் தவறு மக்களிடமில்லை.

சமூக அக்கறை உள்ள மனிதராக எப்போது, எப்படியான சூழலில் மாறத் தொடங்கினீர்கள்?
தொழிலாளர் இயக்கக் களப்பணி அனுபவமும், தொடர்ந்த தேடலும், வாசிப்பு பழக்கமும் சமூகத்தை உற்று ஆழமாக நோக்குகிற பார்வையை தந்தது.

அநீதியான சூழலில் சிக்கியிருக்கிற மிக எளிய மனிதர்கள் எனக்குள் மாற்றத்தை, சமூகத்தின் மீதான அக்கறையை உருவாக்கியதில் பெரும்பங்கு வகிக்கிறார்கள். திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் கிராமங்களில் களப்பணி செய்த போது நேரடியாக கண்ட அனுபவங்கள் என்னை பாதித்தன. குறிப்பாக வேலைக்கும், சாதிக்குமான உறவையும் அதனால் உருவாகிற அடிமைத்தனத்தையும், பாதிப்புகளையும் உணர்ந்தேன். வேலை வழங்குபவருக்கும், வேலை செய்பவருக்கும் இடையில் இருப்பது முதலாளி-தொழிலாளி உறவாக மட்டுமில்லை. அது வாழ்க்கையின் சகல விசயங்களையும் கட்டுப்படுத்தி, அதிகாரம் செலுத்தி, ஒடுக்கியும், ஒதுக்கியும், அடக்கியும் வைக்கிற அரசியல், பொருளாதார, உளவியல் தாக்குதலை செய்கிறது. மேலோட்டமான பார்வையிலிருந்து ஊடுருவி அடி ஆழம் வரையில் சமூகத்தை உற்று நோக்கவும், மிக எளியவர்களின் அனுபவங்களை கேட்கவும் கற்றுக்கொள்ள களப்பணி வாய்ப்பாக அமைந்தது. அப்படி நான் சந்தித்த மிக எளிய மனிதர்கள் பலரும் எனக்குள் மாற்றத்தை உருவாக்கியுள்ளனர்.

தொழிற்சங்கம் சார்ந்த இயக்கப் பணிகளில் எப்போதிலிருந்து ஈடுபட்டு வருகிறீர்கள்? என்ன பணிகளில் ஈடுபட்டு வருகிறீர்கள்?
1996ம் ஆண்டு முதல் தொடர்ந்து தொழிலாளர் உரிமைக்கான பணிகளில் ஈடுபட்டுள்ளேன். குறிப்பாக இந்தியாவிற்குள் 2000 ஆண்டு வரையில் அமைப்புசாராத துறையிலும், ஒப்பந்த முறையிலும் வேலைசெய்கிற இளம் தொழிலாளர்களை கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும் குழுக்களாக சேர்த்து, அவர்களது உரிமைகள், வேலை பற்றிய விழிப்புணர்வை ஊட்டும் பணிகளில் ஈடுபட்டு வந்தேன். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வேலை பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட சமூகப்பாதுகாப்பு திட்டங்களை உருவாக்க விழிப்புணர்வை உருவாக்குதல், அரசுக்கு கோரிக்கை வைத்தல் ஆகிய செயல்பாடுகளில் ஈடுபட்டேன். அதன் தொடர்ச்சி பல உரிமைக்கான செயல்பாடுகளுக்கும் அவர்களை தூண்டுவதாக அமைந்தது. 2000ம் ஆண்டிலிருந்து நான் சார்ந்திருந்த தொழிலாளர் இயக்கத்தின் மூலம் ஆசிய பசிபிக் மண்டல நாடுகளில் இளம் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான பணியில் ஹாங்காங்கிலிருந்து செயல்பட்டேன். அப்போது ஆசிய பசிபிக் நாடுகளின் தொழிலாளர்களின் நிலைமை, பிரச்சனைகள் குறித்த நேரடி அனுபவமும், அறிவும் பெருகியது. தொழிற்சங்கம் அமைப்பதும், சங்கத்தில் சேர்ந்து உரிமைகளுக்காக போராடுவதும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களும், இந்திய அரசியல் சட்டமும் வழங்கியுள்ள அடிப்படையான உரிமை. ஆனால் இந்த உரிமை வேலையிடங்களில் மறுக்கப்படுகிறது. இன்றைய அரசுகளும் தொழிற்சங்க உரிமையை முடக்குகிற ஏமாற்று வேலையை வர்த்தக ஒப்பந்தங்கள், சிறப்பு சட்டங்கள் வழியாக செய்கின்றன.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான உரிமைகளுக்காக 17 ஆண்டுகளாக தொடர்ந்து செயல்படுகிறேன். இந்தியாவில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பேறுகாலம், ஓய்வுகாலம், உடல்நலமின்மை போன்ற காலங்களில் சமூகப்பாதுகாப்பு திட்டத்தை உருவாக்க பல்வேறு அமைப்புகள், தொழிற்சங்கங்கள் நீண்ட காலமாக கோரின. அதனால் அமைப்புசாரா தொழிலாளர்கள் சமூகப்பாதுகாப்பு சட்டம் (Unorganised Workers' Social Security Act, 2008) இந்திய பாராளுமன்றத்தில் 2008ம் ஆண்டில் நிறைவேறியது. அச்சட்டத்தினால் நலவாரியம் உருவாக்க வழி உருவானது. ஆனால் ஏற்கனவே வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்காக நடைமுறையிலிருந்த 10 திட்டங்களை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் வழங்க அச்சட்டம் விரிவாக்கம் செய்தது. ஆனால் அந்த திட்டங்களில் ஒன்று கூட அமைப்புசாரா தொழிலாளர்களின் தேவை, சூழ்நிலைக்கு ஏற்ப உரிமை அடிப்படையில் உருவாக்கியதில்லை. ஏற்கனவே இருந்த திட்டங்களை இணைத்து அதற்கு சட்டவடிவமாக புதிய பெயரை சூட்டி ஏமாற்றுகிறது அரசு. அதுபோல அமைப்புசாரா வேலைகளில் ஏற்படுகிற பிரச்சனைகளை தடுத்து, ஊதியம், வேலை நேரம், விடுமுறை நாட்கள், ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை சட்டரீதியாக வழங்கி, நடைமுறைப்படுத்தவும் கோரிக்கை எழுந்தது. ஆனால் அரசும், தொழிலாளர்த்துறையும் இதுவரையில் அதற்கான சட்ட வடிவமொன்றை உருவாக்கவில்லை. இத்தகைய பாதுகாப்பு அம்சங்களில்லாததால் தான் இன்றைக்கு உடலுழைப்பு வேலைகளுக்கு பல மாநிலங்களில் தொழிலாளர் தட்டுப்பாடு உருவாகிறது. வேலையின் தன்மை, பாதுகாப்பு அம்சங்கள், உரிமைகளை சட்டரீதியாக உறுதி செய்து, நடைமுறைப்படுத்தாமல் காலங்கடத்தினால் விவசாயம் உள்ளிட்ட பல துறைகள் வேலை செய்ய ஆட்களில்லாமல் அடியோடு அழிந்து போகும்.

பெல்ஜியம் சென்றது எப்போது?
முன்னர் இளம் தொழிலாளர் இயக்கத்தில் பணியாற்றினேன். அதில் சர்வதேச தலைவராக 4 ஆண்டுகள் பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டு 2005 ல் பெல்ஜியம் சென்றேன். பணி நிமித்தமாக தொடர்ந்து அங்கேயே தங்கியிருக்க வேண்டிய சூழல் உருவானது. அந்தப் பணி முடிந்த பின்னர் தொடர்ந்து பெல்ஜியத்தில் தங்கியிருந்து ஆசிய நாடுகளில் தொழிலாளர் உரிமை, தொழிற்சங்கம் சார்ந்த பணிகளை செய்கிறேன்.

அங்கு எப்படியான பணிகளில் ஈடுபட்டு வருகிறீர்கள்?
அலுவலகப் பணிக்காக பெல்ஜியத்தில் தங்கியிருந்தாலும், ஆப்பிரிக்கா நாடுகளில் தொழிலாளர் பிரச்சனை மற்றும் உரிமை சம்பந்தமான செயல்பாடுகளில் தொடர்ந்து 4 ஆண்டுகள் ஈடுபட்டேன். அப்போது ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் செய்து களப்பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஆப்பிரிக்க மக்களின் பிரச்சனைகள், வாழ்வு குறித்த அறிதலையும், புரிதலையும் எனக்கு அது வாய்ப்பாக அமைந்தது. ஐ.நாவின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) ஆண்டுக்கு ஒருமுறை நடத்துகிற சர்வதேச மாநாடுகளில் 8 முறை கலந்துகொண்டேன். அதில் உருவாக்கிய சர்வதேச தொழிலாளர் சட்டங்களில் தொழிலாளர்களின் உரிமையை பாதுகாக்கிற அம்சங்களை சேர்க்க அரசுகளின் பிரதிநிதிகளோடு பேச்சுவார்த்தை மற்றும் அழுத்தம் கொடுக்கும் பணிகளை செய்து அதில் பலமுறை வெற்றியும் கிடைத்தது. 2007ல் உருவாக்கிய மீன்பிடி வேலை சம்பந்தமான சட்டம், 2011ல் உருவாக்கிய வீட்டுவேலை தொழிலாளர் சட்டத்தை இதில் குறிப்பாக சொல்லலாம். 2010ம் ஆண்டு முதல் வீட்டுவேலை செய்கிற தொழிலாளர்களின் உரிமை, தொழிற்சங்கத்திற்கான பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்கல் ஆகிய வேலைகளில் ஈடுபடுகிறேன். பெண்கள் அதிகமாக ஈடுபடுகிற இத்துறையில் உழைப்பு, வேலையின் தன்மைகள், தொழிலாளர் உரிமை சம்பந்தமாக எழுகிற பிரச்சனைகள், ஒவ்வொரு தொழிலாளியையும் ஒன்றுசேர்த்து சங்கமாக்குவதில் சந்திக்கிற சவால்கள் ஆகியவற்றை குறித்து மிக ஆழமாக புரிந்துகொண்டு எதிர்கொள்ள நடவடிக்கைகளில் ஈடுபட பயிற்சிகளையும், ஆலோசனைகளையும் வழங்குகிறேன்.

பிளமிஸ் மொழி எழுத்தாளர் ஜோஸ் வான்டலு எழுதிய நாவல் ஆங்கிலம் வழியாக தமிழில் அபாயம் என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அந்த நாவல் அணு உலையின் கதிர்வீச்சு தன்மையின் கொடூரத்தை விளக்குகிறது. அங்கு அணு உலைகள் பற்றிய நிலமை என்ன?
பெல்ஜியத்தில் 1974ல் துவங்கி 7 அணு உலைகள் இயங்குகின்றன. தேசிய திட்டக்குழு தயாரித்த 2005 அறிக்கையின் படி இந்த அணு உலைகள் மொத்த உற்பத்தியில் 9% மின்சாரத்தை உருவாக்குகின்றன. பிளமிஸ் மொழி பேசுகிற மக்கள் அதிகமாக வாழுகிற பிளாண்டர்ஸ் மாகாணத்தில் வீடுகளுக்கும், சதொழில்களுக்கும் சுமார் 50% தேவையை அணு மின்சாரம் நிறைவேற்றுகிறது. பெல்ஜியத்தில் இயங்குகிற 7 அணு உலைகளும் 40 ஆண்டுகள் இயங்கிய பின்னர் மூட வேண்டுமென்று 1999ல் சோசலிஸ்டுகள், லிபரல்கள், பசுமைக் கட்சியினர் அனைவரும் இணைந்து பாராளுமன்றத்தில் முடிவெடுத்தனர். அதோடு புதிய அணு உலைகள் எதுவும் திறக்கக்கூடாதென்றும் முடிவானது. இதுவரையில் அந்த முடிவில் மாற்றமில்லை. 2025ம் ஆண்டிற்குள் அனைத்து அணு உலைகளையும் மூடுவதற்கு அரசு முடிவெடுத்துள்ளது. கடந்தனாண்டு 2015ம் ஆண்டிற்குள் மூன்று அணு உலைகள் மூடப்பட்டுவிடுமென்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குவிந்திருக்கிற அணுக்கழிவுகளை அப்புறப்படுத்துவதும், பாதுகாப்பதும், அழிப்பதும் பெரும் செலவை உருவாக்குகிற சவாலான பிரச்சனையாக உள்ளது. ஒரு அணு உலையை பெல்ஜியம் மூடிவிட்டது.

இந்தியாவில் தாராப்பூரிலும், ராஜஸ்தானிலும் 4 அணு உலைகளின் 40 ஆண்டுகால ஆயுள் காலம் 2009 மற்றும் 2011ல் முடிவடைந்துள்ளது. ஆனால் அந்த அணு நிலையங்களின் நிலை குறித்து ரகசியம் காக்கப்படுகிறது. அவற்றை மூடுவதற்கும், அணுக்கழிவுகளை அகற்றுவதற்குமான செலவுக்கான ஒதுக்கீடு குறித்த தகவல்களும் இல்லை.

உரிமைக்காகவும், தங்களைப் பாதுகாக்கவும் போராடுகிற மக்களை குற்றவாளிகளாக சித்தரிக்கிறது அரசு. இடிந்தகரையில் மக்கள் துளியும் வன்முறையில்லாமல், கட்டுக்கோப்பாக, அரசியல் சட்டம் தங்களுக்கு வழங்கியுள்ள சனநாயக வழியில் போராடுகிறார்கள். ஆனால் அரசு அவர்களைச் சுற்றி துப்பாக்கிகளையும், ஆயுதம் தாங்கிய படைகளையும் குவித்து பொருளாதார முற்றுகை மற்றும் தடையை ஏற்படுத்தியது. அப்பகுதி மக்களின் அடிப்படை உரிமையான குடிநீர், மின்சாரம், பால் உட்பட அனைத்தையும் மறித்து முடக்குவது எவ்வகையில் சட்டப்பூர்வமானது அல்லது சனநாயகம்? இந்திய அரசுக்கு சனநாயகப் பண்பையும், வன்முறையற்ற பாதையையும் சொல்லித்தருகிறது இன்றைக்கு இடிந்தகரை போராட்டம். உண்மையில், அரசின் வன்முறையும், அதிகாரமும் அவர்களிடம் தோல்வியடைந்துள்ளது. இந்திய அரசு அணு உலைகள் மற்றும் அணுக் கொள்கை விசயத்தில் வெளிப்படையாக இல்லை. கார்ப்பரேட் நிறுவனமாக மாறியுள்ள இந்திய அரசு இந்த விசயத்தில் அரசியல் சட்டம், பாராளுமன்ற நடைமுறை ஆகிய எவற்றையும் மதிக்கவில்லை. 

உங்களின் ''திரை கடலோடியும் துயரம் தேடு'' நூல் சொல்லும் சேதிகள் தமிழுக்கு மிகவும் புதிது. இந்த நூல் எழுதும் எண்ணம் எப்படி உருவானது?
2008ம் ஆண்டு சென்னை புத்தகச் சந்தைக்கு சென்றிருந்த வேளை நண்பர் ம.சிவகுமார் மூலம் ஆழி பதிப்பகம் செந்தில்நாதனின் அறிமுகம் கிடைத்தது. அவருடன் கலந்துரையாடியதில் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த நூலை எழுதுகிற எண்ணம் உருவானது. அதற்கு முன்னர் எழுதுகிற எண்ணமோ, திட்டமோ இருக்கவில்லை. நூலை எழுத முடிவு செய்த பின்னர் அதற்கான தயாரிப்பு பணிகளிலும், ஆய்விலும் பல மாதங்கள் ஈடுபட்டேன். புலம்பெயர் தொழிலாளர்கள் பலரிடம் நேர்க்காணல் செய்தும் தகவல்களையும், அனுபவங்களையும் சேகரித்தேன். ஏற்கனவே எனக்கு அறிமுகமான பிரச்சனையாக இருந்ததால் தொழிலாளர்களின் அனுபவங்களை சேர்த்து கோர்வைப்படுத்தவும், தகவல்களை திரட்டவும் எளிதாக இருந்தது.

புலம்பெயர் தொழிலாளர்களின் மீதான அக்கறை எப்போது ஏற்பட்டது?
எனது குடும்ப உறவினர்கள், நண்பர்கள் அயல்நாடுகளுக்கு சென்று வேலை பார்க்கிற பாதிப்புகளை ஏற்கனவே அறிந்திருந்தேன். உறவினரில் தற்காப்புக்கலையில் தேர்ச்சி அடைந்த ஒரு துடிப்பான இளைஞன், தொழிற்கல்விக்கு பிறகு வளைகுடா நாடொன்றில் வேலைக்கு போயிருந்தார். அடுத்த ஆண்டில் அவர் அங்கே இறந்து போனது என்னை பாதித்தது. அங்கே பாலைவனத்தில் கால்நடைகளை மேய்க்கிற பணியில் அவர் சிக்கியதாகவும், கடுமையான வெப்பத்தின் தாக்குதலில் இறந்ததாகவும் உறவினர்களிடையே பேசப்பட்டது. ஆனாலும், அதற்கு எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இழப்பீடுகளும் வழங்கப்படவில்லை. எதிர்காலத்திற்காக அந்த இளைஞனை நம்பியிருந்த குடும்பம் அவரது உடலைக் கொண்டு வந்து பார்க்கவே படக்கூடாத வேதனைகளை அனுபவித்தார்கள். இப்படி அயல்நாட்டில் வேலை செய்கிற தொழிலாளர் மரணங்களையும், அயல்நாட்டிலிருந்து அவர்கள் உடல்களை கொண்டு வருவதையும் ஒவ்வொரு முறையும் செய்திகளில் அறிகிற போது அதிகமாக அறியப்படாத, பேசப்படாத இப்பிரச்சனையை அறியும் தேவை உருவானது.

குமரி மாவட்டத்தில் புலம்பெயர்வு முதலில் கேரளாவிற்கு கட்டுமானத் தொழிலுக்காக நடைபெற்றது. பின்னர் அங்கேயிருந்து கிடைத்த அயல்நாட்டு தொடர்பு மற்றும் குடிபெயர்வு ஏற்பாடுகளால் வளைகுடா மற்றும் கிழக்கு ஆசியாவிற்கு குமரி மாவட்டத்திலிருந்து புலம்பெயர்ந்தனர். அதுவரையில் இணைந்து விளையாடிக் களித்தும், சண்டையிட்டு மல்லுக்கட்டியும் கூட்டமாக இருந்த ஆண்கள் பலர் உள்ளூரில் இல்லை. ஊரே அமைதியாகிவிட்டது. திருமணங்கள், மரணச் சடங்குகள், பண்டிகைகள், திருவிழாக்களில் பழைய ஆட்கள் இல்லாமல் கழையிளந்து போயிருந்தன. கிராமம் அல்லது ஊர் சுருங்கி காம்பவுண்ட் சுவருக்குள் ஒற்றை வீடாகியது. வீட்டில் பெண்கள் அனைத்தையும் ஏற்று நடத்தும் நிலை வந்தது. அதுவரையில், வெளியாட்கள் வீட்டிற்கு வந்தால் வீட்டிற்குள் இருந்த பெண்கள் கடைகளுக்கும், பள்ளிகளுக்கும், வங்கிகளுக்கும் செல்லத் துவங்கினார்கள். பெண்களே வீடு கட்டும் பணியை மேற்பார்வையிட்டு பார்த்து சிலாகித்து கட்டினார்கள். இரண்டு அல்லது மூன்று வருடத்திற்கு பிறகு அயல்நாட்டில் இருக்கிற கணவன் 6 மாத விடுமுறைக்கு வருவதும், அவர் சென்ற ஆறு மாதத்தில் அடுத்த குழந்தை பிறப்பதும், குழந்தையின் குரலை தொலைபேசியில் அவர் கேட்பதும் வழக்கமானது. குடிசைகள் மாடி வீடுகளாகின. தோட்டங்கள் சேர்ந்தன. குடும்பங்களில் சிக்கல்களும், அகமுரண்பாடுகளும் உருவாகி வளர்ந்தன. திடீரென்று பெரும் சமூக நிகழ்வு நடைபெற்றது போல தோன்றியது. பலர் தங்கள் இளமையை, வாழ்வை, பாசத்தை புலம்பெயர்தலில் தொலைத்தனர். இந்த நல்லவைகளும், அல்லாதவைகளும் என்னைப் பாதித்தன.

பணி நிமித்தம் ஹாங்காங்கில் இருந்த 4 ஆண்டுகளில் சுமார் 3 லட்சம் புலம்பெயர் வீட்டுவேலை தொழிலாளர்கள் அங்கே அனுபவிக்கிற துன்பம், கொடுமை, அநீதி, உரிமை மறுப்பை கண்டேன். அவர்களின் நிலமையை அறிந்த போது புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான பார்வையும், அக்கறையும் வளர்ந்தது.

உங்கள் நூலில் படிக்கும் செய்திகள் மனதை கலங்கடிக்க செய்வதாக உள்ளதே?
உங்களைப் போல இந்நூலை வாசித்த பலரும் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள். அவை அனைத்தும் துளியும் கற்பனையில்லாத உண்மைகள். ஒவ்வொரு புலம்பெயர் தொழிலாளியும் அனுபவித்த சோகக் கதைகள் என்பதால் அவை கலங்க வைக்கின்றன. நூலுக்காக தகவலை சேகரித்த போதும், நேர்காணலை எடுத்த போதும் பலரது அனுபவம் என்னை கலங்க வைத்தது. இன்னும் சொல்லப்படாத அனுபவங்களும் உள்ளன. புள்ளி விபரங்களைக் காட்டிலும் மனிதர்களின் வாழ்வியல் அனுபவங்கள் உண்மைகளையும், பிரச்சனைகளின் கனத்தையும் புரியவைக்கும் வல்லமையுடையவை.

பெண்களுக்கு ஏற்படும் அனுபவங்கள் மிகவும் கொடூரமானதாக இருக்கிறதே?
ஆமாம். பெண்களை சரிசமமான உரிமைகளுடன் மனிதர்களாக நடத்துகிற சமூகமாக நாம் இல்லை. பாலின அடிப்படையிலான ஆழமான பாகுபாடு உள்ளது. குடும்பங்களிலும், சமூகத்திலும், வேலையிடங்களிலும் பெண்கள் மீதான வன்முறைகள் உருவாகின்றன. உடல் ரீதியாக மட்டுமே பெண்கள் மீதான வன்முறை நிகழ்த்தப்படவில்லை. பேச்சு, பார்வை, மிரட்டல், பொருளாதாரத் தடை, கட்டுப்பாடுகள், சந்தேகம் என்று மிக ஆழமான உளவியல் தாக்குதல் நிகழ்த்தப்படுகிறது. குடும்பங்களில் துவங்கி இந்த வன்முறை வேலையிடங்களில் விரிகிறது. பெண்கள் அதிகமாக ஈடுபடுகிற வீட்டுவேலை, ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்ட பணிகளை எடுத்துக்கொண்டால் பெண்களை உடமை போல வேலைக்கு அமர்த்துபவர்கள் கருதுகிறார்கள். உரிமைகளைக் கேட்டால், வெளிப்படையாக கருத்துச் சொன்னால் வேலை போய்விடும் என்கிற அச்சமான நிலமை வேலையிடங்களில் உள்ளது. இந்த அச்சத்தை போக்குகிற கடமை அரசுக்கு உண்டு. வேலை பாதுகாப்பிற்கான சட்டங்களையும், வழிகளையும், தீர்வுகளையும் உருவாக்க முடியும். அப்படி பாதுகாப்பான நிலமை உருவாகிற போது பெண்களால் பிரச்சனைகளை எதிர்கொள்ளவும், தங்களுக்கு இழைக்கப்படுகிற அநீதிகளுக்கு எதிராக துவக்கத்திலேயே குரலெழுப்ப முடியும். ஆனால் தற்போதைய நிலை அப்படியான சூழலை உருவாக்கவில்லை. இருக்கிற வேலை போனால் அடுத்த வேலைக்கு எங்கே போவது? வருமானத்திற்கு என்ன செய்வது? அடுத்த வேளை உணவு, குழந்தைகளை எப்படி காப்பாற்றுவது? ஒவ்வொருவருக்குள்ளும் இப்படியான பல கேள்விகள் அநீதியை எதிர்க்கவும், உரிமைகளை கேட்கவும் தடையை ஏற்படுத்துகிறது. பெரும்பாலான பெண்களுக்கு தங்கள் பிரச்சனைகளை நம்பிக்கையுடன் சொல்லி, தீர்வை பெறுகிற வாய்ப்புகளும், வழிகளும், அமைப்புகளும் கிடைப்பதுமில்லை. தங்களது உரிமைகள் குறித்தும் ஆழமான புரிதல் இல்லை.  
பெண்களை வேலைக்கு அமர்த்தினால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடமாட்டார்கள் என்று கருதி குறைந்த ஊதியத்திற்கும், மோசமான சூழலிலும் வேலைக்கு அமர்த்துகிற போக்கு அதிகமாக உள்ளது. திருப்பூரில் ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் சில வருடங்கள் ஒப்பந்தமுறையில் கிராமங்களிலிருந்து பெண்களை சேர்க்கிறார்கள். அதிகமான அளவு வேலை வாங்குவதால் அவர்களது உடல்நிலை பாதிக்கப்படுகிறது. ஊதியத்தை மாதம் தோறும் வழங்குவதில்லை. வேலை நிறுவனத்தின் வளாகத்தில் மிக சிறிய அறைகளில் பலர் சேர்ந்து தங்கியிருக்க வேண்டும். வெளியே செல்ல அனுமதியில்லை. வெளியுலக தொடர்பு என்பது மறுக்கப்படுகிறது. அவர்களுக்கு மோசமான உணவை வழங்குகிறார்கள். ஊதியம் என்ற பெயரில் ஒரு சிறு தொகையை சில வருடம் ஒப்பந்தம் முடியும் போது கொடுக்கிறார்கள். கிராமப்புறங்களில் பெண்களை ஏற்றுமதி உற்பத்தி நிறுவனங்கள் அடிமைப்படுத்துகிற இதற்கு பெயர் சுமங்கலித் திட்டம். வீட்டுவேலைக்கும் சுமங்கலித்திட்டம் என்ற பெயரில் ஆட்களை அனுப்புகிறது தமிழகத்தில் துவங்கியுள்ளது. அடிமைத்தனமான் இம்முறை போலவே சென்னை போன்ற பெருநகரங்களின் மிகப்பெரிய துணிக்கடைகளில் வேலை செய்கிறவர்கள் வேலை நிலமையும் உள்ளது.
மாநில அல்லது மத்திய அரசுகள் சட்டங்களை உருவாக்கி, தொழிலாளர்த் துறையின் செயல்பாட்டை சீரமைத்தால் இவற்றை மாற்ற முடியும்.  குறைந்தபட்ச ஊதியம், வேலை நேரம், ஊக்கத்தொகை, விடுமுறை, ஓய்வுநேரம், தங்குமிட வசதிகள் உட்பட அனைத்தையும் செயல்படுத்த முடியும். அதனால் பெண்களின் வருமானம், வேலை உத்தரவாதம், வேலைத்தரம் வளரும். அயல்நாடுகளுக்காக வேலை தேடி அலைய வேண்டிய அவசியம் ஏற்படாது. ஆனால் நமது அரசுகள் இந்த விசயத்தில் பொறுப்பற்று இருக்கின்றன. சட்டத்தை இயற்றினாலும் அவற்றை செயல்படுத்துகிற நடைமுறை மற்றும் கண்காணிப்புகளில் அரசு கவனம் செலுத்தவில்லை. தொழிலாளர் துறையிலும் லஞ்சமும், உழலும் பெருகியுள்ளது. அமைப்புசார தொழிலாளர்களுக்கான நலவாரியத்தில் உறுப்பினராக சேர சான்றிதழ் வழங்க ஒவ்வொரு தொழிலாளியிடமும் கிராம அலுவலர்கள் துவங்கி, மாவட்ட தொழிலாளர் அலுவலகம் வரையில் லஞ்சம் வாங்குகிறார்கள். அவற்றை தடுக்க வேண்டிய முற்போக்கு தொழிற்சங்கவாதிகள் பலரும் மொத்தமாக தொகையை வசூலித்து அதிகாரிகளிடம் கொடுக்கிற கொடுமையும் நடக்கிறது. வேலையிடங்களுக்கு திடீர் பரிசோதனைக்காக செல்லுகிற வழக்கம் தற்போது தொழிலாளர் துறையிடம் அறவே இல்லை. இந்த சூழலில் உழைக்கிற பெண்கள் நீதியும், பாதுகாப்பும் தேடி எங்கு தான் செல்லமுடியும்?
பெண்கள் இணைந்து ஈடுபடுகிற சூழ்நிலையை தொழிற்சங்கங்கள் உருவாக்க தவறியுள்ளன. பெரும்பாலும் ஆண்களின் சிந்தனையால் நடத்தப்படுகிறது. தொழிற்சங்கத் தலைமைப் பொறுப்புகளில் பெரும்பாலும் ஆண்களே இருக்கிறார்கள். அதிலும் இளையோரை காண முடிவதில்லை. அவர்களால் பெண்களின் பிரச்சனைகளை எளிதாக உணரவோ, அவற்றிற்கு முக்கியத்துவம் தரவோ முடிவதில்லை. பெண் தொழிலாளிகளுக்கு மட்டுமே உரிய பிரச்சனைகளும், அநீதிகளும், உரிமை மறுப்புகளும் வேலையிடங்களில் பரவலாக உள்ளன. ஆனாலும் அப்பிரச்சனைகளுக்கு தொழிற்சங்கங்கள் வலுவான குரல்களை எழுப்புவதில்லை. உலக அளவில் இன்றைக்கு தொழிற்சங்கங்களுக்குள் இருக்கிற இக்குறைபாடுகள் குறித்து பேசவும், நடவடிக்கையும் எடுக்கவும் ஆரம்பித்துள்ளன.

தங்களுக்கு உறுதுணையாக இருக்கும் வீட்டுப் பணியாளர்கள் மீது படித்த, பண்புள்ள மனிதர்களாக நாம் நினைப்பவர்கள் நடந்து கொள்ளும் முறை நம்பமுடியாததாக உள்ளதே? இதில் செயல்படும் உளவியல் காரணங்கள் என்னவாக இருக்கும்?
படித்த மனிதர்கள் பண்பானவர்களாக அல்லது சக மனிதர்களின் உரிமைகளை, சுயமரியாதையை மதிப்பவர்களாக, இயற்கையை பேணுபவர்களாக இருப்பார்கள் என்பதெல்லாம் பொதுப்புத்தியில் உறைந்துள்ள கற்பிதம் மட்டுமே. வீட்டுவேலை தொழிலாளர்களுக்கு உரிமையை மறுத்து, ஏற்றத்தாழ்வுடன் நடத்துபவர்களில் பெரும்பகுதியினர் படித்தவர்கள், உயர்பதவிகளில் இருப்போர், சமூகத்தில் புகழும் அங்கீகாரமும், செல்வாக்கும் மிக்க மனிதர்கள் தான். மருத்துவர்கள், ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், வங்கி அலுவலர்கள், அரசு துறைகளின் அலுவலர்கள், வர்த்தகர்கள் இவர்களில் எவரும் விதிவிலக்கல்ல. சம்பளத்தோடு விடுமுறை நாட்களை அனுபவிக்கிற படித்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலரும் தங்கள் வீடுகளில் வேலை செய்கிற தொழிலாளிக்கு வார விடுமுறை நாளில் வேலைக்கு வராவிட்டால் சம்பளத்தை பறித்துவிடுகிறார்கள். ஆனால் ஆண்டு தோறும் தங்களது சம்பளம், ஊக்கத்தொகை உட்பட அனைத்து உரிமைகளும் அதிகமாக வேண்டுமென்று தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட அவர்கள் தவறுவதில்லை. உரிமை என்பது தனக்கு மட்டுமே. வேலை செய்பவர்களை எப்படி வேண்டுமானாலும் விருப்பம் போல நடத்திக்கொள்ளலாம் என்கிற போக்கு இங்கே நடைமுறை வழக்கமாக உள்ளது.
இன்றையக் கல்வி பொருள், பணம், சொத்து சேர்க்கவும், சந்தைப்படுத்தவும், விளம்பரப்படுத்தவும் மட்டுமே கற்றுத் தருகிறது. இந்திய சமூகத்தின் அடிநாதமாக புரையோடியிருக்கிற சாதி அடக்குமுறை ஒவ்வொரு மனிதனையும் இன்னொரு மனிதனைக் காட்டிலும் மிக உயர்ந்த இடத்தில் இருப்பதாக உளவியல் அடிப்படையில் கருத வைக்கிறது. இந்தக் கருதுதல் மனிதனிடமிருந்து வேலையையும், உழைப்பையும் பிரித்து அடக்குமுறையில் ஈடுபடவும், சமூகத்திலிருந்து ஒதுக்கவும், புறக்கணிக்கவும், பாரபட்சமாக நடத்தவும் தூண்டுகிறது. அதுவே உழைப்பிற்கான நியாயமான ஊதியத்தை மறுக்கவும், குறைந்த ஊதியத்திற்கு அடிமைகளாக நடத்தவும் வழியை ஏற்படுத்துகிறது.
பெரும்பாலும் வீட்டுவேலை பெண்களால், அதுவும் சமூகத்தில் பொருளாதார அடிப்படையில், சாதி அடிப்படையில் விளிம்புநிலையில் உள்ள எளியவர்களால் செய்யப்படுகிறது. வேலைக்கு அமர்த்துபவர்களிடம் ஆழமாக பதிந்துள்ள சாதி, ஆணாதிக்க, நிலபிரபுத்துவ மனநிலையை வீட்டுவேலை செய்பவர்களிடம் ஒவ்வொரு முறையும் வெளிப்படுத்துகிறார்கள். வீடுகளில் இருக்கிற உயர்தர பொருட்கள், செல்லப்பிராணிகளிடம் காட்டுவதில் ஒரு விழுக்காடு மரியாதையையும் வீட்டுவேலை தொழிலாளர்களிடம் காட்டுவதில்லை. வீட்டுவேலைத் தொழிலாளியிடம் ஒருவர் எவ்வாறு நடந்துகொள்கிறார் என்பதை வைத்து மரியாதை, மதிப்பு, சமூக அடையாளத்தை நிர்ணயம் செய்கிற நிலமை எதிர்காலத்தில் உருவாக வேண்டும்.
இந்தியாவில் வீட்டுவேலைப் பெண்களின் நிலை – குறிப்பாக தமிழகத்தில்- என்ன? அவர்களுக்கு அமைப்பு ரீதியான செயல்பாடு உள்ளதா?
வீட்டுவேலைக்கு ஆட்களின் தேவை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. ஆனால் கண்ணியமிக்க வேலையாக கருதி வீட்டுவேலை செய்ய எவரும் முன்வரும் நிலை இல்லை. 2005ம் ஆண்டின் அரசு கணக்குப்படி சுமார் 50லட்சம் தொழிலாளர்கள் வீட்டுவேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்த எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் இரு மடங்காக ஆகியுள்ளது. அரசுசாராத அமைப்புகளின் கணிப்பின் படி சுமார் 9கோடி தொழிலாளர்கள் இந்தியா முழுமையும் வீட்டுவேலையில் ஈடுபடுகிறார்கள். ஆனாலும் ஒரு வேலைக்குரிய சட்ட அங்கீகாரத்தை இந்தியாவில் வீட்டுவேலை இன்னும் பெறவில்லை. பெரும்பாலான பெண்கள் வேறு வழியில்லாமல் தான் வீட்டுவேலைக்கு செல்பவர்கள். சட்ட அங்கீகாரமும், பாதுகாப்பும் வீட்டுவேலைக்கு இல்லாமையால் ஏராளம் பிரச்சனைகள் உருவாகின்றன.
வீட்டுவேலை செய்கிற தொழிலாளிக்கு மாதம் 300 ரூபாய் முதல் 600ரூபாய் வரை சம்பளத்தில் 30 நாட்களும் வேலை வாங்குகிறார்கள். நகரங்களில் பெரும்பாலும் 1000 அல்லது 1500 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபாடுடைய கேரள மாநிலத்தில், திருச்சூரில் 27 ஆண்டுகளாக ஒரே வீட்டில் சமையல் முதல் அனைத்து வேலைகளையும் செய்கிற 60 வயதான ஒரு பெண்மணிக்கு 650 ரூபாய் மட்டும் ஊதியமாக கொடுக்கிறார்கள். பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல், வீட்டை சுத்தம் செய்து துடைத்தல், கழிவறையை சுத்தம் செய்வது ஆகிய அனைத்து வேலைகளையும் செய்கிறவருக்கு சென்னைக்கு அருகே விழுப்புரம், செங்கல்ப்பட்டு மாவட்டங்களில் மாதம் ரூபாய் 200 மட்டுமே வழங்கப்படுகிறது. அவர்களுக்கு வாரம் ஒருநாள் விடுமுறை வழங்குவதில்லை. வாரவிடுமுறை ஊதியத்தோடு வழங்க வேண்டும். ஆனால் வாரவிடுமுறைக்கு வேலைக்கு வராமல் போகாவிட்டால் ஒரு நாள் ஊதியத்தை பிடிக்கிறார்கள். இன்னும் பல வீடுகளில் வீட்டுவேலை செய்பவர்களின் ஊதியத்தை மாதம் ஒருமுறை பணமாக வழங்காமல் பொருளாக கொடுக்கிறார்கள். வேலைக்கு சேரும் போது குறிப்பிடுகிற வேலை, வேலையின் அளவு ஒன்றாக இருக்கிறது. சில நாட்களில் புதிய வேலைகளை அதிகமாக செய்ய வைக்கிறார்கள். வேலை செய்கிற நேரம் வரையறை இல்லாமல் அதிகமாகிறது. உதாரணமாக ஞாயிற்றுக்கிழமை வாரவிடுமுறை வழங்கும் வீடுகளில் சனிக்கிழமை அடுத்த நாளைய சமையலையும் சேர்த்து செய்யவும், ஞாயிற்றுகிழமை பயன்படுத்திய பாத்திரங்களை திங்கட்கிழமை வரையில் குவித்து வைத்து வேலை வாங்கும் தந்திரமும் நடக்கிறது. ஆண்டுக்கு ஒருமுறை ஒரு மாதம் ஊதியத்தை ஊக்கத்தொகையாக (bonus) வழங்குவது தான் முறை. ஆனால் பெரும்பாலான வீடுகளில் ஊக்கத்தொகையை வழங்குவதில்லை. வழங்குபவர்களில் பலரும் சுமார் 200 ரூபாய் செலவில் ஒரு உடையை வாங்கிக் கொடுத்து ஏமாற்றுகிறார்கள். அதிலும் சில வீடுகளில் பழைய துணிகளைக் கொடுக்கிறார்கள். பெரும்பாலான வீட்டுவேலைத் தொழிலாளர்கள் ஊதியம், வேலை நேரம் நிலமை மிகமோசமாக இருந்தாலும் வெகுசிலருக்கு மட்டும் 2 மணி நேரம் வேலைக்கு மாதம் 2000 ரூபாய், ஊக்கத்தொகையாக ஆண்டுக்கு ஒரு மாத ஊதியம், வாரவிடுமுறை ஆகியவை கிடைப்பதும் காணமுடிகிறது. அவர்களுக்கு வேலையில் தங்களது உரிமைகள் குறித்த அறிவும், பேரம் பேசுகிற திறனும், வேலை நேர்த்தியும் இருப்பதால் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.
வீட்டுவேலையில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சனைகள் இல்லாததாக கருதுகிறோம். ஆனால் வீட்டுவேலையும் அபாயகரமானது. நவீன சமையலறையில் பயன்படுத்துகிற அடுப்பு முதல் அனைத்திலும் பாதுகாப்பு பிரச்சனைகள் உள்ளன, அவை நேரடியாக வீட்டுவேலைத் தொழிலாளியை பாதிக்கின்றன. வீடு, துணி, பாத்திரம், கழிவறைகளை சுத்தப்படுத்த கொடுக்கிற பயன்படுத்தக்கூடாத அபாயகரமான ரசாயன கலவைகள், சோப்பு, அமிலங்கள் போன்றவைகளால் கை, கால்களில் அரிப்பு மற்றும் தோல் நோய்களும், நுரையீரல் சம்பந்தமான நோய்களும் உருவாகின்றன. பெரும்பாலான வீடுகளில் கழிவறையையும், வீட்டையும் சுத்தம் செய்பவர்களுக்கு அவசியமான கையுறைகள், பூட்ஸ், நீளமான துப்புரவு உபகரணங்களை வாங்கிக் கொடுப்பதில்லை. நான் சந்தித்த பல வீட்டுவேலை தொழிலாளர்களிடம் இதன் பாதிப்பை காணமுடிந்தது. அதுகுறித்த போதிய விழிப்புணர்வும் அவர்களிடமில்லை. வீட்டில் துணி துவைக்கிற எந்திரம் இருந்தாலும், வீட்டுவேலை செய்பவர்களிடம் கையால் துணியை துவைக்க வைக்கிறார்கள். எந்திரத்தில் துவைத்தால் பாழடைந்து போகுமென்று நினைக்கிற இவர்கள் சக மனிதனை சக்கையாக சாறுபிழிந்து வேலை வாங்குகிற மனநிலையை என்ன சொல்வது? மோசமான பாதுகாப்பற்ற நிலையில் நாம் இந்த வேலையை ஏன் செய்யத் தயங்குகிறோம் என்று ஒரு நிமிடம் நினைத்தால் போதும். அப்படி நினைத்தால் இவற்றை மாற்ற முடியும்.
வீட்டுவேலை செய்பவர்கள் அனுபவிக்கிற பிரச்சனைகளின் தன்மைகளில் அதிர்ச்சிக்குள்ளாக்குகிற சாதித் தீண்டாமை, நிலபிரபுத்துவ ஆதிக்க ஒடுக்குமுறை ஆழமாக இருக்கிறது. அனைத்து புற வேலைகளையும் செய்ய ஒருவரையும், சமையலுக்கு தனது சாதியைச் சார்ந்த பெண்ணையும் படித்த, உயர் பதவிகளில் இருக்கிறவர்களும் ஈடுபடுத்துகிறார்கள். வீட்டுவேலைத் தொழிலாளிகளுக்கு முன் வாசல் வழியாக நுழையவும், வெளியேறவும் பெரும்பாலான வீடுகளில் அனுமதியில்லை. பின்வாசல் வழியாக நுழைந்து, வெளியேறும் அவர்கள் தான் வீட்டின் உள்ளறைகள் முதல் அனைத்து பகுதிகளையும் சுத்தம் செய்கிறார்கள். பெருநகரங்களின் அடுக்குமாடி குடியிருப்புகள், பண்ணை வீடுகள் கட்டுகிற நிறுவனங்கள் வீட்டுவேலைத் தொழிலாளர்கள் நுழைய தனியாக வாசல் கட்டியிருப்பதை சொல்லி விற்பனையில் ஈடுபடுகின்றன. வீட்டுவேலைத் தொழிலாளிக்கு மட்டும் தனி சாப்பாடு பாத்திரமும், குவளையும் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். பெரும்பாலான வீடுகளில் அவர்களால் சாப்பிட முடியாத, பழைய சாப்பாட்டையும், மோசமான உணவையும் குப்பையில் கொட்டுவதற்கு பதிலாக வீட்டுவேலை செய்பவர்களுக்கு கொடுக்கிறார்கள். சில இடங்களில் கழுவி வைத்த பாத்திரங்கள், துணிகளை ஒரு வாளி தண்ணீரை வைத்து மீண்டும் அலசி அல்லது கொஞ்சம் தண்ணீரை அவற்றில் தெளித்து சுத்திகரிப்பு சடங்கை நடத்துகிறார்கள். இவையெல்லாம் தீண்டாமையும், ஆதிக்கமும் நிறைந்த ஏற்றுக்கொள்ள முடியாத தடுக்கப்பட வேண்டிய குற்றங்கள். வீட்டில் கவனக்குறைவால் எங்காவது வைத்த பொருட்கள் உடனடியாக கிடைக்காத போது வீட்டுவேலைத் தொழிலாளிகள் மீது விழுகிறது. அதுவரையில் குறைந்த ஊதியத்திற்கு அதிகமாக வேலை வாங்குவதற்காக நீயும் எங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக நினைக்கிறோம் என்று பாசமழை பொழிந்தவர்கள் பொய் வழக்கு போடுவது வரையில் செல்லுகிறார்கள். வீட்டுவேலைத் தொழிலாளர்கள் பாலியல் கொடுமைகளும், வன்முறைக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள். ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் 18 வயதுக்கும் குறைந்த வீட்டுவேலைத் தொழிலாளியை நகரின் முக்கிய வர்த்தக பிரமுகரான அந்த வீட்டுக்காரர் பாலியல் பலாத்காரம் செய்து, மண்ணெண்ணெய் விட்டு தீ வைத்து, மருத்துவமனையில் பொய் சொல்லி சேர்த்திருக்கிறார். மரண வாக்குமூலத்தில் அனைத்தையும் சொல்லிய பிறகு மரணமடைந்தார் பாதிக்கப்பட்ட அப்பெண். குற்றவாளியின் மனைவி அரசு உயர் பதவியில் இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி கொலை மற்றும் பாலியல் பலாத்கார வழக்கு பதிவாகாமல் தடுக்கும் முயற்சி நடைபெற்றது. வீட்டுவேலைத் தொழிலாளர் சங்கத்தின் தலையீட்டால் வேறுவழியில்லாமல் கொலைவழக்கு பதிவுசெய்து அந்த நபரை கைது செய்தது காவல்த்துறை. வழக்கை நீதிமன்றத்திலும், மனித உரிமை கமிசனிடமும் வீட்டுவேலைத் தொழிலாளிகளின் சங்கம் நடத்துகிறது. செங்கல்பட்டு அருகே இறையூர் என்கிற கிராமத்திலிருந்து ஒரு பெண் கேரளாவில் வீட்டுவேலை செய்யும் போது கொலை செய்யப்பட்டார். அந்த பிரச்சனையை தமிழகத்திலுள்ள வீட்டுவேலைத் தொழிலாளர் சங்கம் கையிலெடுத்து வழக்கு நடத்துகிறது. வீட்டுவேலைத் தொழிலாளர்களுக்கு இன்றைக்கு மாநில அளவிலும், தேசிய அளவிலும் சங்கம் இருக்கிறது. அச்சங்கத்தின் மூலம் அவர்களுக்கு உரிமைகள் பற்றிய விழிப்புணர்வும், பிரச்சனைகளிலிருந்து பாதுகாப்பும் உருவாக வழி ஏற்படுகிறது.
பொதுவாக வெளிநாட்டு வேலை என்றால் அதிகம் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு தான் செல்வார்கள். உங்களது பணி வேறுவிதமாக உள்ளதே?
இளவயதின் துவக்கத்தில் எனக்கும் நல்ல வேலை, வசதியான வாழ்க்கை என்ற கனவுகள் இருந்தன. களப்பணி பணம் குறித்த பார்வையை எனக்குள் மாற்றியிருக்கிறது. வாழ்க்கையின் தேவைகளுக்கும், பாதுகாப்பிற்கும் பணம் அவசியம் தான். தேவைகளை நிறைவேற்றுவது மற்றும் பாதுகாப்பான வாழ்வு குறித்த கனவு எனக்கும் உண்டு. வாழ்வின் மகிழ்ச்சியையும், நிறைவையும் பணம் தராதென்பது எனது அனுபவம். பசியும், பற்றாக்குறையுமாக அலைந்த சிறுவயது நாட்களின் நிறைவை, களிப்பை பணம் நிறைந்த நாட்கள் தந்ததில்லை. உரிமைகள் இல்லாமல் பணம் மட்டும் இருப்பதால் நிம்மதியாக, பாதுகாப்பாக நாம் இருக்க முடியாது. நான் மட்டும் வசதியாக, பாதுகாப்பாக இருந்து கொண்டு சக மனிதர்கள் உரிமைகள் மறுக்கப்பட்டு பிரச்சனைகளில் துன்பப்படுவது சமூக அமைதியையும், ஆழ்மனதின் அமைதியையும் குலைத்துவிடும்.
அயல்நாடுகளில் தங்கியிருந்து தொழிலாளர் உரிமை, மனித உரிமை சார்ந்த பணிகளில் ஈடுபடுவதன் மூலம் நமது சமூகத்தையும், அரசியலையும், பிரச்சனைகளையும் விலகியிருந்து ஆழமாகப் பார்க்கிற வாய்ப்பு கிடைக்கிறது. மற்ற நாடுகளிலிருந்து நல்ல விசயங்களையும், பிரச்சனைகள் குறித்த அறிவையும் பெற முடிகிறது. இதுவரை சுமார் 32 நாடுகளுக்கு சுற்றித் திரிந்து அடிமட்டத்தில் எளிய மனிதர்களை சந்தித்து அவர்களின் அனுபவங்களை அறிந்து, கொள்கை வகுக்கிற அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் உரிமைகள் மற்றும் பிரச்சனைகளுக்காக வாதாடிய இந்த அனுபவம் மகிழ்ச்சியைத் தருகிறது. மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகளுக்காக வேலை செய்வதிலிருந்து கிடைத்த அனுபவங்களையும், அறிவையும் மிகப்பெரிய சொத்தாக கருதுகிறேன்.

நேர்காணல்: பௌத்த அய்யனார், 
தீராநதி, மே 2012

உங்கள் கருத்து என்ன?

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com