Tuesday, October 28, 2008

ஈழப்பிரச்சனையில் தமிழக/இந்திய முரண்கள்-பாகம்1

தமிழக அனைத்துக் கட்சி கூட்ட தீர்மானம், மக்கள் போராட்டங்கள், மனிதசங்கிலி நடவடிக்கைகளின் அழுத்தத்தால் மன்மோகன்சிங் அரசு தமிழர் இனப்பிரச்சனையில் நீண்ட மௌனத்தை கலைத்தது. தொடர்ந்து இலங்கையின் இராஜபக்சே அரசு புதுடில்லிக்கு பாசில் ராஜபக்சேவை அனுப்பி இயற்கை பேரிடரினால் தமிழ்மக்கள் பட்டினியால் வாடுவது போன்ற தோற்றத்தை உருவாக்கிருக்கிறது. இலங்கை அரசின் யுத்த வெறியில் உயிருக்கு போராடி, பட்டினியால் வாடி, பதுங்கு குழிகளில் முடங்கி, மரங்களுக்கடியில் அகதிகளாக தமிழ் மக்கள் ஆக்கப்பட்டதை பற்றிய கண்டனமோ, கவலையோ இந்திய-இலங்கை தரப்பு அறிவிப்புகளில் துளியும் இல்லை. பஞ்சத்தால் வாடும் மக்களுக்கு உணவு பொருட்களை திரட்டி அனுப்புவது போன்று பிரணாப் முகர்ஜி 800 டன் உணவுப் பொருட்களை அனுப்புவதாக அறிவித்துள்ளார். கிடைத்தவரை இலாபம் என்று இலங்கை அரசும் இந்தியாவிடமிருந்து உணவை பெற முடிவு செய்திருக்கிறது. உணவுப் பொருட்கள் தமிழீழத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்று சேருமா, சுனாமி நிவாரண பொருட்கள் கொள்ளையிடப்பட்டது போன்று இராணுவ முகாம்களுக்குள்ளும், அரசியல்வாதிகளின் பைகளிலும் முடங்குமா என்பதை வரும் நாட்களில் அறியலாம்.

கலைஞரிடம் ‘ஈழத்தமிழர் பிரச்சனையில் எக்காரணம் கொண்டும் மத்திய அரசுக்கு நெருக்கடியை தரமாட்டோம்’ வாக்குறுதியை பெற்று பிரணாப் முகர்ஜி புதுடில்லிக்கு சென்ற பின்னர், இன்று காலை 11.15 மணியளவில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் பாடசாலைக்கு அருகில் மக்கள் குடியிருப்புக்கள் மீது இலங்கை வான்படையின் மிக் 27 விமானக்குண்டுத்தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் மூன்று பேரை கொன்றுள்ளது. இத்தாக்குதலில் 11 பேர் காயமடைந்துள்ளனர். பாடசாலையில் படித்து வருகிற சுமார் 1,300 மாணவர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர். கடந்த வாரத்தில் புதுடில்லி-கொழும்பு அரசியலில் ஏமாற்றப்பட்டார் அல்லது அவரும் இணைந்து தமிழினத்தை ஏமாற்றியிருக்கிறார் என்ற பழிச்சொல் ஏற்படாமலிருக்க அரசியல் அழுத்தத்தை தொடரும் பொறுப்பு தற்போது கலைஞருக்கு மிக அதிகமாகவே இருக்கிறது.

இலங்கை அரசு நாள்தோறும் தமிழர்களது குடிசைகளில், பள்ளிக்கூடங்களில், மருத்துவமனைகளில், காடுகழனிகளில் ஆயிரக்கணக்கான துப்பாக்கிகளால் துளைப்பதையும், வான்வெளியாக விமான குண்டுகளை வீசி அழிப்பதையும், ஆயுதமுனையில் சிறார்களை கடத்தி துணைப் படைகளின் ஆயுத வன்முறைக்கு உள்ளாக்குவதையும், பெண்களை துப்பாக்கி முனையில் பாலியல் வல்லுறவு செய்வதையும் எதிர்க்காமல் உணவு பொருட்கள் மட்டுமே வழங்கும் புதுடில்லியின் அரசியலை தமிழர்கள் மட்டுமல்ல மனிதநேயம் கொண்டவர்கள் புரிந்துகொள்வர். ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை அரசின் கண்மூடித்தனமான விமான தாக்குதல்களை நிறுத்த இந்தியா எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை. இலங்கை படைகளுக்கான பயிற்சிகள், தொழில்நுட்பம், தகவல் பறிமாற்றம், தொழில்நுட்பவியலாளர்கள், ஆயுதங்கள், பண உதவி, உலக அரசியல் அரங்குகளில் இலங்கைக்கு ஆதரவு என அனைத்தையும் செய்து இலங்கை அரசிற்கான யுத்தத்தை இந்தியா மறைமுகமாக நடத்துவதால் அப்படி ஒரு அழுத்தத்தை கொடுக்கும் நிலையில் இந்தியா இன்று இல்லை. இந்த நிலை தொடர்ந்தால் இந்தியாவால் இலங்கை இனப்பிரச்சனையில் சிங்கள ஆதிக்கத்தின் ஆதரவு நாடாக மட்டுமே செயல்பட முடியும்.

ஈழத்தமிழர் போராட்டத்தை இன்று பயங்கரவாதம் என்ற மாயப்பெட்டிக்குள் அடைக்க முனைகிற புதுடில்லியின் அரசியல் கொள்கை வகுப்பாளர்களும், அரசியல்வாதிகளும், ஊடகவியலாளர்களும் ஈழத்தின் முதற் பகுதி வரலாற்றை வசதியாக மறைத்து இலங்கைத் தீவின் சிங்கள ஆதிக்கத்தை ஆதரிக்கிற தவறை தொடர்ந்து செய்கிறார்கள். இலங்கையை விட்டு பிரித்தானியர்கள் வெளியேறியது முதல் இன்று வரையிலும் ஈழத்தில் தமிழர்கள் அமைதியான பல வழிகளிலும் உரிமைக்காக போராடினார்கள். அவர்களோடு பல ஒப்பந்தங்களை ஏற்படுத்தியது இலங்கை அரசுகள். ஒவ்வொரு ஒப்பந்தமும் சிங்கள பேரினவாதத்தின் அரசியலால் முறிக்கப்பட்டன. சிங்கள பேரினவாத இலங்கை அரசுகள் தொடர்ந்து ஏமாற்றியதன் விளைவாகவே ஆயுதம் தாங்காத அரசியல் போராட்டங்கள் ஆயுதம் தாங்கிய போராட்டமாக உருவாகின. ஆயுதம் தாங்கியவர்களை ஆதரிப்பதில்லை என்று அறிக்கைகள் விடுப்பதற்கு முன்னர் இலங்கை அரசியலில் தமிழீழ போராட்டத்தின் அடிப்படை அம்சங்களான ஆயுதங்களற்ற போராட்டங்களை தமிழக/இந்திய தலைவர்கள் அறிவ வேண்டும். தமிழீழம் என்ற கோரிக்கையை முதலில் முன் வைத்தவர் யார் தெரியுமா? வேலுபிள்ளை பிரபாகரனா? விடுதலைப் புலிகளா? ஏன் தமிழீழ கோரிக்கை எழுந்தது?


நாளை பார்ப்போம்…

உங்கள் கருத்து என்ன?

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com