Tuesday, July 31, 2007

திருவின் மனதிற்கினிய எட்டு - 1

நீண்ட நாட்களாக வேலை நிமித்தமான பயணம், கூட்டங்கள் என அலைந்து வலைப்பதிவிலிருந்து காணாமல் போன வேளை, மனநிறைவை தந்த எட்டு எழுத தோழி. பத்மா அர்விந்த் அழைத்திருந்தார் (ஏற்கனவே நண்பர். ரவிசங்கர் நாடு நல்ல நாடு எழுத அழைத்தது காத்திருக்கிறது. மன்னிக்கவும் ரவி!). அது ஏன் எட்டாக இருக்க வேண்டும்? காரணம் இன்னும் பிடிபடாவிட்டாலும் அன்பின் அழைப்பை ஏற்று நினைவுகளில் மூழ்கி எழுந்த எட்டுகளை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

திருச்சியில் தங்கியிருந்து தஞ்சை, கும்பகோணம், புதுக்கோட்டை, திருச்சி மாவட்ட கிராமங்களில் இளம் வயதினரோடு பழகி பணி புரிந்த காலம் மிகவும் மனநிறைவான காலம். 1996 ஜனவரி மாதம் திருச்சியில் தங்கியிருந்து இளம் தொழிலாளர்களை திரட்டி அவர்களது உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை தரும் பணி கிடைத்தது. கையில் ஒரு பையுடன் களம் வந்து சேர்ந்த போது ஒரு நல்ல மனிதரின் நட்புடன் துவங்கிய களப்பணியில் மனநிறைவு கிடைத்தது. கிராமங்கள் தோறும் பயணம் செய்து அந்த மக்களின் பிரச்சனைகளை உணர்ந்த போது எனக்குள் மனிதநேயம், கோபம், ஆழ்ந்த சமூக பார்வை என பல மாற்றங்கள் நிகழ்ந்தது. இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தின் சாதி கட்டமைப்பிற்கும் பிற மாவட்டத்தின் சாதி ஆதிக்கத்திற்கும் வேறுபாடுகள் உண்டு. செருப்பு தைக்கும், சவம் அடக்கம் செய்யும் நண்பரிடமும் சாதிப்பிரச்சனைகளின் தாக்கம் எதார்த்த வாழ்வை, சமூக உறவுகளை மனிதாபிமானமற்று சிதைத்திருப்பதை உணர்ந்தேன். சாதி பற்றிய அனுபவங்களையும், பார்வையையும் எனக்குள் சுரக்க வைத்தவர்கள் தலித் மக்கள். தொடர்ந்து எதிர்ப்புகளுக்கிடையே அந்த மக்களுடன் சில ஆண்டுகள் நடத்திய பயிற்சிகள் மற்றும் போராட்ட களங்கள் வழி பலர் நான் பணியாற்றிய அமைப்பில் தலைமை ஏற்ற போது மனநிறைவை தந்தது.

********

மனதை நிறைத்த இனிய நிகழ்வு இன்னொன்று கமலுடன் ஏற்பட்ட முதல் சந்திப்பும் அதன் தொடர்ச்சியும். ஒரு மாலைப்பொழுது நண்பர் ஒருவர் "திரு! ஆங்கிலம் அல்லது மலையாளத்தில் பேச உங்களுக்கு தெரியும் தானே? எனது அறையில் ஒருவரை வந்து சந்தித்து பேசுங்களேன்" என்றார். 'சரி! வருகிறேன்' என்று அவருடன் நடந்தேன்.

நண்பரது அறையில் ஒருவர் இருந்தார். பார்த்த நிமிடத்தில் இவர் ஒரு வாகன பராமரிப்பாளராக இருப்பாரோ என எண்ணினேன். அவரது உடல் மற்றும் உடையெங்கும் கருப்பாக அழுக்கு படிந்திருந்தது.

நண்பர் அறிமுகம் செய்தார். 'ஐயாம் கமல்' என்றார் அவர்.

'கமல் மலையாளம் அறியுமோ?' தொடர்ந்து மலையாளத்தில் அறிமுகம்.

'உங்கள் ஊர் எங்கே? என்ன விசயமாக வந்திருக்கிறீர்கள்?'

'சொந்த ஊர் கேரளத்தில், கண்ணூர். வீட்டை வீட்டு வெளியேறிவிட்டேன்......' என்றார் அவர்.

'சாப்பிட போகலாமா' என அழைத்தேன்.

'சரி வருகிறேன் அதற்கு முன்னர் குளிக்கவேண்டும்' என்றார்.

எனது அறையில் அவருக்கு குளிக்க ஏற்பாடு செய்து, மாற்று உடைகள் கொடுத்த போது, 'சவரம் செய்ய பிளேட் கிடைக்குமா?' என்றார்.

குளித்து முடித்து அவர் வரும் வரை நண்பரது அறையில் காத்திருந்தேன். அதற்குள் முகமலர்ச்சியுடன் முந்தைய அடையாளம் தெரியாத அளவு கமல் மாறியிருந்தார். தொடர்ந்து கமல் சொன்ன சோகங்களை மௌனமாக கேட்டேன். அம்மாவின் பாசம் உணராததால் வீட்டை விட்டு பல ஆண்டுகளுக்கு முன்னரே வெளியேறி இந்தியா முழுவதும் பல மடங்களில் சென்று பின்னர் வெளியேறியதாக அந்த 24 வயது இளைஞன் சொன்ன போது கவலையாக இருந்தது.

தொடர்ந்து கமல் தங்கும் அறையாக எனது அறை, கமலுக்கு உடைகள், உணவு, படிக்க ஆங்கில நாளிதழ்கள் மற்றும் புத்தகங்கள் என அவர் விருப்பப்படியே தொடர்ந்தது. திடீரென கமலின் குணங்கள் மாறிக்கொண்டே இருந்தன. பேச்சில் தொடர்ச்சியின்மை இல்லை. ரயில் பெட்டிகளை இணைப்பது போல ஆங்கில சொற்களை இணைத்து அவர் பேசிய நீளமான வாக்கியங்களில் அர்த்தம் இருப்பதை விட கோபமும், விரக்தியும் அதிகமாக இருந்தது. ஆங்கிலத்தில் penis என கமல் போட்ட கையெழுத்தும் அதற்கான காரணமும் முதல் முறையாக கமலை கவனிக்க வைத்தது.

குடும்பநல உளவியல் துறையில் பணிசெய்த தோழி ஒருவர் கமல் கதையை அறிந்து மருத்துவரிடம் அழைத்து செல்ல அறிவுரை சொன்னார். கமலின் சம்மதத்துடன் ஒரு மனநல மருத்துவரை அணுகி பரிசோதனையில் கமலுக்கு Schizophrenia என்னும் மனவியாதி இருப்பதாக அறிந்ததும் உடைந்து போனேன். இதற்குள் கமல் வந்து சேர்ந்து சுமார் மூன்று மாதங்கள் கடந்திருந்தன. இதற்குள் கமல் எனக்குள் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தான். என்னிடம் உரிமையாக எதையும் கேட்பதும், கோபம், பாசம் என தொடர்ச்சியில்லாமல் உணர்ச்சிகளை மாறுபடுத்துவது என கமல் தொடர்ந்தான். எப்படியாவது இவனை குணப்படுத்த வேண்டும் என்ற ஆவலில் கமல் தந்த குடும்ப முகவரிக்கு தந்தி கொடுத்து காத்திருந்தேன், தகவல் இல்லை. அனுப்பிய அவசர பதிவு தபால் திரும்ப வந்தது. அவரது மருத்துவத்திற்கான ஆயத்தங்களை செய்ய துவங்கிய போது கமல் கோபம் அதிகமாகிக்கொண்டே போனது. மருத்துவர் குறிப்பிட்ட நாட்களுக்கு மருத்துவமனைக்கு செல்வதே இயலாத விசயமானது. பணி நிமித்தமாக சில நாட்களுக்கு சென்னைக்கு பயணமானேன். கமல் அங்கிருந்து வெளியேறி விடுவதாக என்னிடம் தெரிவித்த போது நான் வரும் வரை காத்திருக்குமாறு கேட்டுக்கொண்டென்.

சென்னையிலிருந்து திரும்பி வந்த போது கமலிடமிருந்து நன்றி கடிதம் மட்டும் இருந்தது. எங்கோ தொலைதூரமாக கமல் காணாமல் போயிருந்தான். மனது கனமாக தான் இருந்தது. சரியாக ஒரு வருடம் கழித்து கமல் திடீரென என்னை பார்க்க மட்டுமே வந்து சில மணித்துளிகளில் திரும்பினான். கமல் எதிர்காலம் மீது நம்பிக்கையை தந்த ஆச்சரியமான நிகழ்வு இது. சில மாதங்களில் திருச்சியிலிருந்து நெல்லைக்கு இடம் மாறியிருந்தேன். திருச்சியி இருந்த எனது பொருட்களை எடுத்து அறையை ஒப்படைப்பதற்காக சரியாக ஒரு வருடம் கழித்து மீண்டும் திரும்பியிருந்தேன். நேர்த்தியாக, மிடுக்குடன் உடையணிந்து கழுத்தில் டை, பிரெஞ்ச் தாடியுடன் ஒரு இளைஞன் வந்து பேசவும். 'கமல்?' என்றேன். ஆம்! ஹைதராபாத் அருகே ஒரு பள்ளியில் ஆங்கிலம் பயிற்றுவிக்கும் பணியில் இருப்பதாகவும், என்னை காண்பதற்காக வந்ததாகவும் சொன்னான். என்னை காண்பதற்காக மட்டுமே தேடி வந்த கமலின் அன்பு என் மனதை தொட்டது. ஒரு நாள் மட்டும் என்னோடு தங்கியிருந்து விடைபெற்றான் கமல். கமலுடன் எனக்கு அது கடைசி சந்திப்பு. சில மாதங்களுக்கு பின்னர் நான் பணி நிமித்தமாக ஹாங்காங்-கிற்கு இடம் பெயர வேண்டிய நிலை வந்தது.

கமலுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன் அடுத்த சந்திப்பிற்காக...

(அடுத்த பதிவில்...)

===========

நண்பர் ஒருவருக்கான குறிப்பு:

நண்பர் ஒருவர் அவரது rediffmailக்கு மின்னஞ்சல் அனுப்ப எழுதியிருந்தார். Rediffmail ஒழுங்காக செயல்படவில்லை, அதனால் அனுப்பிய மடல் வந்து சேரவில்லை என நினைக்கிறேன். முடிந்தால் gmail கொடுங்கள் மடல் அனுப்ப வசதியாக இருக்கும்.

திரு

3 பின்னூட்டங்கள்:

தென்றல் said...

மனதை தொட்டது, திரு!

சிவபாலன் said...

திரு,

மிக அழகாக தொகுத்துள்ளீர்கள்.

நல்ல பதிவு

பத்மா அர்விந்த் said...

நன்றி திரு. மேலும் எழுதுங்கள். படிக்க ஆவலாக இருக்கிறேன்.

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com