Saturday, February 25, 2006

விஜயகாந்த்: இந்த நட்சத்திரம் மின்னுமா? விழுமா?

நடிகர்கள் அரசியலுக்கு வருவதும் அவர்களை பதவியிலமர்த்தி அழகு பார்ப்பதும் தமிழகத்திற்கு புதிதல்ல. எம்.ஜி.ராமச்சந்திரன் துவங்கி சரத்குமார், எஸ்.எஸ். சந்திரன் என பட்டியல் நீளுகிறது. நிகரில்லாத மக்கள் ஆதரவு தனக்கிருந்தும் சிவாஜி கணேசன் அவர்கள் அரசியலில் வெற்றிபெற முடியவில்லை. இதையெல்லாம் உணர்ந்ததாலோ என்னவோ ரஜினிகாந்த்க்கு அரசியல் என்பது எப்போதுமே தடுமாற்றமான நடனம்.

அரசியலில் தற்போதைய புதுவரவு விஜயகாந்த். "லஞ்சம் இல்லாத நாட்டை உருவாக்கி காட்டுகிறேன். கிராமங்களை நகரங்களாக மாற்றுவோம், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிக்கப்படும். ரேஷன் பொருட்கள் அனைத்தும் வீடு வந்து சேரும்". என பட்டி தொட்டியெல்லாம் கீறிய கிராமபோன் போல முழங்குகிறார்.

தனது கல்யாணமண்டபம் இடிபட போகிறதை உணர்ந்ததும் தன் சொத்தை காப்பாற்ற புறப்பட்ட விஜயகாந்தா லஞ்சத்தை ஒழிக்கப்போகிற மகான்? கல்யாண மண்டபம், கல்லூரி ஆகியவற்றிற்கு அனுமதி பெற எவ்வளவு பேருக்கு லஞ்சம் கொடுத்தார் என்பது தனக்கு தெரியும் என முழங்கினார். அப்படியானால் முறைகேடாக சொத்தை சேர்த்துவிட்டு இப்படி முழங்கலாமா? அவர் தலைவராக இருக்கிற நடிகர் சங்கம் முதலில் நாட்டு மக்கள் பணத்தை அரசிடம் சுரண்டுவதை நிறுத்தட்டும். தனது சங்க உறுப்பினர்களாக இருக்கிற அனைவரையும் முறையாக வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வைக்கட்டும். இது தமிழக மக்களுக்கு அவர் செய்யவேண்டிய முதல் கடமை.

நகரங்களில் எல்லாம் இப்போது பாலாறு, தேனாறா ஓடுதா? சுத்தம் சுகாதாரமற்று, பாதுகாப்பற்று, சமூக உறவற்ற நகரங்களாக உருவாக்க அவர் வாக்குறுதி அளிப்பதே மிக ஆபத்தான அரசியல், சமூக, பொருளாதார பார்வை.

ரேசன் பொருட்கள் வீட்டில் கிடைக்காததா இப்போதைய பிரச்சனை? அப்படியானால் எப்போதும் போல ரேசன் அரிசி வாங்கி சாப்பிடும் அளவில் தான் தமிழக மக்கள் வாழ்க்கை தரம் இருக்குமா? இவரது ஆட்சி மட்டும் என்ன புதிய மாற்றத்தை கொண்டுவரும்? எல்லாம் பழைய கதை தானே! ஏழைகள் மீது புதிதாக தனக்கு பிறந்த அக்கறையுடன் கிழம்பியுள்ளார் விஜயகாந்த். கடந்த 5 வருடத்தில் 2 லட்சத்திற்கும் மேல் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் முறைகேடான பணி நீக்கம் செய்யப்பட்டபோது என்ன செய்தார் இவர்? ஏழை விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலைக்கு தள்ளப்பட்டபோதும், பசிக்கொடுமையால் எலி, நண்டு, நத்தை சாப்பிட வேண்டிய நிலைக்கு ஆழானபோதும் விஜயகாந்த் எங்கே? இந்த நிலமைக்கு ஆளாக்கிய பொருளாதார திட்டங்களை பற்றி இதுவரை வாய் திறக்காத விஜயகாந்த் எழைகளுக்கு திரையில் வில்லனாக வந்தால் என்ன கதாநாயகனாக வந்தால் என்ன?
கொள்கை பற்றி கேட்ட அவரது கட்சித்தொண்டர் மேல் சீறி விழுகிறார். வாக்கு கேட்கும் முன்னர் கொள்கை, திட்டங்கள் அனைத்தையும் தெரிவிப்பது தான் நியாயம். அவரது கொள்கைகள் முன் கூட்டியே தெரியக்கூடாத திரை மறைவு இரகசியங்களா? இல்லை, எல்லா கட்சி போல கொள்கை இல்லாத கட்சியா? தனக்கு வேண்டிய மட்டும் பொருள் சேர்த்துவிட்டு சொத்தைக் காப்பாற்ற அரசியல், பூசணிக்காய் என புறப்படுவது நடிகர்களுக்கு புது சுகமாக இருக்கலாம். அதனால் தமிழக மக்களுக்கு எந்த பலனும் இல்லை.

அரசியல் மேடைகளில் அவர் பேசும் வீரவசனங்கள் திரைப்படத்தில் வருகிற லியாகத் அலிகான் வசனம் போல இருக்கிறது. ஆனால் அவை வாழ்க்கைக்கு உதவாத பசப்பு வார்தைகள். நிஜத்தில் இவர் ஒன்றும் தமிழக மக்களின் வாழ்வை முன்னேறப்போகிற கேப்டனல்ல, மீண்டும் ஒரு அரசியல் நட்சத்திரம். இந்த நட்சத்திரம் மின்னுமா? இல்லை விழுமா? காலம் பதில் சொல்லும். விஜயகாந்த் கனவு காண்பது போல ஓட்டு என்பது 2 மணி நேர திரைப்படம் பார்க்க அனுமதி சீட்டு போன்றதல்ல. மக்களின் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார வாழ்வை உயர்வடைய திட்டங்கள் செயல்படுத்த அனுமதி.

நினைவுகளுடன்,

திரு

5 பின்னூட்டங்கள்:

Muthu said...

திரு,
நல்ல கட்டுரை. விஜய்காந்த் எப்படி ஆவர் தேர்தல் முடிந்தபின் என்று பார்க்கலாம். இதுபற்றி நான் சில மாதங்களுக்கு முன்னால் எழுதிய கட்டுரை இங்கே

thiru said...

//ji said...
கடந்த 5 வருடத்தில் 2 லட்சத்திற்கும் மேல் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் முறைகேடான பணி நீக்கம் செய்யப்பட்டபோது......

இதில் என்ன முறைகேடு நடந்தது....//

ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கையானது நமது நாட்டின் தொழிலாளர் சட்டங்களுக்கு மட்டுமல்ல சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (International Labour Organisation) International Labour Convention க்கும் எதிரானது. தொழிற்சங்கமமைத்து ஒன்று சேர்ந்து கோரிக்கைகளுக்காக போராடலாம் என்பது சர்வதேச உரிமை. ஜெயலலிதா இதற்கு எதிராக டெஸ்மா சட்டமியற்றி நீதியையும், உரிமையையும் அதிகாரம் என்ற காலில் போட்டு மிதித்தார். அதனால் தான் தேர்தல் பயம் வந்ததும் டெஸ்மா சட்டம் திரும்ப பெற்றார் ஜெயலலிதா. இன்னும் உங்களுக்கு இதிலுள்ள முறைகேடு விளங்கவில்லையா நண்பரே?

ஒருவரை பணிநீக்கம் செய்ய விதிமுறைகள் உண்டு. அவற்றில் பணிநீக்கம் செய்யும் முன்னர் விளக்கம் கேட்டலும் அதற்கான பதில் பெற கால அவகாசம் அடங்கும். அதன் பின்னரும் திருப்தியளிக்காத பட்சத்தில் தான் முறைப்படி பணிநீக்கம் செய்யமுடியும். தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக பணிநீக்கம் செய்யமுடியாது (ஜெயலலிதாவின் மோசடி டெஸ்மா சட்டத்தை குறிப்பிடவில்லை). அதுவும் 2 லட்சம் பேரையும் எந்த வித விளக்கமும் கேட்காமல் பணிநீக்கம் செய்தது ஜெயலலிதா அரசு. பெரும்பான்மையினருக்கு அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருந்த நீண்டபட்டியல் தான் பணிநீக்கத்தை தெரிவித்தது. இது எந்த விதிமுறைப்படி நடந்தது? ஜெயலலிதாவின் அதிகார துஸ்பிரயோகங்களில் இது ஒன்று! இதை மறுக்கவோ மறைக்கவோ ஜெயலலிதாவால் கூட முடியவில்லை.

thiru said...

நன்றி நண்பர்கள் முத்து மற்றும் ஜி அவர்களுக்கு

thiru said...

//selvan said... Jaya already warned not to continue strike. You already know the working way of Govt.employee. ...........//

நண்பரே! யார் எச்சரித்தார்கள் என்பதல்ல இங்கு முக்கியம். உரிமைகளை எச்சரித்து காலில் போட்டு மிதிக்க யாருக்கும் அதிகாரமில்லை என்பது கவனத்தில் கொள்ள வேண்டியது.

"Right to organise and collective bargaining" என்பது ஒரு சர்வதேச உரிமை. இது தொழிற்சங்க நடவடிக்கை சார்ந்த உரிமை. இந்த உரிமைப்படி தொழிற்சங்கம் அமைத்து கோரிக்கைகளுக்காக போராடலாம். போராட்ட வடிவங்களுள் ஒன்று வேலைநிறுத்தம். இது தொழிலாளர்களுக்கே உரிய போராட்ட வழிமுறை. இந்த உரிமையில் அரசு பணியாளர், தனியார் பணியாளர் என்ற வாதத்திற்கே இடமில்லை. தமிழகத்தில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் முறையாக தங்களது கோரிக்கைகளுக்காக போராட்டம் அறிவித்து அரசுக்கும் தெரிவித்தார்கள். அரசுக்கு பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பையும் வழங்கினார்கள். ஆனால் நமது முதலமைச்சர் ஜெயலலிதா பேசி தீர்க்காமல் வீண்பிடிவாத்துடன் இருந்த உரிமையையும் பிடுங்கினார். அதன் விளைவு இழந்த உரிமைகளுக்காக தான் போராட்டம் நடந்தது. உடனடியாக மிரட்டியது அரசு. மீறிய அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் சுமார் 2 லட்சம் பேரை எந்த வித விளக்கமும் கேட்காமல் ஒரு உத்தரவில் பணிநீக்கம் செய்தது ஜெயலலிதா அரசு. சுருங்கச்சொன்னால் ஒரு கையெழுத்தில் 2 லட்சம் குடும்பங்களை தெருவுக்கு கொண்டுவந்தது.

பணிநீக்கம் செய்ய (ஒழுங்கு நடவடிக்கை எடுக்க) எந்த வழிமுறையை அரசு பின்பற்றியது? சுவரில் பட்டியல் ஒட்டி இன்று முதல் நீங்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்படுகிறீர்கள் என்பது எந்த சட்டத்தின் வழி நடந்தது? அது ஜெயலலிதா கொண்டுவந்த மோசடி சட்டமான டெஸ்மா. அந்த சட்டத்தை செல்லுபடியாகாது என உச்சநீதிமன்றம் பின்னர் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இதன் பொருள் நமது நாட்டின் தொழிலாளர் நடைமுறை சட்டங்களுக்கு டெஸ்மா முரணானது அல்லது எதிரானது தானே? இந்த டெஸ்மா சட்டத்தைத் தான் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை குறி வைத்து அனைத்து எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றியது ஜெயலலிதா அரசு.

ஒருவரை பணிநீக்கம் செய்ய முதலில் 14 நாட்கள் கால அவகாசம் கொடுத்து விளக்கம் சொல்ல வாய்ப்பு கொடுக்க வேண்டும். அதுவும் ஒவ்வொரு ஊழியரிடமும் தனித்தனியாக தான் விளக்கம் கேட்கப்படவேண்டும். அந்த விளக்கம் சரியில்லாவிட்டால், மீண்டும் கால அவகாசம் கொடுத்து அதற்கு பின்னர் அந்த நிறுவனத்தின் விதிகளின் படி அந்த ஊழியரை பணிநீக்கம் செய்யலாம். அதுவும் அறிவிப்பு பலகை வழியல்ல, முறைப்படி. இத்தனை பாதுகாப்புகளும் எதற்காக என்றால், தொழிலாளர்களின் பணி பாதுகாப்பிற்காக. இது அரசு மற்றும் தனியார் துறைகளுக்கும் பொருந்தும். இந்த பாதுகாப்பு மட்டும் இல்லாவிட்டால் நாளை வேலையிருக்குமா இல்லையா என்பதை நீங்களும், நானும் அறிவிப்பு பலகையில் பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும். யார் வேண்டுமானாலும் விருப்பம் போல் வேலையை விட்டு எந்த உத்தரவாதமும் இல்லாமல் நீக்கலாம் என்ற நிலை ஆகிவிடும்.

விளக்கம் எதுவும் கேட்காமல் தான்தோன்றித்தனமாக அதிகார வரம்பு மீறல்கள் செய்தது முதல்வராக இருந்தால் என்ன, பிரதமராக இருந்தால் என்ன. ஜெயலலிதா என்ற தனிநபரை விட மக்களின் உரிமை மரியாதைக்குரியது, அதை மதித்து நடக்கவேண்டிய கடமை முதல்வருக்கு உண்டு. மொத்தத்தில் உலகவங்கி கொடுக்கிற கட்டளைகளுக்கு அடிபணியும் மடிப்பிள்ளையாக முதல்வர் ஜெயலலிதா மாறியதன் விளைவு தான் இத்தனை நாடகங்களும்.

மற்றபடி நிதிப்பற்றாகுறை என்பதெல்லாம் சுத்த நாடகம், ஏமாற்று. அப்படியே ஒரு விவாதத்திற்காக நிதிப்பற்றாக்குறை என்றால் கூட, அந்த காலகட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஊதியம் அதிகரிக்கப்பட்டது. ஆடம்பரமாக அரசு விழாக்கள் நடத்தப்பட்டன. சென்னையிலிருந்து செங்கல்பட்டுக்கு கூட ஹெலிகாப்டரில் பறந்தார் ஜெயலலிதா. அப்படியானால் எதற்காக ஜெயலலிதா இந்த முறைகேடான கடும் நடவடிக்கை எடுத்தார்? அது தான் அவரது அதிகார துஸ்பிரயோகம், ஈகோ.

மற்றபடி அரசு ஊழியர்கள் வேலை செய்கிறார்களா? இல்லையா? அதற்கு என்ன காரணம் என்பது விவாதிக்கவேண்டியது வேறு இடத்தில்.

Ram said...

Sad that ur view is biased. :-(
We all know that both ADMK and DMK are equally GOOD. I BELEIVE Vijaykanth will not be that much GOOD as ADMK AND DMK, given a chance.oru palamozhi undu...

"paththukku (10) aaru(6) paluthillai". You and me are very much aware of the fact that politics is about compromise. Thats the reason Periyar didnt get into Politics, knowing that he may have to compromise his thoughts at one stage.So 100% nallavarkal iyalaatha kaariyam..yellam therincha neengal yen ipdi oru biased katturai? i am the surprised.

:) Let us hope the good from him.why not? 6 out of 10 is a pass mark and good mark when compared to JJ and MK.

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com