Friday, August 31, 2012

கூடங்குளம்: சந்தைப் பொருளாதாரக் காலத்தின் நீதிமன்ற அணுகுமுறை

கூடங்குளம் அணு உலைக்கு மாசுகட்டுப்பாடு வாரியத்தின் முந்தைய அனுமதியில் 45°C வெப்பம் கழிவுநீர் கடலில் கலக்க அனுமதித்திருந்தது. அதனை 36°C ஆக மாற்ற நீதிமன்றமே ஆலோசனை வழங்கியிருக்கிறது. மாசுகட்டுப்பாடு வாரியம் உத்தரவை மாற்ற ஒப்புக்கொண்டிருக்கிறது. அதனடிப்படையில் அந்த வழக்கு ரத்துச் செய்யப்பட்டிருக்கிறது.

மக்களின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரச்சனைகளும் நிறைந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் நீதிமன்

றத்தின் போக்கு விசித்திரமாக இருக்கிறது. எந்த ஆய்வின் அடிப்படையில் முன்னர் 45°C வெப்பநீர் கழிவை கடலில் கலக்க மாசுகட்டுப்பாடு வாரியம் அனுமதித்தது? வாரியத்தின் அனுமதிக்கு அரசின் அழுத்தங்கள் இருந்தனவா ஆகிய கோணங்கள் கணக்கிலெடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

கார்ப்பரேட்களும், அரசும் சம்பந்தப்படுகிற பிரச்சனைகளில் நிலம், கனிம மற்றும் இதர வளங்கள், வாழ்வாதாரங்களைக் காப்பாற்ற மக்கள் ஒரு தரப்பாக எதிர்ந்து நின்று போராடுகிற (நர்மதை ஆற்றின் குறுக்கே அணைகளைக் கட்ட பழங்குடி மக்களின் இருப்பிடம், வாழ்வாதாரம் அழித்த பிரச்சனை முதல் கூடங்குளம் வரை) பல வழக்குகளில் சந்தைப் பொருளாதாரக் காலத்தின் நீதிமன்ற அணுகுமுறை கவலை தருவதாக இருக்கிறது.

Thursday, August 30, 2012

அகதிகள் முகாம் போராட்டம்: : செந்தூரனுக்கு வேண்டுகோள்!

உண்ணாநிலை ஒரு போராட்ட தந்திரமென்று நம்ப வைக்கப்பட்டிருக்கிறோம். அத்தகைய நம்பிக்கை மக்களின் ஆழ்மனங்களில் பதிந்திருப்பதை அரசதிகாரம் விரும்புகிறது. காந்தியின் உண்ணாநிலை ஒரு அறப்போர் என்று "மகாத்மா" புகழ்தலுக்காக சொல்லப்படுவது இருக்கட்டும். ஆனால் காந்தியின் உண்ணாநிலை அன்றைய காலனியாதிக்க அதிகாரத்திடம் எடுபடவில்லை. அம்பேத்காரையும், காங்கிரசையும் மிரட்ட ஒரு தந்திரமாக மட்டும காந்திக்கு உண்ணாநிலை பயன்பட்டது. காந்தியை கேள்விக்கு அப்பாற்பட்ட வழிபாட்டு நாயகனாக மாற்றியிருக்கிற இந்தியாவும், மாநில அரசுகளும் உண்ணாநிலையை மக்களின் எதிர்ப்பு குரலாக பார்க்கவில்லை. உண்ணாநிலை கோரிக்கைகளுக்காக உடனடி நடவடிக்கை எடுக்கிற நிலையும் இல்லை. அரசு எந்திரத்திற்கும், அதிகார வர்க்கத்திற்கும் உண்ணாநிலை மீது எந்த நம்பிக்கையும் இல்லை என்பதை சுட்டிக்காட்டுகிறது.

ஆனால் மக்களுக்கான உரிமைகளுக்காக போராடுகிறவர்கள் தொடர்ந்து
உண்ணாநிலையை யுக்தியாக பல போராட்டங்களில் பயன்படுத்தியே வருகிறார்கள். அரசு எந்திரத்திற்கு எந்த நெருக்கடியும் இல்லாமல் தன்னையே வருத்தி சாகக்கொடுக்கிற எந்த முயற்சியையும் போராட்ட வடிவமாக தொடர்வது பயனற்றது. இந்தியாவிடம் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாமல் உயிரை காலத்திற்கு தின்னக்கொடுத்த திலீபனின் எந்த கோரிக்கையையும் காந்தீயம் "பேசுகிற" இந்தியாவும், அதன் அதிகார வர்க்கமும் ஏற்கவில்லை. முத்துகுமார் முதல் செங்கொடி வரையில் பலரும் தீயில் தனது உயிரை வேக வைத்து கோரிக்கைகளை அரசு அதிகாரத்திற்கு வைத்த போதும் அரசு அதன் போக்கிலேயே போகிறது.  

உண்ணாநிலை இருப்பவர்களது கோரிக்கைகளை முறையாக, சரியான நேரத்தில் அரசு கேட்டு, நடவடிக்கை எடுத்திருக்கிறதா என்றால் இல்லை. திரட்சி பெற்று வலுவான மக்கள் போராட்டங்களாக மாறுவதற்கான சாத்தியம் அல்லது அரசியல் காரணங்கள் இல்லாத போது உண்ணாநிலையை ஒரு சம்பிரதாய சடங்காக மட்டுமே அரசு எந்திரம் பதிவு செய்து "அவசர ஊர்தியுடன்" காவலர்கள் சூழ காத்திருக்கிறது. உண்ணாநிலை போராட்டங்களை எவ்வகையிலும் கண்டுகொள்ளாத அரச அதிகாரங்களை கொண்ட நாடு இந்தியா என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

உடலை வருத்தி உண்ணாவிரதமிருப்பதையும், உயிர்துறத்தலையும் போராட்ட வடிவமாக நம்புவதிலிருந்து தமிழ் சமூகம் மாற வேண்டும். செந்தூரனின் கோரிக்கைகள் மிக மிக நியாயமானவை. ஆனால் அவற்றை கேட்கும் நிலையில் அரசு அதிகாரம் இருந்திருந்தால் எப்போதோ கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டிருக்கும்.

இந்நிலையில், செந்தூரனும், அகதிகள் முகாம்கள் குறித்த கோரிக்கைகளுக்காக போராடுபவர்களும் போராட்ட வடிவத்தை மாற்றுவதே சிறந்தது. செந்தூரனின் உயிர் காப்பாற்றப்பட வேண்டும்!

Saturday, August 18, 2012

ஜெயமோகனின் காந்தி பக்தியும், அவதூறும்!

"காந்தி: புறவயநோக்கில்" என்னும் கட்'டுரையில் ஜெயமோகன்,

காந்தியைக் கிட்டத்தட்ட ஒரு மதநிறுவனர் இடத்துக்குக் கொண்டு சென்று உட்காரச்செய்துவிட்டது இந்தியமனம். அவரை வழிபடுதெய்வமாக்கி வாழ்க்கையில் இருந்து விலக்கிவைத்துவிட்டது. ’அவர் மகான்’ என்ற ஒரே வரி வழியாகக் காந்தியைக் கடந்து செல்லப் பழகிவிட்டோம்.
 என்கிறார்.

ஆனால் ஜெயமோகனும் காந்தியைக் கடவுளாக, விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட அவதாரமாக மிகநுட்பமாக புனைந்து வருகிறார்.
இதே கட்டுரையில்,
அவர் இந்தியதேசிய அடையாளமாக முன்வைக்கப்படுவதனாலேயே இந்திய மைய அரசின் மீதான எதிர்ப்புகள் அனைத்துக்கும் அவர் இலக்காகிறார். அவர் விழுமியங்களின் அடையாளமாக ஆவதனாலேயே அவர் மீறுவதும் மறுப்பதும் கலகம் எனப்படுகிறது. இன்றும் இந்த தேசத்தை ஒரு ஜனநாயக அமைப்பாக நிலைநிறுத்தும் சக்தி அவர் என்பதனால் எல்லா தேசவிரோதக் கூட்டத்துக்கும் அவர் எதிரியாகிறார். அவர் மீதான அவதூறுக்காகக் கோடானுகோடி பணம் அள்ளி இறைக்கப்படுகிறது.
என்கிறார் ஜெயமோகன்.

இந்திய மைய அரசுகளின் மீதான எதிர்ப்புகளை காந்தி மீது தொடுப்பதில்லை. பல்வேறு பிரச்சனைகளில் காந்தியின் அணுமுறையைகள், நிலைபாடுகள் காரணமாகவே விமர்சிக்கப்படுகிறார். சாதி குறித்த காந்தியின் நிலைபாடு, அதையொட்டி அம்பேத்காரை மிரட்ட ஏர்வாடா சிறையில் உண்ணாவிரதமிருந்தது, வைக்கம் வீதி நுழைவுப் போராட்டத்தில் காந்தியின் அணுகுமுறை.... இப்படி பல நிகழ்வுகளை காந்தி குறித்த விமர்சனமாக சொல்ல முடியும். ஆனால் இத்தகைய விமர்சனங்களை வசைகளும், அவதூறுகளும் நிறைந்த மாயக்கம்பளத்தால் மறைத்துவிடுகிறார் ஜெயமோகன்.

அம்பேத்காரையும், பெரியாரையும், நேதாஜியையும், பகத்சிங்கையும் அவர்களது போராட்ட வரலாற்றையும் கணக்கிலெடுக்காமல் காந்தியைச் சுற்றி விமர்சனமற்று எழுப்புகிற எந்த பிம்பமும் அவதாரமாக்குகிற புனைவு முயற்சியே. ஜெயமோகன் செய்துவருவதும் இந்துத்துவத்திற்கு ஆதரவான அத்தகைய ஒரு புனைவு முயற்சி. 1990க்கு பிந்தைய பகுதி வரையில் இந்துத்துவம் காந்தியையும், அம்பேத்காரையும் எதிர்த்தது, மறைத்தது, மறுத்தது. 1990களின் இறுதியில் ஒடுக்கப்படுகிற மக்களை இந்துத்துவக் கருத்தியலில் இழுப்பதற்கான நுண்ணரசியல் யுக்தியாக இறுதியில் அம்பேத்காரையும், காந்தியையும் பயன்படுத்தி வருகிறார்கள். அதே நோக்கத்திற்காக இன்று இந்துத்துவ “பிரச்சாரக்களில்” சிலர் அம்பேத்கரை வசதியாக பெயர்த்தெடுத்து மேற்கோள் காட்டவும், தனக்கு பிடித்தவராக முன்னிறுத்தவும் செய்யத்துவங்கியுள்ளனர். ஜெயமோகனின் கட்டுரைகளில் இந்துத்துவத்திற்கு ஆதரவான நுட்பமான போக்குகள்

ஜெயமோகன் கட்டுரையில் //அவர் மீதான அவதூறுக்காகக் கோடானுகோடி பணம் அள்ளி இறைக்கப்படுகிறது.// என்கிறார். நானறிந்த வரையில் அயல்நாடுகளில் காந்தியை சர்வரோக நிவாரணியாக முன்னிறுத்துவதையும், நூலகங்களில் இந்தியா சம்பந்தப்பட்ட பகுதியில் காந்தியின் வாழ்க்கை நூல்களும் நிரம்பியிருக்கிறது. காந்தி குறித்த உரையாடல்கள் நடைபெறுகின்றன. காந்தியை நேசிப்பவர்களாகவே இருக்கிறார்கள்.

//அவதூறுக்காகக் கோடானுகோடி பணம் அள்ளி இறைக்கப்படுகிறது.// என்று எந்த ஆதாரமுமில்லாமல் அவதூறை கிளப்புகிறார் ஜெயமோகன். ஜெயமோகனின் இத்தகைய அவதூறுகளும், இந்துத்துவ பிரச்சாரமும் ஒரே புள்ளியில் சந்திக்கின்றன. போகிற போக்கில் "அயல்நாட்டு சதி" என்பது இந்துத்துவ பிரச்சார தந்திரம். இந்த தந்திரம் மக்களுக்கு அச்சத்தை ஊட்டவும், மற்ற நாடுகளின் மக்கள் குறித்த வெறுப்பை விதைக்கவும், தாங்கள் தாக்குதலுக்குளாவது போன்ற பிரமையில் இருக்கவும் பயன்படுகிற மோசமான வலதுசாரி அரசியல் ஆயுதம். பல கட்டுரைகளிலும் இந்துத்துவ அரசியல் பிரச்சாரத்திற்கு சார்பாக ஜெயமோகன் இந்த அவதூறு பிரச்சார ஆயுதத்தை நுட்பமாக இலக்கியம் என்ற பெயரில் பயன்படுத்துகிறார்.

இந்துத்துவ கனவின் எதிரியாக காந்தி இந்துத்துவக் கூட்டத்தால் கொல்லப்பட்ட 60 ஆண்டுகளுக்கு பிறகு அதே இந்துதுவக் கனவிற்கு காந்தி இன்று கதாநாயகனாக்கப்படுகிறார். இந்துத்துவத்தின் எதிரியாக அடையாளப்படுத்தப்பட்டு கொலைசெய்யப்படுவதும், மரணத்தின் நீண்ட காலத்திற்கு பிறகு கதாயாகனாக பலியாக்கப்படுவதும் காந்தியின் ஆளுமைக்குள் இருக்கிற இருவேறு கூறுகளின் மிகப்பெரிய முரண்.
//இன்றும் இந்த தேசத்தை ஒரு ஜனநாயக அமைப்பாக நிலைநிறுத்தும் சக்தி அவர் என்பதனால் எல்லா தேசவிரோதக் கூட்டத்துக்கும் அவர் எதிரியாகிறார்.// என்று காந்தியை விமர்சிப்பவர்களை "தேசவிரோத கூட்டமாக" சித்தரிக்கிறார் ஜெயமோகன். இந்த நிலப்பரப்பையும், இதில் வாழுகிற பல்வேறு தேசிய இன மக்கள் சமூகங்களையும், அவர்களது மொழி, பண்பாடு, கலாச்சாரம், அரசியல் உரிமைகளையும் ஆதரிக்கவும், பேணவும், வளர்க்கவும், பாதுகாக்கவும் துடிப்போடும், உண்மையான உள சுத்தியோடும் எந்த எதிர்பார்ப்புகளுமில்லாமல் அன்றாடம் உழைக்கிற, போராடுகிற பலர் காந்தியின் மீதான விமர்சனங்களை நேர்மையுடன் வைக்கிறார்கள். அத்தகைய விமர்சனங்களை வசைகளாலும், அவதூறுகளாலும் கடந்துவிட முடியாது. காந்தி பக்தியை பரப்புவது ஒருபுறமும் மக்களையும், நாட்டையும் அச்சுறுத்துகிற பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களின் கொள்ளைகளை, அரசியல், பொருளாதார பிரச்சனைகளை, இனப்படுகொலைகளை மொழியின் கோர்வைக்குள் மறைப்பது மறுபுறம். இதைத் தான் ஜெயமோகன் செய்துவருகிறார்.

/இன்றும் இந்த தேசத்தை ஒரு ஜனநாயக அமைப்பாக நிலைநிறுத்தும் சக்தி அவர்// என்கிறார் ஜெயமோகன். இந்தியா உண்மையிலேயே ஒரு சனநாயக அமைப்பாக செயல்படுகிறதா? காந்தி என்கிற பிம்பத்தை முன்னிறுத்துவதால் மக்களுக்கான சனநாயகத்தை உருவாக்க முடியுமா?

Sunday, August 12, 2012

டெசோ நாடகமும், வேதனைச் சுழலுக்குள் தமிழ் மக்களும்.

காலையில் டெசோ மாநாடு துவக்க உரையில் திரு.மு.கருணாநிதி ஆற்றிய உரையின் அடிப்படையில் சில குறிப்புகளை எழுதவேண்டிய அவசியம் வருகிறது.


படத்தில்: 2009 வன்னி இனப்படுகொலையின் போது தமிழ் மக்களின் இடப்பெயர்வு.
பல மாதங்களாக "டெசோ வருகிறது, தலைவர் அழைக்கிறார்" போன்ற விளம்பரங்களால் திமுகவின் மாநாடு அழைப்புகள் நிறைத்திருந்தது. வழக்கமாக நடத்தப்படுகிற கட்சி மாநாடுகளிலிருந்து இம்மாநாடு சற்று வேறுபட்டிருக்கிறது. அதன் பேசுபொருள் ஈழத்தமிழர்களைச் சுற்றிய திமுக அரசியல். இம்முறை சிறப்பு அழைப்பாளர்களாக அயல்நாட்டு முகங்கள், மேடையில் உணர்ச்சி கொப்பளிக்கும் பாடல்கள், கலைஞர் தொலைக்காட்சியின் சிறப்பு நேரடி ஒளிபரப்பு, சிறப்பு விளம்பரப் படத்தொகுப்பு. அனைத்தும் கருணாநிதியின் புகழ்பாடும் படியாக மிக இலாவகமாகப் பின்னப்பட்டிருக்கிறது. 2009ல் மாமன்னர் திரு.மு.கருணாநிதி ஆட்சியில் இருந்த போது இந்த மாநாட்டிற்குக் காட்டுகிற முயற்சியில் பாதியை தமிழக மக்களைத் திரட்ட காட்டியிருந்தால் இன்றைய நிலைமை ஏற்பட்டிருக்குமா? குறைந்தபட்சம் முத்துக்குமாரின் தன்னெழுச்சியான போராட்டத்திற்குப் பிறகு உறக்கத்திலிருந்து விழித்த தமிழர்களுக்குச் செய்திகளும், காட்சிகளும் சேராமல் தடுத்த படுபாதகச் செயலை செய்யாமலே தடுத்திருக்கலாமே! முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை உக்கிரமாக நடந்த இரத்தம் காய்வதற்குள் "செம்மொழி மாநாடு" என்ற பெயரில் மாமன்னர் குடும்பம் சகிதம் அரசு பணத்தில் பாராட்டு மழையில் நனைந்தார். "செம்மொழி மாநாடு" நடத்தவில்லையென்று "தமிழ்த்தாய்" சாகத் தவம் கிடந்தாரா? செம்மொழி மாநாட்டிற்குப் பதிலாக "ஈழம் இனப்படுகொலை எதிர்ப்பு மாநாடு" நடத்தியிருக்கலாமில்லையா? அழுவதற்கும், குமுறுவதற்கும், உலக அமைப்புகளுக்கு ஒற்றைக்குரலில் கோரிக்கை எழுப்பவும் வாய்ப்பு கிடைத்திருக்குமே. அன்றைக்கு ஆட்சி அதிகாரம் கையிலிருந்த போது "ஈழம்" என்ற சொல்லை விடுதலைச் சிறுத்தைகளின் விளம்பரத்தட்டிகளில் அகற்றி, தட்டிகளைக் கிழித்தது திமுக அரசின் காவல்த்துறை. இன்றைக்கு மேடையில் திமுக கண்ணீர் வடிப்பது எதற்காக? இழந்த சென்னைக் கோட்டை அதிகாரத்திற்காகவா அல்லது இருக்கிற டில்லி அதிகாரத்தைத் தக்க வைக்கவா?

இனப்படுகொலைக்கும், அரசியல் உரிமைகள் மறுப்பிற்கும் உள்ளான மக்களின் நீதிக்கான போராட்டத்தின் நியாயத்தை இடப்பங்கீடு கோரிக்கை அளவிற்கு மாற்றி உப்புசப்பில்லாத தீர்மானங்களை முன்மொழிகிறது டெசோ. படுகொலைக்கும், பல்வேறு வடிவங்களிலான இழப்பிற்கும் உள்ளான ஒரு மக்கள் சமூகத்தைத் தனது அரசியல் சுயநலத்திற்காவும், விளம்பரத்திற்காகவும் பயன்படுத்துகிற கயமைத்தனத்தைத் தொடராமல் இருப்பதே ஈழத்தமிழர்களுக்குக் கருணாநிதியும், திமுகவும் செய்கிற பெரும் உதவியாக இருக்கும்.

இன்றைய நிலையில் உலகமெங்குமிருந்து பங்கேற்பாளர்களை அழைத்து மாநாடுகளைக் கூட்டுவது பணம் இருக்கிற அமைப்புகளுக்கு மிக எளிதாக சாத்தியமாகிற விசயம் தான். இதிலொன்றும் அதிசய சாதனைகளில்லை. இத்தகையக் கார்ப்பரேட் மாநாடுகளின் பேசுபொருள்களும், முன்னிலைப்படுத்தப்படும் நபர்களும், பேசப்படுகிற விசயங்களும், தீர்மானங்களும் தான் அதன் அரசியலை தீர்மானிக்கின்றன. 
  • ஈழத்தில் இனப்படுகொலை நடைபெற்றது. 1 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் அதில் கொல்லப்பட்டனர். பல ஆயிரம் பேர் அரசியல் கைதிகளாகச் சிறைகளில் நீதி விசாரணை எதுவுமில்லாமல், சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். காணாமல் போகவைத்தலும், ஆட்கடத்தலும், கொலைகளும், மிரட்டல்களும் தமிழ்மக்கள் மீது தொடர்ந்து நடத்தப்படுகிறது. பாதுகாப்பும், நீதியும், நிவாரணமும் இல்லாத சூழலில் இழப்புகளுக்கு உள்ளான தமிழ் மக்களின் புலம்பெயர்வு அதிகமாகி வருறது.
  • ஈழத்தில் தமிழ்மக்களின் நிலங்களும், வளங்களும், கலாச்சாரமும் இலங்கை அரசின் ராணுவத்தின் முற்றுகைக்குள் சிக்கியிருக்கிறது. கலாச்சார அடையாளங்கள் அழிக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
இந்தச் சூழலில், உண்மையிலேயே டெசோவிற்கு ஈழத்தமிழர்கள் மீது அக்கறையிருக்குமானால் குறைந்தபட்சமாகச் சில அடிப்படை தீர்மானங்களையாவது நிறைவேற்றி ஐ.நாவிற்கும், இந்திய அரசிற்கும் அழுத்தம் கொடுக்கிற செயல்களை தொடர்ந்து செய்யும்.
  1.  உடனடியாக ஈழத்தில் தமிழ் மக்களின் பாதுகாப்பையும், உடனடி நிவாரணத்தையும், நிலங்கள், கலாச்சாரம், வாழ்வை, உரிமைகளை உறுதிப்படுத்திப் பாதுகாக்கிற பொறிமுறையை ஐ.நா நேரடி தலையீட்டில் உருவாக்க வேண்டும்.
  2. பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களைக் கண்டறிந்து அவர்களுக்கான நிவாரணங்களையும், நீதியையும் வழங்க வேண்டும். சிறைகளில் வாடுகிற அரசியல் கைதிகள் குறித்த தகவல்களை வெளியிட்டு அவர்களுக்கு முறையான நீதியையும், நிவாரணத்தையும் வழங்கல். காணாமல் போகவைக்கப்பட்ட மக்கள் குறித்த உண்மைநிலையைக் கண்டறிந்து வெளியிடல் இவற்றை ஐ.நா பொறிமுறை மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.
  3. இனப்படுகொலையைச் சர்வதேச அளவில் விசாரித்து உண்மையை வெளிப்படுத்தவும், நீதி வழங்கவும் சிறப்பு நீதிமன்றத்தை உருவாக்க ஐ.நா தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
  4. தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையுண்டு என்பதை அங்கீகரித்து, தமிழர்களுக்கான அரசியல் தீர்வை அவர்களே தீர்மானிக்கிற சூழலை ஐ.நா உருவாக்க வேண்டும்.
இத்தகைய தீர்மானங்களையும், அரசியல் அழுத்தம் உருவாக்குகிற செயல்திட்டங்களையும் கார்ப்பரேட் விளம்பரக் கட்சியிடம் எதிர்பார்க்க முடியாது. மற்றக் காரணங்கள் பல இருப்பினும் புதுடில்லியின் வெளியுறவுத்துறையின் கொள்கையைத் திமுக அச்சுப்பிசகாமல் ஏற்றதன் விளைவாகவுமே இனப்படுகொலையின் உக்கிரம் நிறைவேறியது. வார்த்தைகளில் காட்சிப்படுத்த முடியாத துயரங்களில் வாடுகிற ஈழத்தமிழர்களின் நெஞ்சை மீண்டும் கிழிப்பது போன்றது அரசியல் அழுத்தமற்ற இத்தகைய வெற்று நாடகங்களை நடத்துவது. இந்த நாடகங்கள் குற்ற உணர்வைத் தமிழக மக்களின் மீது மீண்டும், மீண்டும் சுமத்துவதுடன், தமிழ் மக்களை வேதனைச் சுழலுக்குள் தள்ளுகிறது.