Pages

Sunday, May 31, 2009

திரை கடலோடியும் துயரம் தேடு - உயிரோசை விமர்சனம்

அயல்நாடுகளுக்கு வேலைக்காகப் புலம்பெயர்ந்து செல்லும் போக்கு அதிகரித்துவருகிறது. திரவியம்தேடி வளைகுடா நாடுகளுக்கும், தென்கிழக்காசிய அல்லது ஐரோப்பிய நாடுகளுக்கும் செல்லும் இந்தியர்களும், பிற மூன்றாம் உலக நாட்டுத் தொழிலாளர்களும் படும் துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல.

மனிதக் கடத்தலுக்குள்ளாகும் மனிதர்களின் சோகம் நெஞ்சை உலுக்கக்கூடியது. வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்லும் பெண்களின் துயரம் கொடூரமானது. புலம் பெயரும் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டித்தான் நவீன நாகரிகங்கள் செழித்துக் கொண்டிருக்கின்றன. அக்கரைப்பச்சை தேடிச் சென்றோரில் பலர், வாழ்வைத் தொலைத்துவிட்டார்கள்.

புலம்பெயரும்போது பயண ஒழுங்குமுறைகளில் சந்திக்கிற நெருக்கடிகள், குடிபெயர்வு நடைமுறைகளைக் கடந்து செல்ல பயணமுகவர்களின் சேவையைப் பயன்படுத்தும்போது ஆபத்தான மனிதக் கடத்தல் சூழலில் சிக்குவது, ஏமாற்றத்திற்குள்ளாகி ஆவணங்களில்லாமல் சிறைகளில் வாடுவது ஆகிய வேதனை மிக்க பகுதிகளை பலரது அனுபவங்களிலிருந்து விளக்கமாக இந்நூல் அலசுகிறது.

பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஏற்படுத்த அரசுகளும், தொழிற்சங்கங்களும், மனித உரிமை அமைப்புகளும், புலம்பெயரும் தொழிலாளர்களும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய ஆய்வு மற்றும் சில ஆலோசனைகளை இந்நூலில் காணலாம்.

கடந்த பத்தாண்டுகளாக தொழிலாளர் உரிமைகளுக்கான இயக்கப் பணிகளில் ஈடுபட்டுவரும் யோ.திருவள்ளுவர் இந்தக் கொடுமைகளும் துன்பங்களும் உழலும் உலகத்தை அறிமுகப்படுத்துகிறார். பல நாடுகளுக்கு ஆய்வுக்காகச் சென்று வந்த அவர், அந்த அனுபவங்களை நூல்வடிவில் தொகுத்துள்ளார். இந்தப் பிரச்சினைக்கான மூல காரணங்களையும், பிரச்சினையின் பல முகங்களையும் சித்தரிக்கும் திருவள்ளுவர், அதற்கான தீர்வுகளையும் முன்மொழிகிறார்.

உயிரோசை, இதழ்-37. May, 2009

No comments:

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com