ஒரு சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துகிற கருத்தியலை தான் அந்த சமூகத்தின் அரசு, நீதிமன்றம், நிர்வாகம் என அனைத்து அமைப்புகளும் பிரதிபலித்து வருகின்றன. இதற்கு இந்தியா விதிவிலக்கல்ல. ஒரு சமூகப் பிரச்சனையை பற்றிய பாதிக்கப்பட்டவர்களின் (one who is suppressed) பார்வைக்கும் ஆதிக்கம் செலுத்துபவர்களின் (oppressers) பார்வைக்கும் மிகப்பெரிய இடைவெளி உண்டு. ஒடுக்கப்பட்டவர்களது எண்ணம், ஏக்கம், கனவு, எதிர்பார்ப்பு, தேவை முதலியவற்றை ஆதிக்கவாதிகளால் எளிதாக புரிந்துகொள்ள இயலாது. சாதி ஆதிக்கம் போலியான கௌரவத்தையும், அடையாளத்தையும் வழங்கிவிடுவதாலும் அதை சுற்றியே அனைத்து செல்வங்களும், உழைப்பும் சுரண்டப்படுவதாலும் பார்ப்பனீய ஆதிக்கவாதிகள் தனக்கு கீழே ஒடுக்கப்படும் மக்களின் வேதனைகளை எளிதாக புரிந்துகொள்ள இயலாது. அதனால் தான் Youth for Equality என மினுக்கும் பெயரில் வந்தாலும் சாதி அடுக்குகளின் 'உச்சியில்' நின்றபடியே கீழே கிடப்பவனின் நிலையை உணர அவர்களால் முடிவதில்லை. காலங்காலமாக ஏகபோகமாக அனுபவித்து வரும் உயர்கல்வி சுகங்களை பங்கிட்டு கொள்ள மனமில்லாது திறமை, பொருளாதாரம் என நாளுக்கொரு புது கோசங்களை முழங்குகின்றனர். இடப்பங்கீடு கொள்கை நாட்டை சாதிவாரியாக பிளவுபடுத்திவிடும் என புது விளக்கம் வேறு. ஏற்கனவே சாதி ரீதியாக கூறுபட்டு அடிமை சமுதாயம் இருக்கையில், கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கு கல்வி வழங்கும் இடப்பங்கீடு கொள்கையா சாதி பிரிவினையை உருவாக்கப் போகிறது? அல்லது இந்தியாவில் தற்போது சாதிப்பிரிவினையே இல்லையா?
நாடு சுதந்திரமடைந்த பின்னர் நாட்டை கட்டியெழுப்பும் கொள்கைகளும் திட்டங்களும் தீட்டப்பட்ட போது கூட சாதி கட்டமைப்பை தகர்க்கும் விதமான நடவடிக்கைகள் பரந்துபட்ட அளவில் உருவாகவில்லை. அதனால் தான் சுதந்திரமடைந்து 60 ஆண்டுகளுக்கு பின்னரும் சகல அதிகாரங்களையும், சுகங்களையும், உரிமைகளையும், அரசியலையும் தீர்மானிப்பதில் சாதி பெரும்பங்கு வகிக்கிறது. வசிப்பிடங்கள் கூட சாதி அடையாளங்களை வைத்தே இயங்குகின்றன. சிற்றூர்கள், கிராமங்கள், நவீன முதலாளித்துவ உலகின் நகரங்களின் குடியிருப்புகள், அடுக்குமாடிகள் என எல்லா இடங்களிலும் இது தான் நிலை. அங்கங்கே இந்த அடையாளங்கள் அழிக்கப்பட்டாலும் இன்னும் அவை அக்கிரகாரங்கள், சாதி தெருக்கள், வழிபாட்டுத்தலங்கள், சுடுகாடுகள், கல்வி நிலையங்கள் என பல விதமாக தொடரவே செய்கிறது. இன்றும் ஒடுக்கப்பட்ட மக்களில் பெரும்பகுதியினர் சேரிகளிலும், ஒதுக்குப்புறங்களிலுமே வாழ வேண்டிய அமைப்புமுறை இயங்குகிறது. வேலையை பொறுத்தவரை சாக்கடை சுத்தம் செய்து, முடிவெட்டி, துணி துவைத்து களை பிடுங்கி, கல்லுடைத்து, கடையில் எடுபிடிகளாக, கட்டிட வேலையில் இருக்கும் சூழலும், கல்வியும் தான் பெரும்பாலான ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிடைத்திருக்கிறது.
பெருநகரங்களில் கூட ஆதிக்கச்சாதியினர் மட்டுமே வாழக்கூடிய பகுதிகள் அல்லது தெருக்கள், கூட்டுக்குடியிருப்புகள் என இன்னும் தீண்டாமையின் வடிவம் மட்டும் மாறியிருக்கிறது. காலனியாதிக்க விடுதலைக்கு பின்னர் தீண்டாமையை வடிவம் மாற்றி இன்னும் அதிகமாக அமைப்புபடுத்தியிருக்கிறது. விடுதலைக்கு பின்னர் எப்படியான சமுதாயத்தை கட்டியெழுப்பவேண்டும் என்ற கேள்வி பெரும்பாலான மக்களிடம் கேட்கப்படாமலே சில ஆதிக்கசாதியினரின் நலன்கள் மட்டுமே தேசிய நலனாக பேணப்பட்டன. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு 'போனால் போகட்டும்' என சில சலுகை திட்டங்களை மட்டுமே வீசி எறிந்தது இந்திய ஒன்றியம். கல்வி, வேலை, நிலம் என அனைத்து விதமான சமூக உரிமைகளிலும் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையான விடுதலை கிடைக்காத சூழலில் சமூகநீதியை ஏற்படுத்தும் முயற்சியில் ஒரு அணுகுமுறையாக இடப்பங்கீடு கொள்கை அறிவியல் ஆய்வுகள் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது. சமூகநீதி என்ற பரந்துபட்ட வெளியை அடையும் முயற்சிக்கு இடப்பங்கீடு ஒரு முக்கியமான அணுகுமுறை திட்டம் மட்டுமே.
சமூகநீதி இல்லாமல் சமத்துவம் இல்லை. ஆதிக்கத்தின் உச்சிபீடத்தில் அமர்ந்து Youth for Equality என்ற ஆதிக்க நலன் காக்கும் அமைப்பை உருவாக்கி வைத்திருப்பவர்கள் தான் சமூகநீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிரிகள். ஐ.ஐ.டி போன்ற உயர்கல்வி நிலையங்களின் உச்சியில் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் கீழே கிடக்கும் ஒடுக்கப்பட்ட மக்களை பார்த்து 'எங்களுக்கு சமத்துவம் வேண்டும்', 'எங்களை பிரிக்காதீர்' 'எங்களை சாதி அடிப்படையில் பிளவுபடுத்தாதீர்' என கோருவது வெற்று கோசங்கள் மட்டுமே. அவர்களது நலனுக்கு மட்டுமே அவர்களால் போராட இயலும் மனப்பான்மையில் ஊறிய ஆதிக்க மனதிலிருந்து விடுபட்டாலொழிய சமநீதி பற்றி சிந்திக்க அவர்களால் இயலாது. சாதி அடிப்படையில் சமூகத்தை பிளவுபடுத்தும் அவர்களது மதம், வழிபாட்டுமுறை, தத்துவங்கள், நடைமுறைகள், அறிவிப்புகளை பற்றி Youth for Equality களம் அமைத்ததோ விவாதித்ததோ உண்டா? சமத்துவம் என்ற பெயரில் இடப்பங்கீடை எதிர்க்கும் இதே இளைஞர்கள் தான் சாதி ஆதிக்கம் போதிக்கும் மனு தர்மத்தை தூக்கிப்பிடிக்கும் குழந்தைகள். அரசியல் சட்டம் வழங்கிய சமூகநீதிக் கொள்கையை எதிர்த்து ஆதிக்கச்சாதி நலன்களை காக்க 1950களில் சென்னையின் பிராமணர் சங்கம் என முதல் சாதிச்சங்கம் உருவாக்கப்பட்டது. 2000 களில் பிற்படுத்தபட்ட மக்களின் இடப்பங்கீடு உரிமையை எதிர்க்க Youth for Equality என ஆதிக்கச்சாதி நலன் காக்கும் அமைப்பு உருவாகியிருக்கிறது. பெயர்களும், நபர்களும், சாதியினரும் வேறுப்பட்டிருந்தாலும் இந்த இரு முயற்சியின் பின்னால் இருக்கும் ஆதிக்க கருத்தியல் ஒன்று தான்.
இடப்பங்கீடு கொள்கை அமல்படுத்தப்படும் வரை ஆக்கிரமிப்பு செய்த கல்வி, பதவிகளால் சுழலாக ஆதிக்கச்சாதியினர் குடும்பங்களுக்கே நிர்வாக பதவிகள், பணிகள் அமைந்தன. அவர்களுக்கு தான் திறமை இருப்பது போன்ற மாயையை உருவாக்கியதும் இந்த ஆக்கிரமிப்பு தான். அதனால் தான் உயர்கல்வியில் இடப்பங்கீடு சட்டத்தை எதிர்க்க ஆதிக்கச்சாதி மாணவர்களால் Youth for Equality என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது. என்ன ஒரு முரண்பாடு சமத்துவத்திற்கு எதிரான வர்ணாஸ்ரம தர்மத்தையும் அதை கட்டிக்காக்கிற வழிப்பாட்டுமுறை, அமைப்புகளை எதிர்க்காமல் அதையே கடைபிடிக்கிற ஒரு அமைப்பிற்கு பெயர் 'சமத்துவத்திற்கான இளைஞர்கள்'!
இடப்பங்கீடு கொள்கையால் ஏற்பட்ட மாற்றங்களால் சில ஆண்டுகளாக தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் நிர்வாக பதவிகள் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. 'நான் இடப்பங்கீட்டில் பயன் பெற்றவன். ஆனால் இனி இடப்பங்கீடு அவசியமில்லை' என பரந்துபட்ட விழிப்புணர்வில்லாத ஓரிரு ஒடுக்கப்பட்ட இளைஞர்களது சுயநலத்தை இந்த எதிர்ப்பாளர்கள் பிரச்சாரத்திற்காக பயன்படுத்துகிறார்கள். தனக்கு கிடைத்த முன்னேற்றத்தால் சமூகத்தின் நிலையை உணராத தன்னலம் மட்டும் கொண்ட விதிவிலக்குகளான இந்த ஒரு சிலரை விட இன்னும் எந்த முன்னேற்றமும் இல்லாத பல கோடி பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனே முக்கியமானது.
தீண்டாமை பெருங்குற்றம், பாவச்செயல் என பாடபுத்தகங்களில் படிப்பதோடு நமது சமூக மாற்றம் நின்று விட்டது. படித்த பாடத்தை வைத்து அறிவுப்பூர்வமான விவாதங்களை மாணவ, இளைய தலைமுறையினரிடம் உருவாக்க நமது கல்வி முறை தவறியது. அதனால் தான் பகலில் தீண்டாமை பாவம், பெருங்குற்றம் என படித்து விட்டு மாலையில் 'அக்கிரகாரங்களிலும்','குடியிருப்புகளிலும்', 'சேரிகளிலும்' ஒதுங்க முடிகிறது. தப்பி தவறி ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம்களில் இடம் பிடித்துவிடுகிற ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சார்ந்த மாணவர்களையும் தங்களது ஆதிக்கமன வக்கிரங்களால் துரத்தியடிக்கிற இந்த காலிப்படை தான் இன்றைய 'உயர்கல்வி' நாயகர்கள். தீண்டாமையின் புதிய வடிவம் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் என உயர்கல்விநிலையங்களில் தொடர்கிற வக்கிர எண்ணமுடைய இளைய தலைமுறையை இந்தியா உருவாக்கியிருக்கிறது. சாதி ஆதிக்கத்தின் கொடுமைகளை அனுபவித்து ஐ.ஐ.டியில் கல்வியை தொடர இயலாத மாணவர்கள் அனுபவங்களால் மற்றவர்கள் சென்னை ஐ.ஐ.டியை விட சென்னை பல்கலைகழக்கத்தில் படிப்பதை தேர்ந்தெடுக்கின்றனர். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சார்ந்த பேராசிரியர்களே போராடி தான் தங்களது உரிமையை அடையக்கூடிய நிலைக்கு ஆதிக்கச்சாதியின் ஆக்கிரமிப்பு ஐ.ஐ.டியை இறுக்கி வைத்திருக்கிறது. தந்திரமான அணுகுமுறைகளால் ஆதிக்கச்சாதியினரின் அக்கிரகாரங்களாக செயல்படும் ஐ.ஐ.டிகளின் கதவுகள் எல்லோருக்கும் திறக்கப்பட வேண்டும். அதற்கான திறவுகோல் தான் இடப்பங்கீடு. ஆதிக்கச்சாதியினர் இடப்பங்கீடை எதிர்ப்பது அவர்களது சொந்த நலனுக்காக மட்டுமே. Youth for (in)Equality இடப்பங்கீடை எதிர்ப்பதில் எந்த சமூகநலனும் இல்லை.
'பிற்படுத்தப்பட்ட சாதியினருக்காக ஐ.டி.ஐ களும், பாலிடெக்னிக்களும், நர்சிங் படிப்புகளும் இருக்கிறது. ஆதிக்கச்சாதியினரின் 'தகுதிக்கு' ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், மருத்துவக்கல்லூரிகள் இருக்கின்றன.' அவரவரை அந்தந்த சாதி அடுக்குகளில் வைத்து அவரவருக்கு சொல்லப்பட்ட வேலைகளை கொடுப்பது தானே வர்ணாஸ்ரம தர்மம். மனுதர்மத்தின் இந்த விதிகளை மீறும் போது மனுதர்மத்தின் படி அதை எதிர்ப்பது ஆதிக்கச்சாதிகளின் கடமை தானே. பிற்படுத்தப்பட்டவனும் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், மருத்துவக்கல்லூரியில் நுழைய சட்டம் இயற்றினால் அதை எதிர்ப்பது தானே ஆதிக்கச்சாதியினருக்கு மனுதர்மம் வழங்கியிருக்கும் கடமை. ஆதிக்கச்சாதியினர் அமைப்பு ரீதியாக எதிர்ப்பை திரட்ட அவர்களது 'திறமைகளை', 'தகுதிகளை' பயன்படுத்துகிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களே உங்களது அமைப்புகளின் பதில் என்ன?
(தொடரும்)
இடப்பங்கீடு பற்றிய முந்தைய கட்டுரை சாதி அடிப்படையில் இடப்பங்கீடு ஏன்?
///இடப்பங்கீடு கொள்கை அமல்படுத்தப்படும் வரை ஆக்கிரமிப்பு செய்த கல்வி, பதவிகளால் சுழலாக ஆதிக்கச்சாதியினர் குடும்பங்களுக்கே நிர்வாக பதவிகள், பணிகள் அமைந்தன. அவர்களுக்கு தான் திறமை இருப்பது போன்ற மாயையை உருவாக்கியதும் இந்த ஆக்கிரமிப்பு தான்////
ReplyDeleteagree . 100 %
இடஒதுக்கீடு பற்றிய உங்களுடைய முந்தைய பதிவைவிட இந்த புதிய பதிவில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது. பாராட்டுக்கள். இடஒதுக்கீடு பற்றி ஒன்றும் தெரியாமலேயே அதை எதிர்பவர்கள் படிக்க வேண்டிய பதிவு.
ReplyDelete-பாலாஜி.